விக்கிப்பீடியா:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review
தமிழ் விக்கிபீடியாவிற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி மிக்க ஆண்டு. கட்டுரைகள் 1000ல் இருந்து 5600+ ஆகவும், பதிகை செய்த பயனர்கள் 300ல் இருந்து 1100+ ஆகவும் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பெற்றது. எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் வளர்ச்சியுற்றது. தரத்தை அவதானித்து, பகுத்தாய்ந்து, பேணி, மேம்படுத்துவதில் நாம் இயன்றவரை முனைப்புடன் செயல்படுகின்றோம். கட்டுரை உருவாக்கம், பக்க வடிவமைப்பு, வகைப்படுத்தல், நுட்ப மேம்படுத்தல், மொழிபெயர்ப்பு, கொள்கை/வழிகாட்டல்கள் விரிவுபடுத்தல், பயனர் அறிமுகம் என பல தளங்களில் தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து வளர்ச்சி பெற்றும் புதிய கூறுகளை உள்வாங்கியும் உள்ளது. வலைவாசல், தமிழ் விக்கிபீடியா நாடுகள் திட்டம், தானியங்கி ஆக்கக் கட்டுரைகள், உதவி ஒளிப்பதிவுகள், ஜிம்போ வேல்ஸ் சந்திப்பு ஆகியன 2006 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க செயலாக்கங்கள். கட்டுரைகள் எழுதுதல், வகைப்படுத்தல், தளம் ஒழுங்குபடுத்தல் ஆகியவையே தமிழ் விக்கிபீடியாவில் முக்கிய பணிகள். இவற்றைத் தவிர பயனர் அனுபவம், உதவி வழிகாட்டல்களை மேம்படுத்தல், நேரடி ஒருங்குறி தமிழ் தட்டச்சு ஏதுவாக்கல், வரைகலைப் படிமங்களைச் சேர்த்தல், தள அழகியல் போன்ற விடயங்களிலும் தமிழ் விக்கிபீடியா சமூகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. 2005 ஆம் தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிபீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் ஆகியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டு மதிநுட்பதுக்கு பங்களிக்க முன்வரவேண்டும். இந்த "2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை"யின் நோக்கம் 2006 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2007 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005 அறிக்கையின் பேச்சு பக்கத்தை பார்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிபீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிபீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும். |