விராஜ் மென்டிஸ்
விராஜ் மென்டிஸ் (Viraj Mendis, 1956 – 16 ஆகத்து 2024) ஓர் இலங்கை-செருமனிய செயற்பாட்டாளர்.[1] 1980-களில் இங்கிலாந்து, மான்செசுடர், ஹுல்மில் உள்ள அசென்சன் தேவாலயத்தில் புகலிட உரிமையைக் கோரினார்.
1973 அக்டோபரில் ஐக்கிய இராச்சியத்திற்கு 12-மாத கால மாணவர் நுழைவிசைவுடன் வந்திருந்து வந்திருந்தார், ஆனால் அவரது நுழைவிசைவு காலாவதியாகிய பின்னரும் அவர் இலங்கை திரும்பவில்லை. இவர் இலங்கைத் தமிழர் மற்றும் இங்கிலாந்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் குழுவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் தனக்கு ஆபத்து என்று கூறினார். 1986 திசம்பர் 20 அன்று அவர் நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து அசென்சன் தேவாலயத்திற்குள் ஓடி, புகலிட உரிமையைக் கோரினார். தேவாலயத்தின் முதல்வர் ஜான் மெத்துவென் என்பவரின் உதவியுடன் இரண்டு ஆண்டுகள் தேவாலயத்தில் தங்கினார். அவரது நாடுகடத்தலுக்கு எதிராக தேவாலயம் "விராஜ் மெண்டிஸ் பாதுகாப்பு பிரச்சாரத்தின்" மையமாக மாறியது. 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பர்னேஜ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அவரது ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டனர், அங்கு மாணவர்கள் மென்டிசுக்காக பெற்றோரின் உதவியைப் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மாணவர் ஒருவரின் பெற்றோர் மான்செஸ்டர் ஈவினிங் நியூசு என்ற பத்திரிகையைத் தொடர்பு கொண்டனர், பின்னர் அவரது கதையை த டெயிலி டெலிகிராப் பிரசுரித்தது; 1989 சனவரி 18 அன்று காவல்துறையினர் தேவாலயத்தை சோதனை செய்து மெண்டிசைக் கைது செய்தனர், இது ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்தது.[2]
மென்டிசு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். மென்டிஸ் தனது வழக்கு பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டதால், இலங்கை அரசாங்கம் தனக்கு தீங்கு விளைவிக்கத் துணியவில்லை என்று கூறினார்.[3] எட்டு பிரித்தானிய செயற்பாட்டாளர்கள் அவருடன் பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கைக்கு வந்தனர்.[4] பின்னர் அவர் செருமனியில் புகலிடம் பெற்றார், பிரெமனில் உள்ள பன்னாட்டு மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரானார். நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ள அகதிகளைப் பாதுகாப்பதிலும், இலங்கைத் தமிழர் விடுதலைக்காகவும் பணியாற்றினார்.[5][6]
இலங்கையில் இருந்தபோது, மென்டிஸ் தனது நண்பியான கரேன் ராபர்ட்சு என்பவரைத் திருமணம் புரிந்து, பலமுறை இங்கிலாந்துக்கு திரும்ப முடிந்தது.[6][7] இருப்பினும், 2010 இல், ஜான் மெத்துவெனின் இறுதிச் சடங்கிற்கு அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.[6]
2018 ஆம் ஆண்டில், மெண்டிசின் அமைப்பு "மோசடி, பொய்யான ஆவணங்கள், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல்" ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 13 ஆர்வலர்களைப் (இவர்களில் 12 பேர் தமிழர்) பாதுகாக்க ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தை நடத்தியது. அந்த ஆண்டு சூன் மாதம், அந்தப் 13 பேரும் குற்றவாளிகள் அல்ல என்று சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து இலங்கை அரசு அவரைத் 'தீவிரவாதியாகப்' பட்டியலிட்டது.[8]
விராஜ் மென்டிசு 2024 ஆகத்து 16 அன்று செருமனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Reissmann, Karen (2024-08-27). "Obituaries: Viraj Mendis, 1956-2024". Socialist Worker. Archived from the original on 2024-08-27.
- ↑ "Mr Viraj Mendis". Parliamentary Debates (Hansard). House of Commons. 1989-01-18. col. 334–347.
- ↑ "Exile returns to his 'sanctuary'". BBC News. 2004-09-14. Archived from the original on 2023-12-24.
- ↑ Shifrin, Tash (2004-09-21). "Mendis returns to Manchester". தி கார்டியன். Archived from the original on 2024-07-05.
- ↑ Jafferjee, Azra (2006-12-31). "Germany takes over EU, trouble for Lanka". The Sunday Times (Sri Lanka). Archived from the original on 2007-01-15.
- ↑ 6.0 6.1 6.2 Thompson, Dan (2010-08-02). "Viraj Mendis banned from funeral of priest who sheltered him". Manchester Evening News. Archived from the original on 2013-04-20.
- ↑ "Viraj returns to his refuge". Manchester Evening News. 2007-02-15. Archived from the original on 2021-10-03.
- ↑ "Swiss legal debacle "triggered Sri Lanka's latest terrorists list"". Journalists for Democracy in Sri Lanka. 2019-08-02. Archived from the original on 2019-08-02.
- ↑ Timan, Joseph (2024-08-21). "Former asylum seeker who took refuge in Manchester church for two years dies". Manchester Evening News. Archived from the original on 2024-08-22.
- ↑ Jayapalan, Athithan (2024-08-18). "Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle". தமிழ்நெட். Archived from the original on 2024-08-22.