விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 18, 2013

நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் உலகின் மிக நீளமான ஆறு ஆகும். 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கின்றது. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும். நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின. மேலும்...


கணிதத்தில், நேரியல் சமன்பாடுகளின் தொகுதி அல்லது ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதி என்பது, மாறிகளையும் மாறிகளின் எண்ணிக்கையையும் சமமாகக் கொண்ட ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுப்பாகும். கணிதத்தில் ஒருபடிய அமைப்புகள் அல்லது ஒருங்கியங்கள், என்பன தற்காலக் கணிதத்தின் அடிப்படைத் துறைகளில் ஒன்றான நேரியல் இயற்கணிதத்தின் ஒரு பிரிவாகும். ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதியின் தீர்வு அத்தொகுதியில் உள்ள அனைத்துச் சமன்பாடுகளையும் நிறைவு செய்யும் வகையில் அமையும் x1, x2, ..., xn என்ற மாறிகளின் மதிப்பாகும். அவ்வாறு அமையும் தீர்வுகளைக் கொண்ட கணம் அத்தொகுதியின் தீர்வுகணம் எனப்படும். ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதி, பின்வரும் மூன்று விதங்களுள் ஒன்றாக அமையும்: முடிவிலாத் தீர்வுகளைக் கொண்டது, ஒரேயொரு தனித்தீர்வு கொண்டது, தீர்வே இல்லாதது. மேலும்...