விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 8, 2011

கான்கார்ட் வானூர்தி சுழல் தாரை எந்திரம் கொண்ட ஒலியை விட வேகமாக செல்லும் பயணிகள் வானூர்தி. இது இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி இருநாட்டு வானூர்தி அமைப்பகங்களாலும் தயாரிக்கப்பட்டு முதன் முறையாக 1969-ல் பறக்கவிடப்பட்டது. 1976-ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவைக்கு கொண்டுவரப்பட்டது. இவ்வானூர்தி லண்டன், பாரிஸ், நியூ யார்க் மற்றும் வாசிங்டன், டி. சி. நகரங்களுக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தது. இதன் பயண நேரம் மற்ற வானூர்திகளின் பயண நேரத்தில் பாதி மட்டுமே ஆகும். மொத்தம் 20 கான்கார்ட் விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆதலால் இத்திட்டம் இருநாடுகளுக்கும் பெருத்த நட்டத்தை விளைவித்தது. மேலும் இருநாட்டு வானூர்தி நிறுவனங்களும் வானூர்திகளை வாங்க அரசாங்கமே நிதியுதவி அளித்தது. 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்தின் காரணமாக கான்கார்ட் பயணிகள் போக்குவரத்து 2003 இல் நிறுத்தப்பட்டது. கான்கார்ட் எனும் பெயரே இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வானூர்தி உருவாக்க உடன்படிக்கையைக் காட்டுகிறது. பிரித்தானியாவில் வழக்கமான வடிவமைப்பில் அல்லாத அனைத்து வானூர்திகளும் கான்கார்ட் என்றே அழைக்கப்படுகிறது. வான்வழிப் போக்குவரத்தில் ஓர் மைல்கல்லாகவும் முக்கியமான சின்னமாகவும் இவ்விமானம் கருதப்படுகிறது. மேலும்..


சிபில் கார்த்திகேசு (1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாறியவர். ஜப்பானிய படையினரை எதிர்த்த மலேசிய எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். ஐக்கிய இராச்சியம் மற்றும் பொது நலவாயத்தின் இரண்டாவது உயரிய விருதான ஜார்ஜ் பதக்கம் பெற்றவர். மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகிறது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர். சிபில் தனது கணவர் மரு. கார்த்திகேசுவுடன் சேர்ந்து ஈப்போவில் ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். மலாயாக் கம்னியூஸ்டு கட்சிப் போராளிகள் சப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராக மறைந்து இருந்து சப்பானியர்களைத் தாக்கி வந்தனர். காயம் அடைந்த போராளிகள் சிபிலின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப்பட்டு இலவசமாக மருத்துவம் செய்யப்பட்டது. அதனால் சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் அவர் பெற்றார். சிபில் சப்பானியர்களினால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார். மேலும்..