விக்கிப்பீடியா:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை

குறுக்கு வழி:
WP:tawiki2007

அறிமுகம்

தொகு

தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் கீழ் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கி மேற்கோள்கள், தமிழ் விக்கி செய்திகள் ஆகிய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலத்தை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றுள் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவும் தமிழ் விக்சனரியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதுடன் தமிழ் இணையப் பயனர்களால் பெரிதும் அறியப்பட்டதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பிற தளங்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் சீரிய வளர்ச்சி மிக்கதாகவும் உள்ளன. இத்தளங்கள் தமிழ் இணையத்தில் முதன்மையான தகவல் களங்களாக உள்ளன. தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தோன்றக்கூடிய இணைய அணுக்கப் பரவல், இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உரமாக அமையும் என்பதால் இத்திட்டங்களின் வருங்கால முக்கியத்துவம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆங்கில இணையத்தளங்களை போலன்றி, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் உசாத்துணைக்கான முதன்மை களமாக இருப்பது குறிப்பிட்டதக்கது.


தமிழ் விக்கிபீடியா

தொகு

தமிழ் விக்கிபீடியா 2003ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 1,70,430 கட்டுரைகள் உள்ளன; 1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன.

பயனர் விவரங்கள்

தொகு

1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கணக்குகளை நிர்வாகப் பொறுப்புள்ளவர்கள் கொண்டு உள்ளனர். நிரவலாக, நாளொன்றுக்கு 4 பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. பயனர்கள் பெரும்பாலும் இந்திய, இலங்கை வேர்களை கொண்டவர்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் பங்களித்து வருகின்றனர்.

பங்களிக்கும் பயனர் அகவை பெரும்பாலும் 20-25 என்ற எல்லையில் அமைந்து இருக்கிறது. எனினும், முனைப்புடன் பங்காற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பயனர்களும் உள்ளனர். மாணவர்கள், மென்பொருள் வல்லுனர்கள் ஆகியோர் பங்களிக்கும் பயனர்களில் பெரும்பான்மையோர். எனினும், முனைப்போடு பங்காற்றுபவர்களில் சிறந்த தொழிற்பின்புலமும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர், கட்டிடக் கலை வல்லுனர் ஆகியோரும் உண்டு.

கட்டுரை எண்ணிக்கையும் தரமும்

தொகு

என்ற வளர்ச்சியை பார்க்கையில் கட்டுரைகள் எண்ணிக்கை கூடும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருவதை காணலாம். அதே வேளை, கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதை மட்டும் இலக்காக வைத்து உருவாக்கப்படும் பயனற்ற பக்கங்களை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவே தரம் மிகுந்து எண்ணிக்கையிலும் கூடுதலாக உள்ள இந்திய மொழி விக்கிபீடியாவாகும்.

விரிவான ஒப்பீடுகளை பார்க்க - Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)

ஜனவரி 2007 புள்ளிவிவரம்

தொகு

கட்டுரை எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிக்கின்றது. தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிகமான கட்டுரைகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Lang official >200ch new/day edits bytes >0.5K >2.0K edits size words internal interwiki image external redirects Depth
Te 26 k 5.5 k 11 2.3 826 9% 2% 3.9 k 21 MB 976 k 114 k 58 k 2.0 k 3.4 k 1.2 k 1
Bn 13 k 5.2 k 3 5.5 1755 24% 4% 6.6 k 22 MB 982 k 61 k 230 k 3.0 k 3.7 k 9.1 k 13
Ta 6.2 k 5.8 k 8 9.4 4238 66% 16% 5.4 k 25 MB 1.0 M 76 k 101 k 3.1 k 7.7 k 1.3 k 24
Hi 6.0 k 2.6 k 48 5.5 1927 18% 6% 5.1 k 12 MB 637 k 28 k 76 k 599 2.0 k 1.1 k 5
Mr 7.4 k 2.5 k 10 4.9 1527 20% 5% 3.5 k 11 MB 577 k 21 k 28 k 481 1.9 k 1.5 k 9
Ka 4.4 k 3.5 k 2 5.4 2757 42% 8% 1.7 k 12 MB 528 k 41 k 34 k 1.2 k 1.9 k 1.2 k 11

பிற அளவுகோல்கள்

தொகு
  • கட்டற்ற தன்மை, நடுநிலைமை, இணக்க முடிவு, மெய்யறிதன்மை ஆகியவற்றில் சமரசமின்மை.
  • கட்டுரை எண்ணிக்கை, தரம் தவிர தள செயற்பாட்டுக்கான கொள்கை-உதவி போன்ற அடிப்படைகளில், உள்ளடக்கத்தில் (பரப்பு-ஆழம்-தரம்), பயனர் நல்லுறவுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.
  • தமிழ்ச் சூழலில் தமிழ் விக்கிபீடியா ஒரு மாற்று ஊடக அல்லது மூலமாக வளர்வதற்கான வாய்ப்பை கருதி தொலைநோக்கு மற்றும் பொறுப்புடன் செயல்படுகிறோம்.
  • எத்துறையிலும் ஐரோப்பிய மையப் பார்வைய தவிர்த்து, எளிய தமிழில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறோம். எழுத்து தமிழ் நடை அல்லது பொதுத் தமிழ் நடையை பின்பற்றல், தமிழர்களை பற்றிய தகவல்களை கவனம் தந்து சேர்த்தல் போன்றவற்றுக்கும் முன்னுரிமை தருகிறோம்.

தடைக்கற்கள்

தொகு
  • தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் பரவலான இணைய அணுக்கம் இல்லாமை.
  • தமிழ்க் கலைச்சொற்கள் ஒருங்கிணைப்பின்மை.
  • உலகளாவிய தமிழ் மொழி ஒலிப்பு-எழுத்து முறை வேறுபாடுகள்.
  • உசாத்துணைக்கான பிற இணைய வழி தமிழ் ஆதாரங்கள் இல்லாமை.
  • தமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வின்மை.

மறைமுகப் பங்களிப்புகள்

தொகு

நேரடியாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதாதோரும் பிற வழிகளில் மறைமுகமாக தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிபீடியாவுக்கான இணைப்பை காணலாம். தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்த இணையக் கருவிகளின் உருவாக்கமும் தமிழ் விக்கிபீடியாவுக்கான மறைமுகப் பங்களிப்புகளே. தற்போது, தமிழ் விக்கிபீடியா குறித்த தொடர்பாடலுக்காக தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதைய முனைப்புகள்

தொகு
  • இருக்கிற கட்டுரைகளில் தர மேம்பாடு.
  • படிம ஒழுங்குபடுத்துதல்.
  • தமிழ் விக்கிபீடியா குறித்த பொது விழிப்புணர்வு உருவாக்குதல்.

பலங்கள்

தொகு
  • மற்ற இந்திய மொழிகளை போல் அல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியேயும் பேசப்படும் மொழி தமிழ். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழுடன் தொடர்ச்சியை விரும்பும் இவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய தகவல் ஆதாரமாக இருப்பதால் விக்கிபீடியாவின் தேவை தமிழர்களுக்கு அதிகம்.
  • புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பதோடு தமிழார்வம் குன்றாமல் இருப்பதால் அனைத்துத் துறை கட்டுரைகளும் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்பு.
  • உலகெங்கும் பல நேர வலயங்களில் உள்ள தமிழர்கள் பங்களிப்பதால் 24 மணி நேரமும் தளம் இற்றைப்படுத்தப்படவும் கண்காணிக்கப்படுவதற்குமான வாய்ப்பு.

வருங்கால எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள்

தொகு
  • தமிழ் நிலப்பகுதிகளில் இணைய அணுக்கம் பரவலாகப் பரவலாக தமிழ் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு, பயன்பாடு இரண்டும் கூடும்.
  • கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்குட்பட்டு அறிவு சார் துறைகளுக்கான தமிழர் விவாதக்களமாக தமிழ் விக்கிபீடியாவை உருவாக்குதல்.
  • தமிழ் நிலப்பகுதி பல்கலைக்கழகங்களுடன் பங்களிப்புகளுக்கான சாத்தியங்களை ஆராய்தல்.
  • முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை கட்டற்ற முறையில் தமிழ் விக்கிபீடியாவுடன் பகிர முன்வந்துள்ளார்கள்.

தமிழ் விக்சனரி

தொகு

தமிழ் விக்சனரியில் தற்போது 5500+ சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் தமிழில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் - தமிழ் விளக்கச் சொற்கள். பயனர் கணக்குகள் எண்ணிக்கை 150+ ஆக உள்ளது. இவற்றில் 6 கணக்குகளை நிர்வாகிகள் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தமிழ் விக்கிபீடியா பயனர்களே அங்கும் பங்களித்தாலும் விக்சனரியில் மட்டும் பங்களிக்கும் பயனர்களும் உள்ளனர். இணையத்தில் இருக்கும் ஒரே தற்காலத் தமிழ் அகரமுதலியாக இருப்பது தமிழ் விக்சனரியின் சிறப்பு. பயனர் விவரங்கள், பக்க எண்ணிக்கை, தரக்கட்டுப்பாடு, தடைக்கற்கள், வருங்காலப் போக்குகள் ஆகியவை தமிழ் விக்கிபீடியாவை ஒத்தே இருக்கின்றன.

பிற திட்டங்கள்

தொகு

தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மேற்கோள், தமிழ் விக்கி செய்திகள் ஆகியவற்றின் இருப்பும் முக்கியத்துவமும் தற்போது குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் இருக்கும் பயனர்களே அங்கும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்திட்டங்கள் வளரவில்லை. இத்திட்டங்களில் தனி ஆர்வம் உடைய பயனர்கள் வருகையில் நிலைமை மாறும். எனினும், இத்திட்டங்களின் தேக்கம் ஆங்கில விக்கித் திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகளுடன் ஒப்பிடத் தக்கதே. இத்தளங்களை காட்டிலும் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான தேவை மிகையாக உணரப்படுவதால் அதை அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாக அமையும் என்று சொல்ல இயலும்.