வில்லார்டு பாயில்

கனடிய இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்

வில்லார்டு இசுட்டெர்லிங் பாயில் (Willard Sterling Boyle, வில்லார்ட் ஸ்டேர்லிங் பொயில், ஆகஸ்டு 19, 1924 - மே 7, 2011) ஒரு கனடிய அறிவியலாளர். இவர் மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) என்னும் நுண்மிண்மக் கருவியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். அக்டோபர் 6, 2009 அன்று அறிவித்த 2009 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இக்கண்டுபிடிப்புக்காக இவர் தன் உடன் கண்டுபிடிப்பாளராகிய சியார்ச்சு இ. சுமித் (George E. Smith) என்பவரோடும் ஒளிநார் தொலைதொடர்புத் துறையில் ஒளிநார் பண்புகள் பற்றி ஆய்வு செய்த சார்லசு காவோ (Charles Kao) என்பவரோடும் சேர்ந்து பெற்றார்[2].

வில்லார்டு எசு. பாயில்
Willard S. Boyle
பிறப்புஆகத்து 19, 1924 (1924-08-19) (அகவை 100)
ஆம்ஃகெருசுட்டு, நோவா இசுக்கோசியா (Amherst, Nova Scotia), கனடா
இறப்புமே 7, 2011(2011-05-07) (அகவை 86)
வாலசு, நோவா இசுக்கோசியா [1]
வாழிடம்கனடா
குடியுரிமைகனடா
ஐக்கிய அமெரிக்கா
துறைபயன்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்பெல் ஆய்வகங்கள்
கல்வி கற்ற இடங்கள்மெக்கில் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமின்மம் வழிந்துநகர் கருவி
Charge-coupled device
விருதுகள்IEEE Morris N. Liebmann Memorial Award
Draper Prize
Nobel Prize in Physics (2009)

வாழ்க்கை

தொகு

இவர் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார்[3]. இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார்[3] . பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943 இல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார்.[3]. பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947 இல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948 இல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950 இல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் (பி.எச்.டி) பட்டமும் பெற்றார்.

பணிவரலாறு

தொகு

பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (ரேடியேசன் லாபு,Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார்[3] 1953 இல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962 இல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார், குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964 இல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார்.

1969 இல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973 இல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974 இல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006 இல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள்.

பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார்.[3]

இவற்றையும் பார்க்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Jeffrey, Davene. "Willard Boyle, Nova Scotian Nobel Prize winner, dies at 86". The Chronicle Herald.ca. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
  2. The Nobel Prize in Physics 2009, Nobel Foundation, October 6, 2009, பார்க்கப்பட்ட நாள் 2009-10-06
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Baxter, Joan (16 February 2006). "A modest man's big idea Digital chip changed the world". The Toronto Star: A3. http://pqasb.pqarchiver.com/thestar/access/987663601.html?dids=987663601:987663601&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Feb+16%2C+2006&author=Joan+Baxter&pub=Toronto+Star&edition=&startpage=A.03&desc=A+modest+man%27s+big+idea+Digital+chip+changed+the+world. பார்த்த நாள்: 2009-10-06. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லார்டு_பாயில்&oldid=3352456" இலிருந்து மீள்விக்கப்பட்டது