விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 17, 2008
அரியானா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, IPA: [hərɪjaːɳaː]) ஒரு வட இந்திய மாநிலம். அரியானா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியானா 1966ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியானா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியானாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திருந்துகொண்டிருக்கும்.
வடிவவியலில் பிரெஞ்ச்சு அறிஞர் ரெனே டேக்கார்ட் அவர்களின் பெயரில் வழங்கும் டேக்கார்ட்டின் தேற்றம் என்பது ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு நான்கு வட்டங்களின் உறவைப் பற்றியது. இவற்றை முத்தமிடும் நான்கு வட்டங்கள் என்று கூறுவதுண்டு. ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு மூன்று வட்டங்கள் இருந்தால், மூன்று வட்டங்களையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு நான்காவது வட்டத்தை வரைய இத்தேற்றத்தைப் பயன்படுத்தலாம்.