விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 13, 2011

பசுபதிநாத் கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோயில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கானதாகும். 17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாத் நேபாளம் மதசார்பற்ற நாடாக மாறும் வரை அதன் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேபாளத்திலும் இந்தியாவிலும் பிறக்காத எவரும் கோவில் நிர்வாகத்தால் இந்து எனக் கருதப்படுவதில்லை. இந்து அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கருநாடகத்தைச் சேர்ந்த சிமோகா மாவட்டத்திலிருந்து மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி ஏற்பட்ட பின்னர் இந்நடைமுறை மாற்றம் கண்டது. நேபாள பூசாரிகள் மாவோயிச அரசினால் ஆதரிக்கப்பட்டனர். மேலும்..


மு. கா. சித்திலெப்பை (1838-1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். அசன்பே சரித்திரம் என்ற ஈழத்தின் முதலாவது தமிழ் புதினத்தை எழுதியவர். ஈழ இசுலாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார். அறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். சர் சயேத் அகமது கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். இசுலாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது. 1884 ஆம் ஆண்டில் கொழும்பில் முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான சித்திலெப்பை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும்..