கிறித்தவத்தில் இறையரசு அல்லது இறையாட்சி (Kingship and kingdom of God) என்பது கடவுளின் ஆட்சியைக் குறிக்க விவிலியத்தில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இதை விண்ணக இறைவனின் அரசு என்ற பொருளில் விண்ணரசு என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. விண்ணகம் வாழும் கடவுளின் அரசு, இந்த மண்ணகத்தில் மலர வேண்டும் என்பதே கிறிஸ்தவர்களின் எதிர்நோக்கு. கடவுளின் திருவுளப்படி செயல்படுவோரே இறையாட்சியில் பங்குபெறுவர்[1] என்று இயேசு கற்பித்திருக்கிறார்.

கடவுளின் ஆட்சி

தொகு

கடவுளின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள், ஆபிரகாமிய சமயங்களான யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் மறைநூல்களில் காணப்படுகின்றன. யூதர்களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர்; அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, இஸ்ரயேலர் கடவுளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். பிற இனத்தாரின் வழக்கத்தைக் கண்டு, தங்களுக்கும் ஒரு அரசர் வேண்டுமென்று அவர்கள் விரும்பியபோது, இறைவாக்கினர் சாமுவேல் வழியாக சவுலை இஸ்ரயேலின் முதல் அரசராக அருட்பொழிவு செய்தார். ஆனால் இஸ்ரயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறி செயல்பட்டதால், அவர்களின் அரசுகள் வீழ்ச்சியை சந்தித்தன. எனவே, மக்கள் மீண்டும் கடவுளின் அரசை எதிர்பார்த்து காத்திருந்தனர். வரவிருக்கும் கடவுளின் அரசை இஸ்ரயேலின் இறைவாக்கினர் முன்னறிவித்தனர்.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடவுள் தமது அரசை உலகெங்கும் நிறுவ தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.[2] தந்தை கடவுளின் மகனாகிய இயேசு இந்த உலகிற்கு வந்து, இஸ்ரயேல் மக்களின் நடுவில் இறையாட்சியின் மதிப்பீடுகளை கற்பித்தார். தனது திருத்தூதர்களின் வழியாக இறையரசின் இயக்கமாக திருச்சபையை நிறுவினார். அவர் மீண்டும் வருமளவும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றி இறையரசைக் கட்டியெழுப்புவது திருச்சபையின் பணியாகும். உலகின் முடிவில் அரச மகிமையில் இயேசு திரும்பி வந்து, தனது அரசைத் தந்தையாம் கடவுளிடம் ஒப்படைப்பார். அப்போது புதிய விண்ணகமும், புதிய மண்ணகமும் தோன்றும்;[3] கடவுள் மனிதரிடையே தங்கி ஆட்சி செய்வார்.[4]

யூதர்களின் நம்பிக்கை

தொகு

கடவுளின் நிலையான ஆட்சி பற்றி பழைய ஏற்பாட்டின் பலப் பகுதிகள் பின்வருமாறு விவரிக்கின்றன:

  • தோபித்து நூல்: "என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை."[5]
  • யோபு நூல்: "ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்."[6]
  • திருப்பாடல்கள் நூல்: "அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்."[7] "இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்."[8] "ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது."[9]

கடவுளின் வரவிருக்கும் அரசைப் பற்றி, பழைய ஏற்பாட்டில் காணப்படும் செய்திகள் பின்வருமாறு:

  • எசாயா நூல்: "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்" [10]
  • தானியேல் நூல்: "விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்." [11] "வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது." [12]

கிறிஸ்தவ நம்பிக்கை

தொகு

கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட மறைநூலான புதிய ஏற்பாடு கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி இயேசுவின் காலத்திலேயே வந்துவிட்டது[13] என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கடவுளின் வழிகளில் இருந்து விலகி, இறைமகனைப் புறக்கணித்த இஸ்ரயேலரிடம் இருந்து இறையாட்சி பறிக்கப்பட்டு, கடவுளுக்கு உண்மையாக நடக்கும் வேறொரு மக்கள் இனத்திடம் இறையாட்சி ஒப்படைக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்.[14] அவ்வாறே அது கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, திருச்சபை இறையரசின் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:

  • லூக்கா நற்செய்தி: "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்."[15]
  • உரோமையர்: "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்."[16]
  • 1 கொரிந்தியர்: "தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை."[17]
  • 1 கொரிந்தியர்: "ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்."[18]

இயேசுவின் வருகையைக் குறித்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பின்வருமாறு:

  • மத்தேயு நற்செய்தி: "துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும். பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்."[19]
  • திருவெளிப்பாடு: "இதோ! இயேசு மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!"[20]

ஆதாரங்கள்

தொகு
  1. மத்தேயு 7:21 "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்"
  2. லூக்கா 13:31-33 "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது"
  3. திருவெளிப்பாடு 21:1 "நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன."
  4. திருவெளிப்பாடு 21:3 "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்."
  5. தோபித்து 13:2
  6. யோபு 25:2
  7. திருப்பாடல்கள் 22:28
  8. திருப்பாடல்கள் 45:6
  9. திருப்பாடல்கள் 93:1
  10. எசாயா 9:6-7
  11. தானியேல் 2:44
  12. தானியேல் 7:13-14
  13. மாற்கு 1:15 "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது."
  14. மத்தேயு 21:43 "உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
  15. லூக்கா 13:29
  16. உரோமையர் 14:17-18
  17. 1 கொரிந்தியர் 6:9-10
  18. 1 கொரிந்தியர் 15:22-25
  19. மத்தேயு 24:29-31
  20. திருவெளிப்பாடு 1:7

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறையரசு&oldid=4041040" இலிருந்து மீள்விக்கப்பட்டது