விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 15, 2006

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும், அச் சமுதாயத்தின், உலக நோக்கு, பண்பாடு, அதன் வரலாறு சார்ந்த பல அம்சங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலே, யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.


இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப்பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக்கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்ககூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.