இசுப்புட்னிக் 3
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|
சுபுட்னிக் 3 என்பது ஒரு சோவியத் செய்மதி ஆகும். இது 1958 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பைக்கோனர் (Baikonur) ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது வளிமண்டலத்தின் மேற்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு ஆய்வுச் செய்மதி ஆகும். ஒலிப்பதிவுக் கருவியில் பழுது ஏற்பட்டதால், வான் அலென் கதிர்வீச்சுப் பட்டையை (Van Allen radiation belt) இது உணரத் தவறிவிட்டது.
1956 ஜூலை மாதத்தில் புவியைச் சுற்றி ஒரு செயற்கை மதி ஒன்றை வலம்வரச் செய்யும் திட்டம் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட போது, இந்த ஸ்புட்னிக் 3 என்று பின்னர் பெயரிடப்பட்ட செய்மதியே முதலாவதாக ஏவப்படுவதாக இருந்தது. ஸ்புட்னிக் 3 தயாராகும் முன்பே அதனை ஏவுவதற்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 தயார் நிலையில் இருந்தது. ஆனால் செய்மதி வேலை நிறைவு பெறாமல் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் சேர்கே கொரோலேவ் (Sergei Korolev) ஒப்பீட்டளவில் எளிமையான ஸ்புட்னிக் 1 ஐ முதல் செய்மதியாகச் செலுத்த முடிவு செய்தார். சுபுட்னிக் 2 உம் முன்னரே செய்து முடிக்கப்பட்டதால் அது இரண்டாவதாகச் செலுத்தப்பட்டது. சுபுட்னிக் 3 முடியும் வரை காத்திருந்தால், முதல் செய்மதியை ஏவிய நாடு என்ற பெயரை அமெரிக்கா தட்டிக்கொண்டு போய்விடும் என்று கோரோலேவ் பயந்தார்.
சுபுட்னிக் ஒரு தானியங்கி அறிவியல் சோதனைக் கூட விண்வெளியோடம் ஆகும். கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட இதன் உயரம் 3.57 மீட்டரும், அடி விட்டம் 1.73 மீட்டரும் ஆகும். இது 1,327 கிகி நிறை உடையதாக இருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள், வளிமண்டலத்தின் மேற்புறம் பற்றிய பல தகவல்களை அனுப்பின. மேல் வளிமண்டலத்தின் அமுக்கம் மற்றும் அதன் அமைப்பு, மின்னேற்றம் கொண்ட துகள்களின் செறிவு, அண்டக் கதிர்களில் உள்ள பார அணுக்கருக்கள், காந்த மற்றும் மின்நிலையியல் புலங்கள், விண்கல் துகள்கள் என்பன குறித்த தகவல்கள் இவற்றுள் அடங்கும். புவியின் வெளிக் கதிர்வீச்சுப் பட்டைகள் இப் பறப்பின்போது உணரப்பட்டன. இவ் விண்வெளியோடம் 1960 ஏப்ரல் 6 ஆம் திகதிவரை சுற்றுப்பாதையில் இருந்தது.