விலாசம் (சிற்றிலக்கியம்)

விலாசம் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.[1] விலாச இலக்கிய வகைகளில் அதிகம் வசனங்கள் மற்றும் பாடல்களும் கொண்டவை இருப்பதால் விலாச நாடகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

சொல்லிலக்கணம்

தொகு

"விலாசம்' என்பதற்கு "விரிவாக உரைப்பது' என்பது பொருளாகும். இச்சொல்லுக்கு விளையாட்டு, குறியீடு, அழகு எனப் பொருள் தருகிறது கழகத் தமிழ் அகராதி.[1]

வரையரை

தொகு

சக்திபெருமாள் எழுதிய தமிழ் நாடக வரலாறு நூலில் இது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

இந்நூற்றாண்டில் (கி.பி.19) நூற்றுக்கணக்கான நாடகங்கள் இயற்றப்பட்டு அவை புற்றீசல்கள் போலக் குறுகிய கால அளவே வாழ்ந்து மறையலாயின. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது தலைவியின் புகழைச் சிறப்பித்துப் பேசும் நாடகம் விலாசம் எனப்பட்டது. அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம் என்பன அவ்வாறு பெயர் பெற்றவை

வீரமாமுனிவர் தன்னுடைய சதுரகராதி நூலில் "அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள்களை இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் பாடுவது பவனி விலாசம் என்று கூறியுள்ளார்.[1]

சிற்றிலக்கியம்

தொகு

விலாச இலக்கண வகையானது சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். ஆனால் தமிழின் 96 வகையான மரபுசார் சிற்றிலக்கியத் தொகைகள் பலவற்றில் இது இடம் பெறவில்லை. சதுரகராதி, பொருட்டொகை நிகண்டு ஆகிய பிரபந்தத் தொகைகள் மட்டுமே இதனைக் குறிப்பிடுகின்றன. கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடக நூல்களில் காணக்கிடைக்கிறது.

விலாச இலக்கிய வகைகள்

தொகு

நாடகங்களின் அமைப்பில் பெரும்பாலான விலாசங்கள் கிடைக்கப்பெற்றாலும், கலி வெண்பாவால் மட்டுமே அமைந்த விலாசங்களும் கிடைத்துள்ளன. இதனால் நாடக இலக்கிய வகையில் மட்டுமே விலாசங்களை ஒதுக்கிவைக்க இயலாது. பல்வேறு வகையான யாப்புகளில் எழுதப்பட்ட விலாசங்களும், சிலேடை, மடக்கு, திரிபு போன்ற அமைப்புடைய விலாசங்களும் கிடைத்துள்ளன.[1]

பல விலாச நாடகங்கள் மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளன. சில விலாசங்கள் பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும், இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்துளன. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.

விலாச இலக்கிய காலம்

தொகு

1950 இல் பதிப்பிக்கப்பட்ட சங்கர விலாசத்தின் நூலின் பதிப்புரையில், அது 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் விலாசங்கள் எழுதப்பட்டன என்பது புலனாகிறது. இப்போது கிடைக்கும் விலாசங்களில் மிகப்பெரும்பாலானவை 17-19 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன.[1]

விலாசம் இலக்கியங்கள் - முனைவர் ச.வனிதா தொகுத்திருக்கும் நூல்.[1]

விலாச நூல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 "இந்தவாரம் கலாரசிகன்". தினமணி. 2 ஆகத்து 2015. Archived from the original on 18 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாசம்_(சிற்றிலக்கியம்)&oldid=2119542" இலிருந்து மீள்விக்கப்பட்டது