விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு
அண்மையில் இடம்பெற்ற கட்டுரைப்போட்டியின் வாயிலாகவும், இணைய மாநாட்டில் இடம்பெற்ற விக்கிப்பீடியா பயிற்சிக் களம் வாயிலாகவும் தமிழர் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா பெருமளவு அறிமுகமாகி இருக்கிறது. தமிழ் சமூகத்தின் பல மட்டங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நல்லபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சூடு தணிவதற்கு முன்பாகவே தமிழ் விக்கியின் வளர்ச்சி தொடர்பாகச் சில திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டியது அவசியம். தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தைக் கூட்டுவது குறித்தும் அத்தோடு தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது குறித்துமான திட்டமொன்றின் அடிப்படைகள் பற்றிய என்னுடைய முன்மொழிவை உங்கள் முன் வைக்கிறேன்.
திட்டம்
தொகுநமக்கு இப்போது முதன்மையாகத் தேவைப்படுவது பயனுள்ள உள்ளடக்கங்கள் கொண்ட கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதாகும். இதற்கு பயனுள்ள தலைப்புக்களில் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமான நடையில் கட்டுரைகளை எழுதக்கூடிய பங்களிப்பவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது முக்கியமானது. பங்களிப்பவர்கள் தாங்களாக வரும் வேகம் மிகவும் குறைவு என்பதை நமது பட்டறிவின் வாயிலாக அறிந்துள்ளோம். எனவே பங்களிப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்கான வேறு வழிகள் பற்றிச் சிந்திக்கவேண்டி இருக்கிறது.
இத்தகைய ஒரு திட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கலாம்:
- ஒரு குறித்த கட்டுரை எண்ணிக்கை இலக்கை ஏற்படுத்தல்.
- நல்ல கட்டுரைகளைத் தரக்கூடியவர்களை அணுகிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான கட்டுரைகளை எழுதித்தருமாறு கேட்டு வாங்குதல்.
கட்டுரை எண்ணிக்கை இலக்கு முக்கியம் இல்லை என்றாலும் ஒரு இலக்கு இருப்பது நடவடிக்கைகளைத் தொய்வடையாமல் வைத்திருக்க உதவும். 100,000 புதிய கட்டுரைகள் என்பதை இலக்காகக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. இதற்கான காலத்தைக் குறிக்காமல் விட்டாலும் பரவாயில்லை அல்லது ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளாக வைத்துக்கொள்ளலாம். கட்டுரைகள் நீளமாக இருக்கத்தேவையில்லை. 300 சொற்களுக்கு மேல் (> 4.0 கிபை) என்று வைத்துக்கொண்டால் போதுமானது என்பது எனது கருத்து. இது தரக் கணிப்புக்களிலும் தமிழ் விக்கியின் நிலையை உயர்த்தும்.
ஏற்கெனவே இருக்கும் பயனர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ நல்ல கட்டுரைகளைத் தரக்கூடியவர்களை அணுகிக் கட்டுரைகளை எழுதித்தருமாறு வேண்டலாம். ஒவ்வொருவருக்கும் 10 அல்லது இருபது கட்டுரைகள் ஒதுக்கலாம். கல்லூரி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், துறை அறிஞர்கள், பிற துறை ஆர்வலர்கள், கட்டுரைகளை எழுதும் ஆர்வமுள்ள பிறர் போன்றோரை இலக்கு வைக்கலாம். குறித்த எண்ணிக்கையான கட்டுரைகளையே எழுத வேண்டும் என்பதால் அவர்கள் இதற்கு உடன்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஏற்கெனவே இருக்கும் தலைப்புக்களில் அல்லது ஒரே தலைப்பில் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்கும் வகையில் கட்டுரைத் தலைப்புக்களை நாமே கொடுக்கலாம் அல்லது நம்மால் உருவாக்கப்படும் பட்டியலில் இருந்து தெரியச் சொல்லலாம். அல்லது எழுதுபவர்களிடமிருந்தே தலைப்புக்களைக் கேட்டு அவை ஏற்கெனவே இல்லை அல்லது இன்னொருவர் எழுதாதது என உறுதிப் படுத்தலாம்.
கட்டுரைகளை எழுதுபவர்கள் பயனர் கணக்குகளைத் தொடங்கவும், தாமே கட்டுரைகளைப் பதிவேற்றவும் ஊக்குவிக்கலாம். இதன்மூலம் கட்டுரையாளர்கள் தமிழ் விக்கியில் நேரடியான அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்த முடியும்.
100,000 கட்டுரைகள் வேண்டும் என்றும் ஒருவருக்கு 10 கட்டுரைகள் என்றும் இந்நடவடிக்கையை ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குள் முடிப்பது என்றும் இலக்கு வைத்தால் அக் காலப்பகுதிக்குள் 10,000 கட்டுரையாளர்களைத் தேட வேண்டியிருக்கும். இவர்களுட் சிலர் கூடிய எண்ணிக்கையான கட்டுரைகளைத் தர ஒத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கலாம். ஒரு முறை கட்டுரைகளை வழங்கியவர்கள் ஆர்வம் ஏற்பட்டால் மேலும் பல கட்டுரைகளை வழங்க ஒத்துக்கொள்வர். ஒரே நேரத்தில் இவர்கள் அனைவரையும் தேடவேண்டும் என்பதில்லை. முதலில் குறைவான எண்ணிக்கையினருடன் தொடங்கினாலும் அவர்களுடைய அறிமுகத்தின் மூலமும் மேலும் பலரைச் சேர்த்துக்கொள்ள முடியும்.
இத் திட்டம் வெற்றி பெற்றால் குறுகிய காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் 125,000 கட்டுரைகள் இருக்கும். இது தமிழ் விக்கியைத் தரநிலையில் முன்னுக்குக் கொண்டுவருவதுடன், விரைவான வளர்ச்சிக்கு ஊக்கியாகவும் அமையும். பங்களிப்பவர்களின் எண்ணிக்கையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். தற்போதுள்ள பயனர்கள் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும் என்றாலும், இந்த உழைப்புக்கு நல்ல பயன் விளையும் என்பது எனது கருத்து. தொடக்கத்தில் இருக்கக்கூடிய பணிச் சுமைகள் பிற்பகுதியில் புதியவர்களின் ஒத்துழைப்பு மூலம் குறையவும் கூடும்.
--மயூரநாதன் 08:21, 16 ஜூலை 2010 (UTC)
- இத்திட்டத்தை வரவேற்கிறேன். பலதரப்பட்ட தலைப்புகளிலும் (அயர வைக்காத அளவிற்கு, அதே தருணம் போதுமான உள்ளடக்கத்துடன் கூடிய) தகவல் பக்கங்களை உருவாக்கினால் மக்களைத் த.வி. பக்கம் இழுக்க முடியும்; “தாமாக வருபவர்களே அடிக்கடி வருவர்; நிலைத்தும் நிற்பர்” என்பது என் எண்ணம். எனவே, த.வி.யில் கட்டுரைப் பக்கங்கள் கூடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் -- ஆனால், ஒரு இலட்சம் என்பது அயரவைக்கும் இலக்குதான் -- எனவே, எனக்கு நானே ஒரு இலக்கு வாசகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளேன்:
இதை அனைவருக்கும் தெரிவிப்பதன் மூலம் ஒரு வாக்குறுதி / கடமையை நிறைவேற்றும் நிச்சயத்தன்மையை உருவாக்க எண்ணுகிறேன்.--பரிதிமதி 16:45, 23 ஜூலை 2010 (UTC)வாரத்திற்குப் பத்து ; ஆண்டிற்கு ஐந்நூறு
தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வேண்டுதல்
தொகு- தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறையின் வாயிலாக அத்துறையின் செயல்பாடுகள், புள்ளிவிபரங்கள் போன்றவற்றை மாநில வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் தகவல் கையேடுகளாகவும் செய்தி அறிக்கைகளாகவும் தமிழில் வெளியிட்டு வருகின்றன. இந்த அறிக்கை அல்லது கையேடுகளிலுள்ள தகவல்களை தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களாக சில குறிப்பிட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் செய்யும்படி வேண்டலாம். இதில் சரியானவைகளை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றம் செய்து வெளியிடலாம். இதனால் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகும். மேலும் தமிழ்நாடு அரசின் பல துறைகள் வழியிலான செயல்பாடுகள் அனைவருக்கும் சென்றடைய உதவும்.
- தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பணியிலுள்ளவர்கள் மனது வைத்தால் அவர்களுடைய மாணவர்கள் வழியாகவும் அதிகமான கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்ய முடியும்.
- தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் வழியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் நூலக வாசகர் அமைப்பின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வழியாக தமிழ் விக்கிப்பீடியா குறித்த கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தலாம்.
--தேனி.எம்.சுப்பிரமணி. 09:52, 16 ஜூலை 2010 (UTC)
இரவியின் கருத்துகள்
தொகுதமிழ் விக்கியின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் திட்டமிட்டு விரைந்து செயற்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்குத் தோன்றும் சில:
- ஒரு இலட்சம் கட்டுரை இலக்கை ஏற்கனவே பலர் குறிப்பிட்டுள்ளார்கள். இது பார்க்கவே மலைப்பாக இருப்பதால் நினைவாகாமலே போகலாம். இன்னும் சிறிய, உடனடி இலக்குகளை வைக்கலாம். இத்தனை மாதங்களில் 10,000 கட்டுரைகள் கூட்ட வேண்டும் என்று வைக்கலாம். வெறும் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் இலக்காக வைக்காமல், ஒரு நாளைக்கு இத்தனை முனைப்பான பங்களிப்பாளர்கள் என்று வைக்கலாம். தற்போது ஒரு நாளின் அண்மைய மாற்றங்களைப் பார்த்தால் 20 பங்களிப்பாளர்களுக்குக் குறைவாகவே இருக்கிறோம். இதுவே 50-100 என்று உயர்ந்தால் மிக அருமையான விளைவுகள் இருக்கும். சரியான பங்களிப்பாளர் ஒருவர் அமைந்தால் கூட அவர் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை உருவாக்குவார். எனவே, நமது பரப்புரைகளைச் சிதறடிக்காமல் சரியானவர்களை இனங்கண்டு செயற்பட வேண்டும்.
- விக்கிப்பீடியாவை வளர்ப்பதை விட விக்சனரி, விக்கிமூலம் திட்டங்களை வளர்ப்பது எளிது. இத்திட்டங்களின் வளர்ச்சியும் விக்கிப்பீடியாவுக்கு மறைமுகமாக உதவும். இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு சரியான வெளி உறவுகளை வளர்த்து வளங்களைப் பெறுவதில் முனைய வேண்டும். அரசு, கல்லூரிகள், ஊடகங்கள் போன்றவற்றில் அறிமுகம் உள்ள தேனி. சுப்பிரமணி போன்றோர் பெரிதும் உதவலாம்.
- மலையாள விக்கிப்பீடியர்கள் உருவாக்கிய இறுவட்டு ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்குக் கேரள அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளில் இறங்க வேண்டும். இதற்கு இருக்கிற கட்டுரைகளே போதும். ஒவ்வொரு கல்லூரி, பள்ளியிலும்அறியப்பட்ட ஒன்றாக தமிழ் விக்கியை மாற்றினாலே பெரிய வெற்றி தான்.
- எண்ணிக்கை, வளர்ச்சியில் செலுத்துவதற்கு ஈடான கவனத்தை இருக்கிற கட்டுரைகளைச் சீராக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடப்பு நிகழ்வுகள் கட்டுரைகள் எழுதுவது போக ஒரு மூன்று மாத அளவாவது மற்ற கட்டுரைகளை எழுதுவதை நிறுத்தி வைத்து முழுமனதாகத் துப்புரவுப் பணிகளில் ஈடுபட வேண்டும். தரமற்ற, பிழை மலிந்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளை விட சீரான 100 கட்டுரைகள் இருந்தால் கூட அவை திட்டத்துக்கு நல்ல பெயர் தரும்
- விரைவும் தேவை. அதே வேளை பொறுமையும், திட்டமிடலும் தேவை. ஒவ்வொரு சிறு திட்டத்துக்கும் மூன்று பேராவது முழுப் பொறுப்பு எடுத்து இறங்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரே ஆளே இறங்கி களைக்கும் நிலை வரக்கூடாது--ரவி 12:47, 16 ஜூலை 2010 (UTC)
மயூரநாதன் பதில்
தொகு- ஒரு இலட்சம் என்ற இலக்கைப் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், அது தான் நாம் அடைய வேண்டிய அடுத்த பெரிய இலக்கு. மலைப்பாக இருந்தாலும் அதை அடைய முயற்சிப்பதுதான் கூடிய தூண்டுதலைக் கொடுக்கும். திட்டம் வெற்றியடையுமானால் ஏற்கெனவே இருக்கும் ஏறத்தாழ 25,000 கட்டுரைகளுடன் இந்த எண்ணிக்கை 125,000 ஆகும். இது தொடர்ந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான ஒன்றாகவும் அமையும். சிறிய விக்கிப்பீடியாக்களுக்கான இலக்குக் கட்டுரை எண்ணிக்கையை விக்கிமீடியாவினர் 125,000 ஆகக் குறிப்பிட்டிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதை நாம் முன்னராகவே அடைந்து சிறிய விக்கிப்பீடியா என்ற நிலையில் இருந்து தமிழ் விக்கியை மீட்பது நல்லது என்பது எனது கருத்து. முனைப்பான பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் என்பதில் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. எனது நோக்கமும் அதுதான். ஆனால் நேரடியாக அடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதையே நமது பட்டறிவு காட்டுகின்றது. எண்ணிக்கையை மட்டும் கூட்டுவதே நோக்கமாக இருந்திருந்தால் தானியங்கிகள் மூலம் நிறையக் கட்டுரைகளை உருவாக்கலாம் என முன்மொழிந்திருப்பேன். எண்ணிக்கையைக் கூட்டுவது மட்டும் எனது நோக்கம் அல்ல. குறித்த எண்ணிக்கையான கட்டுரைகளை தவிக்கு வெளியே இருப்போரிடம் இருந்து கேட்டுப் பெறுவதன் மூலம் அவர்களுக்குத் தவியை அறிமுகப்படுத்துகிறோம் என்பதையும், மறைமுகமாக அவர்களைத் தவியின் வளர்ச்சியில் பங்காளர்களாக ஆக்குகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது அவர்களில் சிலரை முனைப்பான பங்களிப்பாளர்களாக ஆக்கும். கட்டுரைகளைக் கேட்டுப் பெறுவதனால் துறை அறிஞர்களிடமிருந்தும் கட்டுரைகளைப் பெற முடியும் இதனால் கட்டுரைகளின் தரமும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. சரியான பங்களிப்பாளர் அமைந்தால் அவர் நூற்றுக்கணக்கில் கட்டுரைகளை உருவாக்குவார் என்பது உண்மை. ஆனால் அத்தகைய சரியான பங்களிப்பாளரை எவ்வாறு கொண்டுவருவது. தானாகவே இது நடக்கும் என்று வாளாவிருக்கலாமா? கடந்த ஆறரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் அவ்வாறான எத்தனை பங்களிப்பாளர்களை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
- விக்கிப்பீடியாவை வளர்ப்பதைவிட விக்சனரி, விக்கிமூலம் திட்டங்களை வளர்ப்பது எளிது என்று கூற முடியாது. அப்படி இருந்தாலும்கூட அதற்காக விக்கிப்பீடியாவை விட்டுவிட்டு விக்சனரியையும், விக்கிமூலத்தையும் வளர்க்கலாம் என்பது சரியான முடிவாகாது. விக்சனரியும், விக்கிமூலமும் தவியின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவும் என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் விக்கிப்பீடியா வளர்ந்தால்தான் அவற்றால் விக்கிப்பீடியாவுக்குப் பயன் உண்டு. விக்சனரியும், விக்கிமூலமும் வளர்ந்தால் அது விக்கிப்பீடியாவைத் தானாகவே வளர்க்கும் என்று கூற முடியாது. உண்மையில் இங்கே குறிப்பிட்ட எல்லாத் திட்டங்களையும் வளர்ப்பதற்குத் திட்டங்கள் வேண்டும். அவை எல்லாமே ஒன்றுக்கொன்று இணையாக வளர்வதே சிறந்தது.
- குறுவட்டு வெளியீடு நல்ல விடயம்தான். ஆனால், அதை ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்புவதன் மூலம் அதிக பயன் விளையும் என்று சொல்வதற்கு இல்லை. இது கட்டுரைப் போட்டிக்கான ஒட்டிகளை அனுப்பியது போல்தான். பள்ளி நிர்வாகங்களோ, கல்லூரி நிர்வாகங்களோ அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்துவார்கள் என்றோ அதற்குரிய வசதிகள் அவர்களுக்கு இருக்கும் என்றோ எதிர்பார்ப்பதற்கு இல்லை. குறுவட்டு வெளியிட்டதன் மூலம் மலையாள விக்கிக்கு எத்தனை புதிய பங்களிப்பாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதை அவர்களிடம் இருந்து அறிவது பயனுள்ளது.
- இப்பொழுது தமிழ் விக்கி ஒரு நாளில் 50,000 - 90,000 தடவைகள் பார்க்கப்படுகின்றது. கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதுவும் அதற்கு இணையாகக் கூடும். இது புதிய பங்களிப்பாளர்களையும் கொண்டுவரும். எனவே கட்டுரை எண்ணிக்கையில் கவனம் செலுத்துவது முக்கியமானதே. ஆனால், அதன் தரம் நன்றாக இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளைச் சீராக்குவதற்கு ஏற்கெனவே இருக்கும் பயனர்கள் தான் அதிகம் பங்களிக்க முடியும். வெளியார்களை இம்முயற்சியில் ஈடுபடுத்துவது கடினம். எனவே பயனர்களின் எண்ணிக்கையை வேறு வழிகள் மூலம் கூட்டினால்தான் இதையும் சிறப்பாகச் செய்யமுடியும். அதற்கும் இத்திட்டம் உதவும்.
- விரைவும், பொறுமையும், திட்டமிடலும் தேவை என்பது சரிதான். அதனால்தான் இந்த முன்மொழிவு. விரைவான கட்டுரை அதிகரிப்புக்கான இந்த முன்மொழிவு திட்டமிடலுக்காகத் தவி சமுதாயத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. பொறுமையாகச் செய்வதற்கு இடம் அளிப்பதற்காகவே கால வரையறை தேவையில்லை என முன்மொழிந்துள்ளேன். ஆனாலும், திட்டங்களைத் தொடங்குவதிலேயே அளவு மீறிய பொறுமை காட்டுவது செயலற்ற தன்மைக்கு ஈடாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறுவதனால், தவி பயனர்கள் செயலற்று இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. குறைந்தது ஏழு அல்லது எட்டுப் பயனர்கள் வரை தமது சொந்த வேலைகளுக்கு நடுவிலும் தமிழ் விக்கிக்கு அளவுக்கு அதிகமாகவே நேரம் ஒதுக்கிச் செயற்படுகிறார்கள் என்பதையும் இதனால் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றார்கள் என்பதையும் நான் அறிவேன். பங்களிப்பவர்களைக் கூட்டுவதன் மூலமே ஒரு சில பயனர்கள் மீது பொறுப்புக்கள் கூடுதலாகச் சுமத்தப்படுவதைக் குறைக்கலாம்.
இம் முன்மொழிவு பற்றி இதுவரை இரண்டு பயனர்களே கருத்துக் கூறியுள்ளனர். பிற பயனர்களும் தங்கள் கருத்துக்களைக் கூற வேண்டுகிறேன். -- மயூரநாதன் 07:35, 23 ஜூலை 2010 (UTC)
எமது இலக்கு என்ன ?
தொகு- அடுத்த 3 ஆண்டுகள் - 50 000 கட்டுரைகள்
- அடுத்த 5 ஆண்டுகள் - 75 000 கட்டுரைகள்
- அடுத்த 7 ஆண்டுகள் - 100 000 கட்டுரைகள்
இது தற்போதையை வளங்களைக் கருத்தில் கொண்டாலே ஓரளவு சாத்தியமானது. ஆனால் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தல், தொடர்பாடல் நடத்தல் அவசியம். பின்வரும் தேவைகளை முன்வைத்து கோவை, அல்லது சென்னையில் ஒரு அலுவலகம் தொடங்கினால் உதவும் என்று நினைக்கிறன்.
- அறிமுகப்படுத்தல், தொடர்பாடல்
- குறிப்புதவி (தகவல் நூலகம்)
- ஆவணப்படுத்தல் (படங்கள், நிகழ்படங்கள் சேகரித்தல், உருவாக்குதல்)
- விக்கி நிகழ்வுகளை/கட்டுரைப் போட்டிகளை ஒழுங்கமைத்தல்
- விக்கிகளைப் பராமரித்தல்
இதில் தமிழ் விக்கிப்பீடியா மீது ஈடுபாடு கொண்ட, நுணுக்கம் தெரிந்த ஒருவரை தொடக்க கட்டமாகப் பணியில் ஈடுபடுத்தலாம். அவர் நேரடியாக விக்கிகளில் ஊடாடல் அவசியம்.
தற்போது வரை மலேசியா, ஐ.இரா, பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து பங்களிப்பதில்லை. மலேசியாவில் 1.5-2 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இது ஏன் என்று அறிய வேண்டும். இவர்களை நாம் சென்றடைய வேண்டும்.
தற்போதைய வேகம் 5000 / ஆண்டு. இப்படி என்றால் இன்னும் 15 ஆண்டுகள் எடுக்கும், நாம் 100 000 கட்டுரை இலக்கை எட்ட. இது நிச்சியமாகப் போதாது. --Natkeeran 14:24, 4 செப்டெம்பர் 2010 (UTC)