விநாயகி
விநாயகி (Vināyakī), என்பவர், யானையின் தலையைக் கொண்ட இந்து சமயத்தை சார்ந்த பெண் தெய்வம் ஆவார்.[1] இவரது புராணங்களும் சின்னங்களும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்து வேதங்களில் இவரைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை. இந்த தெய்வத்தின் உருவங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.[2]
இவரது யானை உருவ அம்சங்கள் காரணமாக, இத்தெய்வம் பொதுவாக யானைத்தலையை உடைய ஞான கடவுளான விநாயகருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.[3] இவருக்கு நிலையான பெயர் இல்லாததால், பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். உதாரணமாக, ஸ்திரீ கணேசா ("பெண் விநாயகர்" [4] ), விநாயகி, கஜானனா ("யானை முகம்"), விக்னேசுவரி ("தடைகளின் எஜமானி") மற்றும் கணேசனி போன்றவை இவரது பெயர்களாக உள்ளது. இந்தப் பெயர்கள் அனைத்தும் விநாயகர், கஜானனா, விக்னேசுவரா மற்றும் விநாயகர் ஆகியோரின் பெண்ணிய வடிவங்கள் ஆகும். இந்த அடையாளங்கள் விநாயகரின் பெண்பால் வடிவமாக கருதப்படுகின்றன.[2]
விநாயகி சில சமயங்களில் அறுபத்து நான்கு யோகினிகள் அல்லது சப்தகன்னியர் தெய்வங்களின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறார். இருப்பினும், அறிஞர் கிருஷன் ஆரம்பகால சப்தகன்னியரில், யானைத் தலையையுடைய விநாயகி, விநாயகரின் பிராமண சக்தி, மற்றும் தாந்த்ரீக யோகி ஆகியவை மூன்று தனித்துவமான தெய்வங்கள் என்று நம்புகிறார்.[5]
சமண மற்றும் பௌத்த மரபுகளில், விநாயகி ஒரு சுதந்திர தெய்வமாக போற்றப்படுகிறார். பௌத்த படைப்புகளில், இவர் கணபதிஹிருதயா ("விநாயகரின் இதயம்") என்று அழைக்கப்படுகிறார்.[6]
படங்கள்
தொகுமுதன்முதலில் அறியப்பட்ட யானைத் தலையுடன் கூடிய விநாயகியின் தெய்வ உருவம் ராஜஸ்தானின் ரைரில் காணப்படுகிறது. இது கிமு முதல் நூற்றாண்டு முதல் பொ.ச. முதல் நூற்றாண்டு வரையிலான ஒரு சிதைந்த டெரகோட்டா தகடு ஆகும்.[4] இத்தெய்வத்தின் யானை முகத்தில் இருக்கும் தும்பிக்கை வலதுபுறம் திரும்பியுள்ளது. மேலும், இரண்டு கைகளைக் கொண்டுள்ளது. இதன் கைகளில் உள்ள சின்னங்களும் பிற அம்சங்களும் அழிந்துள்ளதால், தெய்வத்தை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை.[7]
விநாயகி சிற்பங்கள்
தொகுஇந்த தெய்வத்தின் மற்ற சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன.[4][7] விநாயகியின் மிகவும் பிரபலமான சிற்பங்களில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் பெடகாட் நகரத்திலுள்ள, சௌசத் யோகினி கோயிலில் நாற்பத்தியொன்றாவது யோகினியாக காணப்படுகிறது. இந்த தெய்வம் இங்கே ஸ்ரீ-ஐங்கினி என்று அழைக்கப்படுகிறது. இங்கே, விநாயகியின் வளைந்த இடது காலை யானை தலை கொண்ட விநாயகர் ஆதரிப்பது போல காணப்படுகிறது.
விநாயகியின் ஒரு அரிய உலோக சிற்பம் ஷிராலியின் சித்ராபூர் மடத்தில் காணப்படுகிறது. இங்கு, இவர், விநாயகரைப் போலல்லாமல் மெல்லிய தோற்றத்தில் காணப்படுகிறார். இவரது மார்பின் குறுக்கே பூணூல் எனப்படும் "புனித நூல்" காணப்படுகிறது. மேலும், இரண்டு கழுத்து ஆபரணங்களை அணிந்துள்ளார். இவருடைய இரண்டு முன் கைகள் அபயம் ("பயம்-இல்லை") மற்றும் வரத (வரம் கொடுக்கும்) முத்திரைகளில் (சைகைகள்) உள்ளது. இவருடைய இரண்டு பின்புற கைகளில் ஒரு வாள் மற்றும் ஒரு கயிறு காணப்படுகிறது. இவருடைய தும்பிக்கை இடது பக்கம் திரும்பியுள்ளது. இந்த படம் வடமேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் / ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்ததாகவும், இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு மற்றும் தாந்த்ரீக கணபத்யா (விநாயகரை உச்சக் கடவுளாகக் கருதியவர் )பிரிவைச் சேர்ந்தது எனவும் கருதப்படுகிறது. அல்லது வாமச்சார (இடது கை) தெய்வத்தை வணங்கும் சாக்தம் பிரிவைச் சேர்ந்தது என்றும் கருத்து நிலவுகிறது.[8]