விரகனூர் மதகு அணை

தமிழக அணை

வைகை நீர்த்தேக்கம் அல்லது விரகனூர் மதகு அணை (Viraganoor dam) என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இது வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்றாவது அணையாகும். இந்த அணையானது மதுரை நகரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் மதுரை மற்றும் இராமநாதபுரம் இடையே உள்ள இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 49 இல் அமைந்துள்ளது . இந்த அணை தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் (பி. டபிள்யூ. டி) பராமரிப்பில் உள்ளது. அணைக்கு அருகில் ஒரு சிறிய பூங்காவும் பராமரிக்கப்படுகிறது. அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் நீரைப் பயன்படுத்துவதே அணையின் முக்கிய நோக்கம் ஆகும்.

வரலாறுதொகு

இது நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை தடுப்பணைக்கும் பார்த்திபனூர் மதகு அணைக்கு இடையே வைகை ஆற்றின் மீது கட்டப்பட்ட மதகணை ஆகும். நீரைத் தேக்கி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 87 கண்மாய்களை நிரப்பி, சுமார் 40,743 ஏக்கர் நிலம் பாசன வசதிக்காக விரகனுாரில் 1975 ஆம் ஆண்டு 18.77 லட்சம் ரூபாய் செலவில் இந்த மதகு அணை கட்டப்பட்டது.[1][2] 2010 ஆம் ஆண்டு 5 கோடி மதிப்பீட்டில் விரகனூர் மதகணைப் பூங்கா, மதுரை - மறுசீரமைப்புத் திட்டம் 2010 இன்படி தடுப்புத் தரைத் தளம் மறுசீரமைத்துப் புதுப்பிக்கப்பட்டது.[3]

பாசனப் பயன்பாடுதொகு

அணையில் வலது கால்வாய்க்கு மூன்று, இடது கால்வாய்க்கு இரண்டு, இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஆறு மற்றும் அணை குறுக்கே 18 மதகுகள் அமைத்து தண்ணீர் பகிரப்படுகிறது.[1] இந்த மதகு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், மானாமதுரை வழியே கீழப்பசலைக் கால்வாய் வரை வரும். இதன் இடது புறத்திலுள்ள பிரதானக் கால்வாய் மூலம் 48 கண்மாய்களுக்கும், வலது புறத்திலுள்ள பிரதானக் கால்வாய் மூலம் 50 கண்மாய்களுக்கும் நீர் கிடைக்கும். இறுதியாக ராமநாதபுர மாவட்டத்திலுள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு மீதி நீர் வந்தடையும்.[4] வலது தலை மதகு மூலம் பிரம்பனுார், திருப்புவனம், கொந்தகை, மானாமதுரை வரை 27,080 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இடது தலை மதகு பகுதி மூலம் சக்கிமங்கலம், சக்குடி வரை 13,662 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.[5] மேலும் இந்த மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை 72 குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.[6] கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வைகை பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்குப் பொதுப்பணித் துறையினரால் நீர் திறந்துவிடப்பட்டது.[7] துவரிமான் முதல் விரகனுார் வரை 120 இடங்களில் மழைநீர் ஆற்றிற்குள் செல்வதற்காக வரத்து கால்வாய்கள் உள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் கழிவு நீர்க் கால்வாயாக மாறிவருகின்றன.

பூங்காதொகு

அணைக்கட்டுக்கு அருகே ஏறத்தாழ மூன்றரை ஏக்கரில் இங்கு அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பூங்கா அமைக்கப்பட்டு, மதுரையின் முக்கியச் சுற்றுலா தலமாக இருந்தது. அணை முகப்பில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட யானை சிலை, செயற்கை நீரூற்று, ஆற்றின் குறுக்கே நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், சிமெண்ட் நாற்காலிகள் போன்றவை இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இங்குப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா வருவர் மேலும் சினிமா படப்பிடிப்பும் நடந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டு வக்கில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து போன நிலையில் பூங்காவின் பராமரிப்பு கைவிடப்பட்டு, முள்செடிகள் சூழ்ந்த பகுதியாகிவிட்டது.[2][8] இதனை மேம்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "வீணாகும் விரகனூர் மதகு அணை களை இழந்த சுற்றுலா தலம்; விரக்தியில் விவசாயிகள்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2026375. பார்த்த நாள்: 28 October 2019. 
  2. 2.0 2.1 "புதுப்பொலிவு பெறுமா விரகனூர் அணை பூங்கா?". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/2013/mar/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-652784.html. பார்த்த நாள்: 28 October 2019. 
  3. அரசாணை (நிலை) எண் 362. தமிழகப் பொதுப்பணித் துறை. 09 அக்டோபர் 2010. http://cms.tn.gov.in/sites/default/files/go/pwd_t_362_2010.pdf. 
  4. "விரகனூர் முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகையாற்றில் சீமைக்கருவேல மரங்கள், புதர்களை அகற்றுங்கள்! விவசாயிகள் வலியுறுத்தல்". தினகரன். http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=606797. பார்த்த நாள்: 28 October 2019. 
  5. "கழிவுநீர் சங்கமிக்கும் விரகனூர் மதகு அணை:40.742 ஏக்கர் பாசன பகுதி பாலைவனமானது". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1757679. பார்த்த நாள்: 28 October 2019. 
  6. "கனமழை: வைகையில் வந்த வெள்ளம்.... விவசாயிகள்... மக்கள் மகிழ்ச்சி". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-vaigai-river-flooded-with-water-185635.html. பார்த்த நாள்: 28 October 2019. 
  7. "மூன்று மாவட்டப் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!". விகடன். https://www.vikatan.com/news/agriculture/142201-water-released-from-vaigai-dam-for-irrigation-purposes. பார்த்த நாள்: 28 October 2019. 
  8. "பராமரிப்பின்றி விரகனூர் பூங்கா பரிதாபம்! பொதுப்பணித்துறை முன்வருமா?". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1222749. பார்த்த நாள்: 28 October 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரகனூர்_மதகு_அணை&oldid=3293258" இருந்து மீள்விக்கப்பட்டது