கிறிஸ்தவம்

நாசரேத்து இயேசுவின் வாழ்வு மற்றும் போதனைகளின் அடிப்படையில் அமைந்த ஆபிரகாமிய ஓரிறைவாத மதம்
(கிருத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது.

கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, Christos; מָשִׁיחַ, Māšîăḥ -Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 31.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது.

கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

நம்பிக்கை

 
மலைப்பொழிவு - கார்ல் எயின்ரிச் பிளோக்,டேனிஷ் ஓவியர், 1890 ஆண்டு ஓவியம்

பல பிரிவுகளாக உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சமயத்தின் முக்கிய அங்கமாக சில நம்பிக்கைகளை ஏற்கின்றனர். அந்நம்பிக்கைகளின் அடிப்படை, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற விவிலியத்தில் உள்ளதாக அவர்கள் கொண்டாலும், விவிலியத்தைப் புரிதலில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டு.[2]

நம்பிக்கை அறிக்கைகள்

சமய நம்பிக்கைகளைக் குறித்த சுருக்கமான கொள்கைசார் அறிக்கைகள் அல்லது வாக்குமூலங்கள் நம்பிக்கை அறிக்கைகள் எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் கிரீட்சு (creeds) எனப்படும் இவை "நான் நம்புகிறேன்" என்று பொருள்தரும் இலத்தீன மொழி வேர்ச்சொல்லான கிரெடொ, (credo) விலிருந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கை அறிக்கைகள் முதலில் கிறிஸ்தவத்தில் புதிதாகப் புகுந்தோர் அறிக்கையிட வேண்டிய உரைக்கூற்றுகளாகத் தோன்றின. பின்னர் 4வது, 5வது நூற்றாண்டுகளில் எழுந்த இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய சர்ச்சைகளின்போது விரிவாக்கப்பட்டு நம்பிக்கை அறிக்கைகளாக உருவாகின.

பல சீர்திருத்தத் திருச்சபை சார்ந்தவர்கள் நம்பிக்கை அறிக்கைகளின் சில அல்லது பெரும்பகுதியுடன் உடன்பட்டாலும் முழுமையாக ஏற்பதில்லை. பாப்டிசுட்டுக்கள் "நிகழ்வுகளை உறுதிப்படுத்த ஆதாரபூர்வ வாக்குமூலங்களாக எடுத்துக்கொள்வதற்காக நம்பிக்கை அறிக்கைகள் வழங்கப்படவில்லை" எனக் கருதுகின்றனர்.[3]:ப.111 கிறிஸ்து திருச்சபை, கனடாவின் சீர்திருத்த கிறிஸ்தவத் திருச்சபை போன்ற மறுசீரமைப்பு இயக்கங்கள் நம்பிக்கை அறிக்கைகளை ஏற்பதில்லை.[4][5]:14–15[6]:123

நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன:

ஆரியசிற்கு எதிர்வினையாக 325 இல் நைசியாவிலும் 381 இல் கான்ஸ்டான்டிநோபிளிலும் கூடிய மன்றங்கள் நைசின் விசுவாச அறிக்கையை உருவாக்கின. இயேசு கிறிஸ்துவை ஆரியசு தந்தையாம் கடவுளுக்குக் கீழ்ப்பட்டவராகவும், கடவுளின் (தலைசிறந்த) படைப்பாகவும் மட்டும் பார்த்தாரே ஒழிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளுக்கு நிகரானவராகக் கருதவில்லை. எனவே இயேசு யார் என்பதை உறுதியாக வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது.[7][8] 431 இல் எபெசுசில் கூடிய முதல் மன்றம் நைசீன் நம்பிக்கை அறிக்கையை ஏற்று அதை மேலும் உறுதியாக்கியது.[9]

கால்செதோன் வரையறை அல்லது கால்செதோன் அறிக்கை 451 இல் உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையும் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் துல்லியமாக வரையறுக்கும் வகையில் அமைந்தது. விவிலியத்தின் அடிப்படையில் “இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளாகவும் உண்மையாகவே மனிதருமாக இருக்கிறார்” என்பதே கால்செதோன் வரையறையின் மையம்.[10] இதனை கிழக்கத்திய மரபுவழி திருச்சபையினர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கொள்கைப்படி, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரே இயல்புதான் உண்டு. அந்த ஒரே இயல்பில் அவருடைய இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் அடங்கியுள்ளன.[11] கால்செதோன் வரையறைப்படி, “இயேசு கிறிஸ்து உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும் ஆவார். கடவுளின் வார்த்தையான அவரில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் "குழப்பமின்றி, மாற்றமின்றி, பிளவின்றி, பிரிக்கமுடியாததாக (”without confusion, change, division or separation”) உள்ளன. ஒரே ஆளில் இரு தன்மைகளும் உள்ளன.[12]

மேற்கத்திய திருச்சபையில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அறிக்கையின் பெயர் ”அத்தனாசியுசு நம்பிக்கை அறிக்கை” (Athanasian Creed). புனித அத்தனாசியுசு என்பவரால் தொகுக்கப்பட்டதாக (தவறாக) கருதப்பட்ட இந்த அறிக்கை நைசின் மற்றும் கால்செதோனிய அறிக்கைகளுக்கு இணையானது; நம்பிக்கை அறிக்கையில் கூறப்பட்டவற்றை ஏற்காதோர் திருச்சபையின் உறவிலிருந்து பிரிந்தோர் ஆவர் என்னும் குறிப்பு இந்த நம்பிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மூவொரு கடவுள் கொள்கை இந்த அறிக்கையில் விளக்கமாகக் கூறப்படுகிறது: "நாங்கள் மூவொரு கடவுளை வழிபடுகிறோம். மும்மையில் ஒருமை, ஒருமையில் மும்மை. மூன்று ஆள்களை ஒருவரோடொருவர் குழப்புவதில்லை; ஒரே பொருளான அவர்களைப் பிரிப்பதுமில்லை.” [13]

பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அதாவது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுசபை, ஓரியண்டல் மரபுசபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றின் உறுப்பினர், கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகைகளை உள்ளடக்கிய “நம்பிக்கை அறிக்கைகளை” ஏற்றுக்கொள்கின்றனர்; தொடக்ககாலத் திருச்சபையில் உருவான ஒரு நம்பிக்கை அறிக்கையையாவது ஏற்றுக்கொள்கின்றனர்.[14]

பத்துக் கட்டளைகள்

பத்துக் கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரைத் தொகுப்புகளுள் முதன்மையானது; இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் மைய இடம் பெறுகிறது. பத்துக் கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள், இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக்கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தின் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.

கட்டளை 1: உண்மையான கடவுளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
2. ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது
3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடி

4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட
5. கொலை செய்யாதே
6. விபசாரம் செய்யாதே
7. களவு செய்யாதே
8. பொய்ச்சான்று சொல்லாதே
9. பிறர் மனைவியை விரும்பாதே
10. பிறர் உடைமையை விரும்பாதே.

மேற்கூறிய பத்துக் கட்டளைகளயும் வரிசைப்படுத்துவதில் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உண்டு. நற்செய்திகளின்படி, கிறிஸ்து இச்சட்டங்களை இரண்டு முதன்மைக் கட்டளைகளுக்குள் அடக்குகிறார். அவை:

1) மனிதர் கடவுளைத் தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும்.
2) மனிதர் தம்மைத் தாமே அன்புசெய்வதுபோல பிறரையும் அன்புசெய்ய வேண்டும்.
(காண்க: மாற்கு 12:28-31; மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28).

இயேசு கிறிஸ்து

 
இயேசுவின் பல்வேறு சித்தரிப்புகள்

இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறிஸ்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவுள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

மெசியா குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூதர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கி, அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையும் முடிவில்லா நிலைவாழ்வையும் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவரின் நம்பிக்கை.[15]

கிறிஸ்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவுளின் அவதாரமாகவும் "உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையும் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையும் ஆசைகளையும் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையும் (பாவம்) செய்யவில்லை. கடவுளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, "கடவுள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்",[16] அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார்";[17] மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பிActs 1:9–11 இறந்தோரை உயிர்ப்பிப்பது, கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவுதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார்.

வழிபாடு

 
கத்தோலிக்க சமயப் பொருட்களின் காட்டுக்கள்— விவிலியம், திருச்சிலுவை, கத்தோலிக்க செபமாலை.

2வது நூற்றாண்டின் கிறிஸ்தவ பொதுயிட வழிபாட்டைக் குறித்து ஜஸ்டின் மார்டையர் பேரரசர் அன்டோனியசு பையசுக்கு வழங்கிய முதல் மன்னிப்புக் கோரல் உரையில் கூறியுள்ளது இன்னமும் பொருந்துகின்றது. அதன்படி

இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறன்று நகரத்திலுள்ள அல்லது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்று கூடி ஏசுவின் சீடர்கள் அல்லது தேவதூதர்களின் நினைவுக்குறிப்புக்களையும் போதனைகளையும் படிக்கக் கேட்கின்றனர்;படித்து முடித்த பிறகு கூட்டத்தலைவர் கேட்டோர் அனைவரையும் கேட்ட நல்ல விழுமியங்களை கடைபிடிக்கக் கோருகின்றார்; பிறகு அனைவரும் எழுந்து தொழுகின்றனர்; தொழுது முடிந்த பின்னர் ரொட்டி, வைன், நீர் கொணரப்படுகின்றது; கூட்டத்தலைவர் மற்றவர்களைப் போலவே தொழுது நன்றி நவில்கிறார்; அவரது நன்றி நவில்கையை ஏற்று அனைவரும் ஆமென் எனக் கூறி ஒப்புமை வழங்குகின்றனர்; நன்றி கூறப்பட்டப் பொருட்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது; வராதவர்களுக்கும் உதவிக்குருமார்களால் அனுப்பப்படுகின்றது; செல்வம் படைத்த, விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு இயன்றத் தொகையை தலைவருக்கு அளிக்கின்றனர்; இதனைக் கொண்டு அனாதைகள்,விதவைகள்,உடல்நலிந்தோர் மற்றும் உதவித் தேவைப்படுபவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்கின்றார்

— ஜஸ்டின் மார்டையர்[18]

ஜஸ்டின் கூறியவாறே, கிறிஸ்தவர்கள் ஞாயிறன்று கூட்டு வழிபாட்டிற்காக கூடுகின்றனர்; இதற்கு வெளியேயும் வழிபாடுகள் நடத்தப்படுவதுண்டு. பழைய, புதிய ஏற்பாடுகளிலிருந்து சில பகுதிகள், குறிப்பாக நற்செய்தி விவரங்கள், தொகுக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவை வருடாந்திர சுழற்சியில் வருமாறு லெக்சனரி என்ற நூலாக தொகுக்கப்படுகின்றது. இவற்றிலிருந்து வழிகாட்டும் விரிவுரை, செர்மன், வழங்கப்படுகின்றது. கூட்டு விழிபாட்டின்போது பல வகையான கூட்டு செபங்கள் நடத்தப்படுகின்றன: நன்றி அறிவித்தல், ஒப்புகை, துன்புற்றோருக்காக இரங்கல் ஆகியன; மேலும் வேண்டுதல்கள் ஓதியோ, எதிர்வினை ஆற்றியோ, மவுனமாயிருந்தோ பாடியோ வெளிப்படுத்தப்படும். அடிக்கடி கிறிஸ்து கற்பித்த செபம் நடத்தப்படுகின்றது.

 
தற்காலத்தில் வழிபாட்டு அமர்வொன்றில் சீர்திருத்தத் திருசபையினரின் வழிபாட்டு இசைக்குழு.

சிலக் குழுக்கள் இந்த வழமையான திருச்சபை கட்டமைப்புக்களிலிருந்து மாறுபடுகின்றனர். பெரும் முறையொழுங்கு, சடங்குகளைப் பேணும் "உயர் திருச்சபை" என்றும் "தாழ்ந்த திருச்சபை" என்றும் சேவைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றினுள்ளும் வழிபாட்டு வடிவங்களில் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. ஏழாம் நாள் வருகை சபையோர் சனிக்கிழமை கூடுகின்றனர்; வேறுசிலர் வாரமொருமுறை கூடுவதில்லை. பெந்தகோஸ்து சபை இயக்கம் போன்றவற்றில் திருக்கூட்டங்கள் தூய ஆவியினால் தன்னிச்சையாகத் தூண்டப்பட்டு நடத்தப்படுகின்றன; முறையான நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் வரையறுப்பதில்லை. நண்பர்களின் சமய சமூகத்தில் தூய ஆவியால் பேசத் தூண்டப்படும்வரை அமைதியாக உள்ளனர்.

சில சீர்திருத்தச் சபை அல்லது லூத்தரன் சேவைகள் நடனம், பல்லூடகங்களுடன் ராக், பாப் இசைக்கச்சேரிகளைப் போல அமைகின்றன. பாதிரிமார்களுக்கும் வழமையான நம்பிக்கையாளர்களுக்கும் வேறுபாடில்லாத குழுக்களில் வழிபாட்டுக் கூட்டங்களை மினிஸ்டர் அல்லது ஆசிரியர் அல்லது பேஸ்டர் நடத்துகின்றனர். மேலும் சிலருக்கு தலைமையாளர்கள் எவருமில்லாதிருப்பர். சில திருச்சபைகளில், மரபுப்படியோ கொள்கைப்படியோ, இசைக்கருவிகளில்லாத தனித்துவமான இசை (அ கேப்பெல்லா) பயன்படுத்தப்படுகின்றது.

திருவருட் சாதனங்கள்

"கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இறை வாழ்வில் நமக்குப் பங்களிக்கும் பயன்மிகு அருளின் அடையாளங்கள் ஆகும். வெளிப்படையாக கொண்டாடப்படும் அருட்சாதன வழிபாடுகள், அருட்சாதனங்கள் வழியாக வழங்கப்படும் அருளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அருட்சாதனங்களைப் பெறுவோரின் விருப்பத்துக்கு ஏற்ப, அவை அவர்களில் கனி தருகின்றன."[19] மூன்று புகுமுக அருட்சாதனங்கள், இரண்டு குணமளிக்கும் அருட்சாதனங்கள், இரண்டு பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என மொத்தம் ஏழு அருள்சாதனங்கள் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படுகின்றன. சாக்ரமென்ட் என அழைக்கப்படும் இச்சொல் இலத்தீனிய வேரான சாக்ரமென்டம் என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு மர்மம் எனப் பொருள் கொள்ளலாம். எந்தச் சடங்குகள் திருவருட் சாதனங்கள் என்பதிலும் எந்த செயல்கள் திருவருட்சாதனமாக கருதப்படலாம் என்பதிலும் கிறிஸ்தவப் பிரிவுகளும் மரபுகளும் வேறுபடுகின்றன.[20]

மிகவும் மரபார்ந்த வரையறையின்படி உட்புற அருளை வழங்கும் இயேசுவினால் நிறுவப்பட்ட வெளிப்புறச் சின்னமே திருவருட்சாதனமாகும். மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இரு திருவருட்சாதனங்கள் திருமுழுக்கும் நற்கருணையும் ஆகும். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் மேலும் ஐந்து திருவருட்சாதனங்களை அங்கீகரித்துள்ளனர்: உறுதி பூசுதல் ( மரபுவழி வழமையில் கிறிஸ்துவாக்கம்), குருத்துவம், ஒப்புரவு, நோயில் பூசுதல், திருமணம்.[20]

உட்பிரிவுகள்

கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது. இவை இடத்துக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி வேறுபடும் சமயக் கோட்பாடுகளை(doctrine) கொண்டுள்ளன. 2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. சீர்த்திருத்தத்துக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாகப் பிரிந்ததாக கொள்ளப்படுகிறது.

 
கிறிஸ்தவ வரலாறு

உரோமன் கத்தோலிக்கம்

 
திருத்தந்தை பிரான்சிசு, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்கத் திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1.2 பில்லியன் திருமுழுக்கு பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.

கிழக்கு கிறிஸ்தவம்

இது கிழக்குப்பகுதி (ஒரியன்டல்) மரபுவழி, கிழக்கு ஆசிறியன், கிழக்கு மரபுவழி (மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.

சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம்

இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன், லூதரன், Reformed, ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists, பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தங்களை கிறிஸ்தவரென்றோ மீளப் பிறந்த கிறிஸ்தவரென்றோ அழைக்கின்றனர். அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன.

ஆங்கிலிக்கம்

ஆங்கிலிக்கம் என்பது கிறிஸ்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் என்னப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதின் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பைப் பின் தொடருகின்றன.

மக்கள்தொகையியல்

நாட்டு மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் 50% க்கும் கூடுதலாக உள்ள நாடுகள் ஊதா நிறத்திலும் 10% முதல் 50 % வரையுள்ள நாடுகள் இளஞ்சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன.
கிறிஸ்தவத்தைத் தங்கள் நாட்டுச் சமயமாக அறிவித்துள்ள நாடுகள்:
உலகளவில் கிறிஸ்தவர்களின் பரம்பல். அடர் வண்ணமிடப்பட்டவை கூடுதல் வீதத்தில் கிறிஸ்தவர்களைக் கொண்டவையாகும்.[21]

ஏறத்தாழ 2.4 பில்லியன் பின்பற்றுவோரை,[22][23][24][25] கத்தோலிக்கம், சீர்திருத்தத் திருச்சபை, ஓர்த்தொடாக்சு என்ற 3 முதன்மைப் பிரிவுகளில் கொண்டுள்ள கிறிஸ்தவம் உலகின் மிகப் பெரும் சமயமாகும்.[26][27] கடந்த 100 ஆண்டுகளாக உலக மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 33% ஆக உள்ளனர்; அதாவது புவியில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவராவார். ஆனால் இப்பரம்பலில் ஓர் பெரும் மாற்றம் மறைந்துள்ளது; வளரும் நாடுகளில் உயர்ந்து வருகையில் (ஏறத்தாழ நாளுக்கு 23,000 பேர்) வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், குறைந்து வருகின்றது (ஏறத்தாழ நாளுக்கு 7,600 பேர்).[28]

ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் தெற்கு ஆபிரிக்காவில் கிறிஸ்தவம் இன்னமும் முதன்மையான சமயமாக உள்ளது. ஆசியாவில் சியார்சியா, ஆர்மீனியா, கிழக்குத் திமோர், பிலிப்பீன்சு நாடுகளில் முதன்மையான சமயமாக உள்ளது. இருப்பினும், இது வடக்கு அமெரிக்கா, மேற்கு அமெரிக்கா[29] ஓசியானா (ஆத்திரேலியா, நியூசிலாந்து), பெரும் பிரித்தானியா உள்ளிட்ட வடக்கு ஐரோப்பா,[30] எசுக்காண்டினாவியா), பிரான்சு, செருமனி, கனடிய மாநிலங்களான ஒன்ராறியோ, பிரிட்டிசு கொலம்பியா, கியூபெக், ஆசியாவின் பகுதிகளான (குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் -மதமாற்றங்களினால்),[31][32][33] தென்கொரியா,[34] சீனக் குடியரசு,[35] மக்காவு[36]) உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்து வருகின்றது.

உசாத்துணை

  1. Monotheism"; William F. Albright, From the Stone Age to Christianity
  2. Olson, The Mosaic of Christian Belief
  3. Avis, Paul (2002) The Christian Church: An Introduction to the Major Traditions, SPCK, London, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-281-05246-8 paperback
  4. White, Howard A. The History of the Church பரணிடப்பட்டது 2015-02-09 at the வந்தவழி இயந்திரம்.
  5. Cummins, Duane D. (1991). A handbook for Today's Disciples in the Christian Church (Disciples of Christ) (Revised ed.). St Louis, MO: Chalice Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8272-1425-1.
  6. Ron Rhodes, The Complete Guide to Christian Denominations, Harvest House Publishers, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7369-1289-4
  7. ""We Believe in One God….": The Nicene Creed and Mass". Catholics United for the Fath. February 2005. பார்க்கப்பட்ட நாள் 16 June 2014. {{cite web}}: Unknown parameter |registration= ignored (help)
  8. Encyclopedia of Religion, "Arianism".
  9. Catholic Encyclopedia, "Council of Ephesus"
  10. Christian History Institute, First Meeting of the Council of Chalcedon
  11. Peter Theodore Farrington (February 2006). "The Oriental Orthodox Rejection of Chalcedon". Glastonbury Review (The British Orthodox Church) (113) இம் மூலத்தில் இருந்து 19 June 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080619122112/http://www.britishorthodox.org/113e.php. 
  12. Pope Leo I, Letter to Flavian
  13. Catholic Encyclopedia, "Athanasian Creed".
  14. "Our Common Heritage as Christians". The United Methodist Church. Archived from the original on 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
  15. Metzger/Coogan, Oxford Companion to the Bible, pp. 513, 649.
  16. Acts 2:24, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, வார்ப்புரு:Bibleref2-nb, Romans 10:9, 1 Cor. 15:15, வார்ப்புரு:Bibleref2-nb, 2 Cor. 4:14, Gal 1:1, Eph 1:20, Col 2:12, 1 Thess. 11:10, Heb. 13:20, 1 Pet. 1:3, வார்ப்புரு:Bibleref2-nb
  17. "Nicene Creed—Wikisource". En.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
  18. Justin Martyr, First Apology §LXVII
  19. Catechism of the Catholic Church, 1131
  20. 20.0 20.1 Cross/Livingstone. The Oxford Dictionary of the Christian Church. p. 1435f.
  21. ANALYSIS (2011-12-19). "Table: Religious Composition by Country, in Percentages". Pewforum.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  22. 33.39% of 7.174 billion world population (under the section "People and Society") "World". CIA world facts. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
  23. "The List: The World's Fastest-Growing Religions". foreignpolicy.com. March 2007. Archived from the original on 2007-05-21. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
  24. "Major Religions Ranked by Size". Adherents.com. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
  25. ANALYSIS (2011-12-19). "Global Christianity". Pewforum.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  26. "Major Religions Ranked by Size". Adherents. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
  27. Britannica Book of the Year 2014
  28. Werner Ustorf. "A missiological postscript", in McLeod and Ustorf (eds), The Decline of Christendom in (Western) Europe, 1750–2000, (கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2003) pp. 219–20.
  29. ARIS 2008 Report: Part IA – Belonging. "American Religious Identification Survey 2008". B27.cc.trincoll.edu. Archived from the original on 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  30. "New UK opinion poll shows continuing collapse of 'Christendom'". Ekklesia.co.uk. 2006-12-23. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.
  31. Barrett/Kurian.World Christian Encyclopedia, p. 139 (Britain), 281 (France), 299 (Germany).
  32. "Christians in the Middle East". BBC News. 2005-12-15. http://news.bbc.co.uk/2/hi/middle_east/4499668.stm. பார்த்த நாள்: 2010-11-19. 
  33. Katz, Gregory (2006-12-25). "Is Christianity dying in the birthplace of Jesus?". Chron.com. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.
  34. "Number of Christians among young Koreans decreases by 5% per year". Omf.org. Archived from the original on 2009-02-26. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.
  35. "Christianity fading in Taiwan | American Buddhist Net". Americanbuddhist.net. 2007-11-10. Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
  36. Greenlees, Donald (2007-12-26). "A Gambling-Fueled Boom Adds to a Church's Bane". Macao: Nytimes.com. http://www.nytimes.com/2007/12/26/world/asia/26macao.html?_r=1&oref=slogin. பார்த்த நாள்: 2011-06-30. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தவம்&oldid=3581319" இலிருந்து மீள்விக்கப்பட்டது