வில்கெம் எடுவர்டு வெபர்

வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber,இடாய்ச்சு: [ˈveːbɐ]; 24 அக்டோபர் 1804 – 23 சூன் 1891) செருமானிய இயற்பியலாளர் ஆவார். இவர் கார்ல் காசுடன் இணைந்து முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்தவர். காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகுக்கு இவரது பெயர், வெபர், இடப்பட்டுள்ளது.

வில்கெம் வெபர்
பிறப்புவில்கெம் எடுவர்டு வெபர்
அக்டோபர் 24, 1804(1804-10-24)
விட்டென்பர்கு, சக்சனி, புனித உரோமைப் பேரரசு
இறப்பு23 சூன் 1891(1891-06-23) (அகவை 86)
கோட்டிஞ்சென், அனோவர், பிரசியா
தேசியம்செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம்
ஹால் பல்கலைக்கழகம்
லீப்சிக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹால் பல்கலைக்கழகம்
கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யோகன் சலோமொ கிறிஸ்டஃப் இசுவீகெர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எர்னஸ்ட் அப்பெ
பிரெட்ரிக் வில்கெம் ஜார்ஜ் கோல்ரோச்
எடுவர்டு ரீக்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்காட்லோப் பிரெகெ
ஆர்தர் சூஸ்டர்
அறியப்படுவதுஒளியின் வேகத்திற்கு முதன்முதலாக
'c' குறியீட்டைப் பயன்படுத்தியவர்

காந்தவியல் ஆய்வுகள்
மின்னியல் இயக்கமானி
தந்தி
விருதுகள்கோப்லி பதக்கம் (1859)
மட்டேயுக்கி பதக்கம் (1879)
குறிப்புகள்
காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

இளமைக்காலம் தொகு

வெபர் செருமனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815இல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது வகுப்புகளில் சிறந்து விளங்கிய வெபருக்கு முனைவர் பட்டத்துடன் பேராசிரியராகப் பணியும் அதே பல்கலைக்கழகத்தில் கிடைத்தது.

பணிவாழ்வு தொகு

1831இல், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பரிந்துரையில், தமது 27வது அகவையிலேயே கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார். தமது மாணவர்களை தாம் விளக்கும் பாடங்களையும் சோதனைகளையும் தவிர்த்து கல்லூரி ஆய்வகத்தில் கட்டணமேதுமின்றி அவர்களே சோதனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். தமது இருபதாவது அகவையிலேயே தம் உடன்பிறப்பான எர்னஸ்ட் வெபருடன் (இவர் லைப்சிக்கில் உடற்கூற்றியல் பேராசிரியராக இருந்தார்) இணைந்து அலைக் கோட்பாடும் பாய்மத்தன்மையும் என்ற நூலை எழுதினார்; இது மிகவும் புகழ்பெற்றது. ஒலியியல் இவருக்கு மிகவும் விருப்பமான அறிவியல்துறையாக இருந்தது. இத்துறையில் பல நூல்களை எழுதினார். தமது தம்பி எடுவர்டு வெபருடன் இணைந்து மனிதர்கள் நடப்பதின் இயக்கவியல் என்ற நூலை எழுதினார். இந்த நூல்கள் 1825க்கும் 1838க்கும் இடையே எழுதப்பட்டன. 1833இல் வெபரும் காஸும் இணைந்து முதல் மின்காந்த தந்தியை தங்கள் ஆய்வகத்திலிருந்து கொட்டிஞ்சென் இயற்பியல் கழகம் வரை நிறுவினர்.

திசம்பர் 1837இல் அரசியல் காரணங்களுக்காக அனோவர் அரசு வெபரை பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. சிலகாலம் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுக்குச் சென்றிருந்த வெபர் லைப்சிக்கில் இயற்பியல் பேராசிரியராக 1843 முதல் 1849 வரை பணிபுரிந்தார். 1849இல் கொட்டிஞ்சென் மீண்டும் இவரை பணிக்கமர்த்தியது. கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் மற்றும் கார்ல் பெஞ்சமின் கோல்ட்ஸ்மிட்டுடன் இவர் எழுதிய புவியின் காந்தப்புலத்தின் நிலப்படத் தொகுப்பு : கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டது (Atlas des Erdmagnetismus: nach den Elementen der Theorie entworfen)[1][2] மிகவும் முக்கிய ஆக்கமாகும். இவரது முயற்சியாலேயே காந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. காஸுடன் இணைந்து காந்தவியலில் ஆய்வுகள் மேற்கொண்டார்; 1864இல் மின்னியக்க விகிதசம அளவைகள் என்ற நூலில் மின்னோட்டத்தை அளப்பதற்கான நெறிமுறைகளை விவரித்திருந்தார். வெபர் கொட்டிஞ்செனில் மரணமடைந்தபோது மேக்ஸ் பிளாங்க், மாக்ஸ் போர்ன் புதையுண்டிருந்த அதே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.

1855இல் அரச சுவீடிய அறிவியல் கழக வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1856இல் ருடோல்ஃப் கோல்ரோச்சுடன் இணைந்து நிலை மின்னியலுக்கும் மின்காந்தவிசைக்கும் இடையேயான விகிதம் அப்போது கண்டறிந்திருந்த ஒளியின் வேகத்திற்கு இணையான எண்ணாக அமைந்திருந்ததை நிரூபித்தார். இந்த நிரூபணமே பின்னர் ஒளியும் மின்காந்த அலைகளே என்ற மக்சுவல்லின் உய்த்துணர்விற்கு காரணமாயிற்று. மேலும் இது மின்னியக்கவியலுக்கும் வித்திட்டது. மேலும் 1856இல் வெபரும் கோல்ரோச்சும் தங்கள் ஆயவுக்கட்டுரை ஒன்றில் முதன்முதலாக ஒளியின் வேகத்திற்கு "c" என்ற குறியீட்டைப் பயன்படுத்தினர். காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகு வெபர் (குறியீடு: Wb) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு