வில்லிவாக்கம் அமிர்தவல்லித் தாயார் உடனுறை சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில்

அமிர்தவல்லித் தாயார் உடனுறை சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் சென்னை, வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிருட்டிணன் கோயிலாகும்.

சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:வில்லிவாக்கம்
சட்டமன்றத் தொகுதி:வில்லிவாக்கம்
கோயில் தகவல்
மூலவர்:தாமோதரப் பெருமாள்
தாயார்:அமிர்தவல்லித் தாயார்

பெயர்க்காரணம்

தொகு

யசோதை தன் மகன் கிருஷ்ணனை வெளியில் செல்லாதபடி இடுப்பில் கயிற்றால் கட்டி அதை உரலில் கட்டிவைத்தாள். ஆனாலும் கிருஷ்ணன் உரலையும் சேர்த்து இழுத்துச் சென்று இரண்டு அசுரர்களுக்கும் விமோசனம் கொடுத்தான். இவ்வாறு கயிற்றால் கட்டும்போது கயிறு அழுத்தியதால் கிருஷ்ணனின் வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. எனவே, கிருஷ்ணன் தாமோதரன் என அழைக்கப்படுகிறான். ‘தாமம்’ என்றால் கயிறு, ‘உதரம்’ என்றால் வயிறு என்று பொருள். அழகாக, புன்னகை ததும்பக் காட்சி தருவதால் ‘சௌமிய’ தாமோதரப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

தொன்மவியல்

தொகு

வில்வலன், வாதாபி என்னும் இரு அரக்கர்கள் சிவ பக்தர்களைப்போல வேடம் பூண்டு, முனிவர்களை உணவு உண்ண அழைத்துவருவர். வில்வலன் மாய சக்தியால் தன் தம்பியையே உணவாக சமைத்து முனிவர்களுக்கு விருந்தளிப்பான். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் வாதாபியை வெளியே வாரச்சொல்லி அழைப்பான். அப்போது, உணவருந்திய முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தம்பி வெளியே குதிப்பான். இதனால் முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.

அகத்தியர் வந்தபோது வில்வலனும் வாதாபியும் வழக்கம்போல் அவரையும் விருந்துக்கு அழைத்தனர். தம்முடைய ஞானக்கண்ணால் அசுரர்களின் சூழ்ச்சியை அறிந்த அகத்தியர், விருந்துண்டதும் தம் வயிற்றைத் தடவி உணவைச் செரிக்கச் செய்துவிட்டார். பின்னர் வில்வலனும் அழிக்கப்பட்டான். இதனால் பிரம்மஹத்தி தோஷத்தைப் பெற்று அதைத் தீர்க்க படிகலிங்கத்தை வழிபட்டு பரிகாரம் அடைந்த தலம் என்று இத்தலம் குறித்து கூறப்படுகிறது. இக்கோயிலில் அருகில் அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

வழிபாடு

தொகு

ஆண்டு தோறும் தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி, திதி ஆகிய நாட்களில் பெருமாளும் தாயாரும் தோட்டத்தில் உலாவந்து, மாலை ஏழு மணிக்கு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. கீழப்பாவூர் கி. ஸ்ரீமுருகன் (15 நவம்பர் 2018). "வாத்சல்யம் வழங்கும் தாமோதரப் பெருமாள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2018.