எரா

(ஹீரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எரா (Hera, கிரேக்கம் Ἥρᾱ) என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் திருமணம் மற்றும் பெண்கள் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மகள் ஆவார். இவர் சியுசை மணந்த பிறகு விண்ணுலகத்தின் அரசி என்னும் பட்டம் பெற்றார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் எராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவருக்கு இணையான உரோமக் கடவுள் சூனோ ஆவார்.

எரா
இடம்ஒலிம்பிய மலைச்சிகரம்
துணைசியுசு
பெற்றோர்கள்குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரிபொசைடன், ஏடிசு, டிமிடர், எசுடியா மற்றும் சியுசு
குழந்தைகள்எரிசு, என்யோ, எபே, எய்லெய்தையா, எப்பெசுடசு மற்றும் ஏரெசு
அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் எராவின் கோவில்

பிறப்பு தொகு

தன் குழந்தைகளால் ஆபத்து வரும் என்று அறிந்த குரோனசு தனக்குப் பிறக்கும் எரா, இசுடியா, பொசிடான், ஏடிசு, எசுடியா ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கிவிடுகிறார். ஆறாவது குழந்தையாக பிறநந்த சியுசை அவரது தாய் ரேயா மறைமுகமாகக் காப்பாற்றுகிறார். சியுசு ஆடவனாக வளரந்த பிறகு தன் சகோதரர்களை குரோனசின் வயிற்றிலிருந்து விடுவித்து அவர்களுடன் சேரந்து டைட்டன்களை வீழ்த்தினார். அதன் பிறகு பொசிடான் மற்றும் ஏடிசு ஆகியோருடன் சியுசு மண்ணுலகை பகிர்ந்துகொண்டார்.

சியுசுடன் திருமணம் தொகு

சியுசு தன் சகோதரி எராவின் மேல் காதல் கொண்டார். முதலில் எரா சியுசின் காதலை ஏற்க மறுக்கிறார். பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்கும்படி நடித்தார். அந்த குயிலின் மீது இரக்கம் கொண்ட எரா அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அப்போது சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறினார். இதனால் வெட்கப்படும் எரா சியுசை மணந்துகொள்ள சம்மதித்தார்.

சியுசு பல பெண்கள் மேல் காமம் கொண்டு அவர்களுடன் உறவாடினார். அந்தப் பெண்களின் மீது பொறாமை கொண்ட எரா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பலவிதங்களில் சபிக்கிறார். மேலும் சியுசை எப்போதுமே கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருந்தார் எரா. இதனால் சியுசு எராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல உருவங்கள் எடுத்து பெண்களுடன் உறவாடினார்.

எராகில்சு தொகு

எராகில்சு என்பவர் சியுசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சு பிறப்பதை தடுப்பதற்காக அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலந்திசு தடுக்கிறார். இதனால் எராகில்சு பிறந்துவிடுகிறார். பிறகு எரா காலந்தீசை மர நாயாக மாறும்படி சாபமிட்டார்.

எராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க எரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் எராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். பிறகு அவற்றின் தலையை நசுக்கிக் கொன்றார்.

சியுசு எராவை ஏமாற்றி எராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த எரா எராகில்சை தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தார். அப்போது எராவின் மார்பில் இருந்து சிதறிய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் என்று கூறப்படுகிறது.

சில கதைகளில் எராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து எராகில்சு அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக எரா தன் அழகான மகள் ஏபேயை எராகில்சுக்கு மணமகளாகக் கொடுத்தார்.

 
எரா அனுப்பிய பாம்புகளுடன் விளையாடும் எராகில்சு

எக்கோ தொகு

கவிஞர் ஓவிட் எழுதிய மெடாமோர்போசசில் வரும் ஒரு கதையில் எக்கோ என்பவர் சீயசிடமிருந்து எராவை பிரிக்கும் வேலையை செய்து வந்தார். இதனை அறிந்தவுடன் எரா இனி மற்றவர்களின் வார்த்தைகளை எக்கோ எதிரொலிக்குமாறு சாபமிட்டார். இதன் மூலம் தான் எதிரொலி என்பதற்கு ஆங்கில சொல்லான எகோ என்பது வந்தது.

லெடோ, அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு தொகு

லெடோவின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று எரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடவுள் பொசிடான், அவளுக்கு நிலம் மற்றும் தீவு இரண்டும் அல்லாத டிலோசு என்னும் மிதக்கும் தீவிற்கு செல்லுமாறு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.

வேறு ஒரு கதையில் எரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே லெடோவிற்கு ஆர்டமீசு பிறந்துவிடுகிறார். பிறகு அவரே குழந்தை பிறப்பு கடவுளாக மாறி அப்பல்லோ பிறக்க உதவியதாகக் கூறப்படுகிறது.

செமிலி மற்றும் டயோனிசசு தொகு

சியுசால் செமிலி கர்ப்பமாக இருப்பதை அறிந்த எரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். பிறகு செமிலி கட்டாயப்படுத்தியதால் சியுசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு. அந்த குழந்தையே டயோனிசசு.

மற்றொரு கதையில் எரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் சியுசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

லாமியா தொகு

லிபியாவின் அரசியான லாமியாவை சியுசு காதலித்தார். இதனால் எரா லாமியாவை பேயாக மாற்றினார். மேலும் அவரது குழந்தைகளைக் கொன்றார். சில கதைகளில் எரா லாமியாவின் குழந்தைகளைக் கொன்றதால் அதைக்கண்ட லாமியா பேய் உருவிற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. லாமியாவால் தன் கண் இமைகளை மூட இயலவில்லை. அதனால் தன் இறந்த குழந்தைகளை பார்த்ததுக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சியுசு லாமியாவுக்குத் தன் இமைகளை மூடித் திறக்கும்படி வரம் தந்தார். லாமியா மற்ற தாய்மார்கள் மீது பொறாமை கொண்டு அவர்களின் குழந்தைகளைத் தின்றுவிடுவதாகக் கூறப்படுகிறது.

வம்சாவளி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. This chart is based upon Hesiod's Theogony, unless otherwise noted.
  2. According to Homer, Iliad 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
  3. According to Hesiod, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
  4. According to Hesiod, Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
  5. According to Hesiod, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
  6. According to Homer, Aphrodite was the daughter of Zeus (Iliad 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (Iliad 5.370–71), see Gantz, pp. 99–100.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரா&oldid=3093528" இலிருந்து மீள்விக்கப்பட்டது