ஷா பானு சீவனாம்ச வழக்கு

ஷா பானு சீவனாம்ச வழக்கு, ஷா பானு என்ற 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு துரத்திவிட்டார். 1978 ஆம் ஆண்டில். ஷா பானு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தன்னுடைய கோரிக்கையில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் இசுலாமிய சரியத் சட்டப்படி தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாமிய சரியத் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலமான மூன்று மாதம் சீவனாம்சம் வழங்கப்பட்டுவிட்ட்து. மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் பணம் எனும் மணக்கொடையாக பெற்ற தொகையை தான் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டதால், ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டார்.

நீதிமன்ற தீர்ப்புகள்

தொகு

வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்தியர் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டில் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 ஆக உயர்த்தியது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை 23 ஏப்ரல் 1985 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.[1] இத்தீர்ப்பை இந்திய மகளிர் அமைப்புகள் வரவேற்றது. ஆனால் இசுலாமிய மத அமைப்புகள் எதிர்த்தன.

சட்டத் திருத்தம்

தொகு

இசுலாமிய சரியத் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இசுலாமிய அமைப்புகள் இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்தது.[2] ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இசுலாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் நாடாளுமன்றத்த்தில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 கொண்டு வந்தார்.[3]

இச்சட்டத்தின்படி தலாக் செய்யப்பட்ட பெண்னின் உறவினர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவ:ளுடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம்

தொகு

ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு கொண்டு வந்த முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டத்தால், கணவனால் திருமண முறிவு அடைந்த இசுலாமிய பெண்கள், மற்ற சமயத்தை சார்ந்த திருமண முறிவு ஆன பெண்கள் போன்று ஜீவனாம்சம் பெற வழியில்லாது போயிற்று. இதனால் இசுலாமிய பெண்களுக்கு சமூக நீதி கிடைக்காது போயிற்று. எனவே அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கும் வண்ணம் இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் இயற்ற வேண்டும் என ஷா பானு சீவனாம்ச வழக்கின் தீர்ப்பின் போது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தங்கள் கருத்தை, இந்திய நடுவண் அரசுக்கு கூறியுள்ளது. இந்தியாவில் அனைத்து சமயத்தினருக்கான பொது சிவில் சட்டம் இயற்றுவதற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆதரவு அளித்துள்ளார்.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://indiankanoon.org/doc/823221/ Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985
  2. The Shah Bano legacy
  3. "THE MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON DIVORCE) ACT, 1986". Archived from the original on 2015-05-16. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  4. Kalam calls for uniform civil code

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_பானு_சீவனாம்ச_வழக்கு&oldid=3578868" இலிருந்து மீள்விக்கப்பட்டது