விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 22, 2012

மீன் பிடித்தல் என்பது மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது ஆகும். மீனவர்கள் இதைத் தொழிலாகவும் மற்றவர்கள் சிலர் இதைப் பொழுதுபோக்காகவும் செய்கின்றனர். இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர். இந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன்கள் கிடைக்கின்றன. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும். பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டில் இருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும்...


1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பானுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இன்றுவரை, இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையின்படி, இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. "அணுகுண்டை சப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். அமெரிக்கா பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது" என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது. மேலும்...