விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 30, 2013

வில்லியம் தாம்சன் (1824-1907) அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தவர். வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவ பரிந்துரைத்து ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்க்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு கெல்வின் பிரபு எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது. தொடக்கத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. மேலும்...


திணிவு மையம் அல்லது வடிவுசார் மையம் அல்லது ஈர்ப்பு மையம் என்பது, அவ்வடிவத்தை சம விலக்களவு கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கும் கோடுகள் அனைத்தும் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். வடிவவியலில் திணிவு மையம் என்பது ஒரு தளவுருவத்தின் இருபரிமாண வடிவம் ஆகும். சாதாரணமாக, திணிவு மையத்தை X -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் சராசரியாகக் கருதலாம். திணிவு மையத்தின் இந்த இருபரிமாண வரையறையை n -பரிமாணத்திற்கும் நீட்டிக்கலாம். n -பரிமாணத்திலுள்ள ஒரு பொருள் X -ன் திணிவுமையம் என்பது, அதனை சம விலக்களவு கொண்ட இரு பாகங்களாகப் பிரிக்கும் மீத்தளங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். இயற்பியலில், திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது நிறை மையம் அல்லது புவியீர்ப்பு மையத்தையும் குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை அடர்த்தி அல்லது தன்எடைகளால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும். மேலும்...