விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2013
மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்லடிப் பாலத்திலிருந்து ஒலியற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப்படுகின்றது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது. மேலும்...
பண்டையத் தமிழர் அளவை முறைகள் மிகவும் ஆய்ந்து நோக்கத்தக்கவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று சிலரும் சிறந்த அளவை முறைகளைப் பயன்படுத்தினர் என்றும் பல ஆய்வாவாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாவாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளியினாலான உழக்குகளும் படி என்ற அளவைக்கருவியும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. மேலும்...