தோபித்து (நூல்)

தோபித்து (Tobit) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

தோபித்தும் மனைவி அன்னாவும். ஓவியர்: ஆபிரகாம் தெ பாப்பெ. ஆண்டு: சுமார் 1658. காப்பிடம்: இலண்டன்.

பெயர்

தொகு

தோபித்து என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் τωβιθ (Tobith) என்றும், இலத்தீனில் Tobias என்றும் பெயர் பெற்றுள்ளது. "கடவுளே என் நலம்" என்பது இதன் பொருள். இந்நூல் இணைத் திருமுறை விவிலிய நூல் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

உள்ளடக்கம்

தொகு

யூதர்கள் கி.மு. 721இல் அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்ததைப் பின்னணியாகக் கொண்டு யூதக் குடும்ப வாழ்வை விளக்கும் இக்கதை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இது, யூத போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்கமுறையான மித்ராஷ் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பர் அறிஞர்; ஞான இலக்கியத்தைச் சேர்ந்ததாகக் கருதுவாரும் உளர்.

இந்நூல் முதலில் அரமேய மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அது முழுமையாக நமக்குக் கிடைக்காததால், அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே (செப்துவசிந்தா) (Septuaginta) மூலபாடமாக இன்று பயன்படுகிறது. அண்மைக் காலம் வரை வத்திக்கான், அலக்சாந்திரியத் தோற்சுவடிகளினின்றே ஏறத்தாழ எல்லா மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டுவந்தன. இந்தச் சுவடிகளைவிடச் சீனாய்ச் சுவடி தொன்மை வாய்ந்ததால், இதுவே திருவிவிலியத்தின் தமிழ்ப் பெயர்ப்புக்கு மூலபாடமாக அமைகிறது. சீனாய்ச் சுவடி முன்னையவற்றைவிடச் சற்று விரிவானது.

பல்வேறு துன்பங்களிடையிலும் தம் மீது பற்றுறுதி கொண்டு வாழ்வோர்க்குக் கடவுள் கைம்மாறு அளித்து அவர்களைக் காப்பார் என்பது இந்நூலின் மையச் செய்தியாகும்.

நூலிலிருந்து சில பகுதிகள்

தொகு

தோபித்து 4:5-7
"மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை;
பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே.
உன் வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைப்பிடி;
அநீதியின் வழிகளில் செல்லாதே.
ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.
நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய்.
நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே;
ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே.
அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ள மாட்டார்."

தோபித்து 4:14-18
"மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு.
நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே.
அளவு மீறி மது அருந்தாதே; குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.
உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு;
உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு...
ஞானிகளிடம் அறிவுரை கேள்;
பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே."

உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1-2 4
2. தோபித்துக்கு நேர்ந்த சோதனைகள் 1:3 - 3:15 4 - 9
3. தோபித்து பெற்ற கைம்மாறு 4:1 - 11:18 9 - 19
4.தோபித்தின் புகழ்ப்பாவும் அறிவுரையும் 12:1 - 14:11 19 - 23
5. முடிவுரை 14:12-15 23
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோபித்து_(நூல்)&oldid=1480695" இலிருந்து மீள்விக்கப்பட்டது