வீளை என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. உல்லாசமாக உலவும் காலத்தில் சிறுவர் வீளை ஒலியை இசையுடன் எழுப்பி மகிழ்வர். வாயைக் குவித்து எழுப்பும்போது அது இன்னிசையாக வரும். வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை மட்டும் மடித்து வைத்தோ எழுப்பப்படும் வீளை ஒலி பேரொலியாக இருக்கும். விரல் வைத்து ஒலிக்கும் வீளையைச் சங்கப்பாடல்கள் மடிவிடு வீளை எனக் குறிப்பிடுகின்றன.

வீளையடிக்கும் சிறுவன், ஃவிராங்கு துவெனெக்கு (1872)

காதலன் காதலியின் கவனத்தை ஈர்க்க வீளையிசையைப் பயன்படுத்துவதும் உண்டு. தொழிலுக்குப் பயன்படும் வீளையிசை பற்றிச் சங்கப்பாடல்கள் சுவையான செய்திகளைத் தருகின்றன.

வீளை ஒலி தொகு

ஆண்பருந்து பெண்பருந்தை அழைக்கும் ஒலி[1][2][3] அம்பு பாயும் ஒலி,[4] ஆகியவை வீளை ஒலிக்கு உவமைகள்.

வீளை பயன்பாடு தொகு
 • உமணர் உப்புவண்டி ஓட்டும்போது வீளை ஒலி எழுப்புவர். அது வண்டி இழுக்கும் எருது கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியோடு சேர்ந்து ஒலிக்கும். பாலை நில வழியில் பொருள்தேடச் செல்வோருக்கு இந்த ஒலிகள் ஆள் துணை இருக்கிறது என்னும் ஆறுதலைத் தரும்.[5]
 • இடையனின் வீளை ஒலியைக் கேட்டதும் ஆட்டுக்குட்டியைக் கவர வந்த நரி பயந்து ஓடிவிடும்.[6]
 • காட்டில் ஆடு மேய்க்கும் இடையன் மேயும் ஆடுகளை அழைத்துத் திருப்புவதற்காக எழுப்பும் வீளை ஒலி கேட்டு முயல் பயந்து ஓடி புதரில் ஒளிந்துகொள்ளும்.[7]
 • எயினர் காட்டு மாடுகளைப் பயந்தோடச் செய்ய வீளையொலி எழுப்புவர்.[8]
 • யானையை ஓட்ட வீளை ஒலியைப் பயன்படுத்துவர்.[9]
 • மான் வேட்டை ஆடுவோர் பெண்மானைக் கண்டதும் அதனை வேட்டையாடாமல், அதன் ஆண்மானைக் கண்டு வேட்டையாடுவதற்காக வீளை ஒலி எழுப்புவர்.[10]
வீளை கூடாது தொகு
 • நன்னெறியாளர் சொல்லித்தரக் கூடாத கலைகளில் ஒன்று வீளை என்கிறது ஆசாரக்கோவை.[11]

அடிக்குறிப்பு தொகு

 1. யாஅத்து
  ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
  வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
  வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் (அகநானூறு 33)
 2. கரும்பருந்துகள் இணைசேரும்போது எழுப்பும் வீளை ஒலிகள்.ஆங்காங்கு:Rotaryhkwest.
 3. Common Black-shouldered Kite (Elanus caeruleus).இராம் கோபால் சோனி.
 4. வீளை அம்பின் விழுத் தொடை மழவர் (அகநானூறு 131)
 5. உமணர்
  ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
  அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
  திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
  மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
  ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
  ஏமம் செப்பும் (அகநானூறு 191)
 6. தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
  மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
  தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
  முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் (அகநானூறு 274)
 7. காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
  மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
  மன்ற இரும் புதல் ஒளிக்கும் (அகநானூறு 394)
 8. கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை
  விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
  நெடுவிடை அத்தம் (கைந்நிலை 13)
 9. மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
  கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக
  விரும்பிணர்த் தடக்கை யுருநிலஞ் சேர்த்திச்
  சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு
  மையல் வேழம் (குறிஞ்சிப்பாட்டு 161)
 10. வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
  நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
  புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
  சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
  குருதியொடு பறித்த செங்கோல் வாளி (குறுந்தொகை 272)
 11. தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
  விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
  உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
  பயிற்றார் - நெறிப்பட்டவர் (ஆசாரக்கோவை 53)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீளை&oldid=3175910" இருந்து மீள்விக்கப்பட்டது