செப்துவசிந்தா
செப்துவசிந்தா (Septuaginta) என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே (Koine) என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது[1].
செப்துவசிந்தா மொழிபெயர்ப்பின் வரலாறும் பெயர்க் காரணமும்
தொகுஇலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் எழுபது என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு எழுபதின்மர் பெயர்ப்பு என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.
இந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் "எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக "செப்துவசிந்தா" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.
இது பற்றி ஒரு தொன்மக் கதை நிலவுகிறது. அது வருமாறு: கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்திய நாட்டை இரண்டாம் தாலமி ஃபிலடெல்புசு (Ptolemy II Philadelphus) ஆண்டுவந்தார். அவர் அலெக்சாந்திரியா நகரில் அமைந்திருந்த உலகப் புகழ்பெற்ற நூலகத்தில் திருவிவிலியத்தின் பிரதிகளைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அரசர் எருசலேமில் தலைமைக் குருவாயிருந்த எலயாசர் என்பவரை அணுகித் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இவர் இசுரயேலின் பன்னிரு குலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறுபேர் என்னும் விகிதத்தில் எழுபத்திரண்டு யூத அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பினார். அரசர் அந்த அறிஞர்களிடம் எபிரேய மொழியிலிருந்த திருவிவிலியத்தை கிரேக்க மொழியில் பெயர்த்துத் தருமாறு பணித்தார்.
ஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒருவர் மற்றவரோடு கலந்துபேசக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.
அந்த அறிஞர்கள் எழுபத்திரண்டு பேரும் எழுபத்திரண்டு நாள்களில் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து முடித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் செய்த மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது எல்லாப் பெயர்ப்புகளும் ஒரே மாதிரி அமைந்திருந்தது கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனராம்! இக்கதையை எடுத்துரைக்கும் ஃப்ளாவியுசு ஜொசிஃபஸ் என்னும் அறிஞர் (கி.பி. சுமார் 37-100), எழுபத்திரண்டு என்னும் எண்ணை எழுபது என்னும் முழு எண்ணாக மாற்றி எழுபதின்மர் (Septuaginta) என்னும் மரபுக்கு வழிவகுத்தார்.
செப்துவசிந்தா கிரேக்க விவிலியத்தின் முதன்மை
தொகுமேலே கூறப்பட்ட செப்துவசிந்தா கிரேக்க மொழிபெயர்ப்பு தோன்றிய கதை உணர்த்துகின்ற முக்கியமான செய்திகள் இவை:
பண்டைய யூத மக்கள் இம்மொழிபெயர்ப்பைப் பெரிதாக மதித்தனர். கி.மு. 270 அளவில் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியா நகரில் யூத மக்கள் பெருமளவில் குடியேறியிருந்தனர். யூதர்களின் திருநூலாகிய விவிலியம் அந்நாள்களின் எபிரேய மொழியில் மட்டுமே இருந்தது. கற்றறிந்தோர் பலர் வாழ்ந்த அலெக்சாந்திரியாவில் கிரேக்க மக்கள் நடுவே எபிரேயரின் சமயம் மற்றும் இலக்கியம் பற்றி அறியும் ஆவல் இருந்தது. எனவே, கிரேக்க மொழி பேசிய யூதர்களின் தேவையை முன்னிட்டும், கிரேக்கர்களுக்கு எபிரேய ஞானத்தை அறிவிக்கும் நோக்கத்துடனும் விவிலியம் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
யூத அறிஞர்கள் எபிரேய மொழி விவிலியத்தையே பெரும்பாலும் பயன்படுத்தினர். அதோடு, தார்கும் (Targum) என்று அழைக்கப்பட்ட அரமேய மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது. செப்துவசிந்தா பெயர்ப்பு இறைஏவுதலால் எழுதப்பட்டது என்று ஃபீலோ, யோசேஃபசு போன்ற அறிஞர் கருதினார்கள். பழைய இலத்தீன் பெயர்ப்புக்கு அதுவே மூல பாடமாயிருந்தது. அதுபோலவே, சுலோவோனியம், சிரியம், அர்மேனியம், கோப்தியம், பழைய சியோர்சியன் (Georgian) போன்ற மொழிகளில் எழுந்த விவிலியப் பெயர்ப்புகளுக்கெல்லாம் செப்துவசிந்தா மூல பாடமாகப் பயன்பட்டது.
புதிய ஏற்பாட்டு நூல்களில் எபிரேய விவிலியம் மேற்கோள் காட்டப்படும்போது செப்துவசிந்தா பெயர்ப்பே பயன்படுத்தப்பட்டது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களும் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள்கள் காட்டுகின்றனர்.
செப்துவசிந்தா பெயர்ப்பின் முக்கிய தோற்சுவடிகள்
தொகுசெப்துவசிந்தா பெயர்ப்பின் சுவடிகள் பல உள்ளன[2]. அவை முற்காலத்தில் கன்றுக்குட்டி, ஆடு போன்ற விலங்குகளின் தோலைப் பதனிட்டு, சீராக்கி எழுதப்பட்டதால் "தோற்சுவடிகள்" (parchments) என்று அழைக்கப்பட்டன. செப்துவசிந்தா தோற்சுவடிகளுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை கீழ்வருவன:
- வத்திக்கான் தோற்சுவடி (codex vaticanus) - கி.பி. 4ஆம் நூற்றாண்டு
- சீனாய் தோற்சுவடி (codex sinaiticus) - கி.பி. 325-60 காலகட்டம்
- அலெக்சாந்திரியா தோற்சுவடி (codex alexandrinus) கி.பி. 5ஆம் நூற்றாண்டு
மொழிபெயர்ப்பு நிகழ்ந்த காலம்
தொகு- வரலாற்று ஆய்வுப்படி, எபிரேய விவிலியத்தில் தோரா (Torah) என்று அழைக்கப்படும் முதல் ஐந்து நூல்களும் (Pentateuch) அலெக்சாந்திரியாவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம் ஆகிய ஐந்தும் ஆகும்.
- கி.மு. 185 அளவில்: திருப்பாடல்கள் நூல் அலெக்சாந்திரியாவில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
- பின்னர் எசேக்கியேல், பன்னிரு சிறு இறைவாக்கினர், எரேமியா ஆகிய இறைவாக்கினர் நூல்கள் பெயர்க்கப்பட்டன;
- தொடர்ந்து வரலாற்று நூல்களாகிய யோசுவா, நீதித் தலைவர்கள், 1 அரசர்கள், 2 அரசர்கள் ஆகியவை பெயர்க்கப்பட்டன.
- இறுதியில் எசாயா மொழிபெயர்க்கப்பட்டது.
- கி.மு. 150 அளவில்: தானியேல், யோபு, சீராக்கின் ஞானம் கிரேக்கத்தில் பெயர்க்கப்பட்டன.
- கி.மு. முதல் நூற்றாண்டு: பாலசுத்தீனத்தில் இனிமைமிகு பாடல், புலம்பல், ரூத்து, எஸ்தர், சபை உரையாளர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.