விண்பெட்டகம்
விண்பெட்டகம் (Space capsule) என்பது எளிமையான முதன்மைப் பகுதி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் (பெரும்பாலும்) மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் ஆகும், இவை வளிமண்டல நுழைவின் போது ஏற்றத்தை உருவாக்குவதற்கான இறக்கை, மற்றும் இன்னபிற பாகங்கள் இல்லாமலிருக்கும். இதுநாள் வரை பெரும்பாலான மனிதர் செல்லும் விண்பயணத் திட்டங்களில் விண்பெட்டகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன, முதன்முதலில் மனிதர் விண்ணுக்குச் சென்ற வோசுடாக் (ருசியா) மற்றும் மெர்க்குரி (அமெரிக்கா) ஆகியவை விண்பெட்டகங்களேயாகும். அதன்பிறகும் விண்ணுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற ருசிய (வோசுகாட், சோயுசு), அமெரிக்க (ஜெமினி, அப்பல்லோ), சீன (சென்சூ) ஆகியவையும் விண்பெட்டகங்கள் ஆகும். வருங்காலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க, சீன, இந்திய விண்கலங்களும் விண்பெட்டகங்களாகவே வடிவமைக்கப்பட்டுவருகின்றன. குழு ஆய்வு வாகனத்தின் வடிவமைப்பும் விண்பெட்டகமாகவே வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மனிதர் பயணிக்கும் விண்பெட்டகம் மனிதரின் அன்றாடத் தேவைகளுக்கான அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும், அதாவது நீர், காற்று மற்றும் உணவு போன்றவை. விண்வெளியின் அதீத குளிர் மற்றும் கதிரியக்கங்களிலிருந்து மனிதர்களைக் காக்கும் வண்ணமும் அதன் வடிவமைப்பு இருக்க வேண்டும். விண்பெட்டகத்துக்குள் மனிதர் வாழும்வண்ணம் வெப்பநிலை மற்றும் சூழலுக்காகக் காப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். புறப்பாடு மற்றும் புவியிறக்கத்தின்போது விண்வெளி வீரர் விண்பெட்டகத்துக்குள் அங்குமிங்கும் தூக்கிவீசப்படாமலிருப்பதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்பயணத்தின்போது விண்ணோடிகள் எடையின்மையை உணர்வார்கள், அப்போது அவர்களின் இருக்கை அல்லது படுக்கை ஆகியவற்றோடு அவர்களிருப்பதற்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனால் விண்பெட்டகத்திலிருக்கும் அனைத்து இருக்கை, படுக்கை, மேசை போன்றவற்றில் குழப்பம் விளைவிக்கும் வகையில் வார்களும் வார்ப்பூட்டுகளும் இருக்கும். இவ்வமைப்பின் மிக முக்கியமான விடயம், விண்பெட்டகத்திலுள்ள விண்ணோடிகள் புவியோடு (கட்டுப்பாட்டு மையத்தோடு) தொடர்புகொள்வதற்குத் தேவையான தொலைத்தொடர்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.