விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 03, 2010

விருத்த சேதனம் அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது, ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப்படுகின்றது. பெரும்பாலும் மத மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30% ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுகின்றது. வட கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடிகளிடம்தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து இதனை (படம்) அறியலாம்.இதன் பின் ஆபிரகாமிய மதங்களான யூதம், கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றில் புனித சடங்குகளாக இவை நடைமுறைப்படுத்தப் பட்டன. விருத்த சேதனம் பால்வினை நோய்கள், ஆண்குறி புற்றுநோய், பெண் துணையின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் எயிட்சு தாக்கப்படுவதற்கான இடரும் இதன் மூலம் சிறிது குறைவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்கம், இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.மனித இனத்தின் பிரபல விளையாட்டுக்களில் ஒன்றான சதுரங்கம் ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட கருதப்படுவதுண்டு. சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், கழகங்களிலும், சுற்றுப்போட்டிகளிலும், இணையத்திலும், தபால் மூலமும்கூட விளையாடப்படுகின்றது. அதனுடன் தொடர்புடைய விளையாட்டுக்களான சீனாவின் ஷியாங்கி, ஜப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பனவும் புகழ் வாய்ந்தவை.