விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 9, 2013

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்பது 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஆகும். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர். அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார். பேராக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் மாநில முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடினின் கோரிக்கையை, பேராக் சுல்தான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது. தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். நிஜார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே ஒரு நீதிமன்ற போரே நடைபெற்றது. இறுதியில், 2010 பிப்ரவரி மாதம், சாம்ரி அப்துல் காதிர்தான் சட்டப்படியான முதலமைச்சர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. மேலும்...


சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் 'கனகசவுந்தரி' என்பது ஆகும். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் திசம்பர் 221933 ஆம் நாள் வணிகர் வே. சங்கரலிங்கம் – சிவகாமி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகளாவும் மூன்றாவது மகவாகவும் கனகசவுந்தரி பிறந்தார். கனகசவுந்தரி தந்தை வே. சங்கரலிங்கம் மும்பை நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் மேலாளராகச் சிறிதுகாலமும் மதுரையில் இரண்டு ஆண்டுகளும் வாழ்ந்தார். எனவே கனகசவுந்தரி தனது எட்டாம் வயது வரை மும்பையிலும் பத்தாம் வயது வரை மதுரையிலும் வாழ்ந்தார். பின்னர் இவரது குடும்பம் விருதுநகருக்குத் திரும்பி அவ்வூரின் தெற்குத் தேர் வீதியில் குடியேறியது. இதனால் இவர் தனது 16ஆம் வயது வரை விருதுநகரில் வாழ்ந்தார். கனக சவுந்தரி தனது தொடக்கக் கல்வியை மும்பை நகரில் பெற்றார். இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கினார். அப்பொழுது அக்கல்லூரியின் தமிழ்மன்றத்தின் செயலாளராக 1950 – 51ஆம் கல்வியாண்டிலும் தலைவராக 1951 – 52 ஆம் கல்வியாண்டிலும் பணியாற்றினார். மேலும்...