வில்லியம் இசுடீபன் அட்கின்சன்
வில்லியம் இசுடீபன் அட்கின்சன் (William Stephen Atkinson) பிரித்தானியாவைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சியியல் நிபுணர் ஆவார். வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவில் பணியாற்றினார். [1] 1820 ஆம் ஆண்டு செப்டமபர் மாதம் இவர் பிறந்தார்.
இங்கிலாந்தின் சபோல்கில் மாகாணத்தைச் சேர்ந்த தாமசு டி. அட்கின்சனின் மூத்த மகனாக இவர் பிறந்தார். இவரது தந்தை ருக்லி நகரத்தில் பாதிரியாராக ஆனபோது, கனாக் சேசு பகுதியின் இயற்கையில் இவர் ஆர்வம் காட்டினார். பிரித்தானிய வண்ணத்துப் பூச்சியினங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1839 ஆம் ஆண்டு முதல் கேம்பிரிட்சு, டிரினிட்டி கல்லூரிக்குச் சென்ற இவர் 1843 ஆம் ஆண்டு 26 ஆவது முதல் வகுப்பு தேர்ச்சியாளர் என்ற சிறப்புடன் வெளிவந்தார். [2] பின்னர் இவர் ஒரு கட்டிடப் பொறியாளராக மாறினார். ஆனால் மார்டினியர் கல்லூரியில் இவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு நவம்பரில் கல்கத்தாவுக்குச் சென்றார். கிழக்கு வின்ச் பகுதியின் பாதிரியார் மகள் மான்ட்போர்டை மணந்தார்.
கல்கத்தாவில் இவர் ஆசியச் சமூகத்தில் சேர்ந்தார், பின்னர் இதன் செயலாளராக உயர்ந்தார். வங்காளத்தின் வண்ணத்துப்பூச்சி இனங்களில் ஆர்வம் காட்டினார். அந்துப்பூச்சிகளை வளர்க்கத் தொடங்கினார். பூச்சியியல் நிபுணர் என்றி திபாட்சு இசுடைண்டனுடன் தொடர்பு கொண்டார். 1857 ஆம் ஆண்டு பூச்சியியல் சங்கத்தில் உறுப்பினரானார். 1860 ஆம் ஆண்டு வங்காளத்தில் பொதுக் கல்வி இயக்குநர் பொறுப்புக்கு வந்தார். டார்சிலிங்கிற்கு சென்று மேற்பார்வை செய்தார். அங்கு விரிவான வண்ணத்துப் பூச்சி வகைகளை சேகரித்தார். கல்கத்தா தாவரவியல் பூங்காவின் தாமசு ஆண்டர்சனுடன் இணைந்து சிக்கிமிற்கு பயணம் மேற்கொண்டார். 1865 ஆம் ஆண்டு இவர் புதிய இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலர் ஆனார். பூச்சியல் நிபுணர் பிரடெரிக் மூருடன் வில்லியம் கடிதப் பரிமாற்றத்தில் இருந்தார்.
அட்கின்சன் கல்கத்தாவில் பல ஆண்டுகள் வசித்து வந்தார். பல்வேறு சித்திரங்களையும் மாதிரிகளையும் சேகரித்தார். இவரது தொகுப்பு வில்லியம் சாப்மேன் எவிட்சனால் மரணத்திற்குப் பின்னர் வாங்கப்பட்டது. இத்தொகுப்பு இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. பிரடெரிக் மூர் மற்றும் எவிட்சன் ஆகியோர் இவரால் சேகரிக்கப்பட்ட பல புதிய இனங்களை விவரித்து வெளியிட்டனர். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Grote, Arthur (1879). Introductory note in the descriptions of his collection by Hewitson and Moore.
- ↑ Atkinson, William Stephen in Venn, J. & J. A., Alumni Cantabrigienses, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 10 vols, 1922–1958.
- ↑ Hewitson, William C.; Moore, Frederic (1879). Descriptions of New Indian Lepidopterous Insects: From the Collection of the Late Mr. W.S. Atkinson, M.A., F.L.S., &c. The Asiatic Society of Bengal. இணையக் கணினி நூலக மைய எண் 9625544.
புற இணைப்புகள்
தொகு- Works by or about William Stephen Atkinson at Internet Archive
- Works by or about William Stephen Atkinson in libraries (WorldCat catalog)