விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 11, 2008

கணிதத்தில் வரிசைமாற்றம் (Permutation), சேர்மானம் (Combination) என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து அவ்வரிசையை மாற்றி அமைத்தால் இம்மாறுதல் ஒரு வரிசைமாற்றம் அல்லது வரிசை மாற்றல் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். வரிசை என்ற கருத்தையே கொண்டு வராமல் கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும். இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர்.


கபடி அல்லது சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.


விவிலியம் (புனித வேதாகமம்), யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது புனித நூல்களாகும். விவிலியம் உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும் (சில பொதுவான பகுதிகளும் உண்டு). இவ்விருபாலருமே விவிலியத்தை தங்கள் கடவுளது புனிதச் சொல்லாக நம்புகின்றனர். இக்கட்டுரை கிறிஸ்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.