ஹெலன் சர்ச்சில் கேண்டீ
ஹெலன் சர்ச்சில் கேண்டீ ( Helen Churchill Candee )(அக்டோபர் 5, 1858 – ஆகஸ்ட் 23, 1949) ஒரு அமெரிக்க எழுத்தாளரும், பத்திரிகையாளரும், உட்புற வடிவமைப்பாளரும், பெண்ணியவாதியும், புவியியலாளரும் ஆவார். 1912 இல் டைட்டானிக் மூழ்கியதில் இருந்து உயிர் பிழைத்தவராக அறியப்படுகிறார். மேலும் தென்கிழக்கு ஆசியாவின் பயண எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹெலன் நியூ யார்க் நகர வணிகர் ஹென்றி மற்றும் மேரி எலிசபெத் (ஹங்கர்ஃபோர்ட்) சர்ச்சிலின் மகளாக பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கனெக்டிகட்டில் கழித்தார். இவர் கனெக்டிகட்டின் நார்வாக்கைச் சேர்ந்த எட்வர்ட் கேண்டீயை மணந்தார், இவருக்கு எடித் மற்றும் ஹரோல்ட் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர். [1] இவரது கணவர் குடும்பத்தை கைவிட்ட பிறகு, ஹெலன் கேண்டீ தன்னையும் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டி, ஸ்க்ரிப்னர்ஸ் மற்றும் தி லேடீஸ் ஹோம் ஜர்னல் போன்ற பிரபலமான பத்திரிகைகளுக்கு எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தனக்கு மிகவும் பரிச்சயமான, பண்பட்ட நடத்தை நெறிகள் மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற தலைப்புகளில் எழுதினார். ஆனால் விரைவில் குழந்தை பராமரிப்பு, கல்வி மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற பிற தலைப்புகளில் எழுதினார். இவர் பல ஆண்டுகளாக ஓக்லஹோமாவில் வசித்து வந்தார், மேலும் அந்த பகுதியைப் பற்றிய இவரது கதைகள் இவரை ஒரு பத்திரிகையாளராக தேசிய முக்கியத்துவம் பெற உதவியது. நீண்ட பிரிவினைக்குப் பிறகு 1896 இல் கேண்டீ கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். [2]
தொழில்
தொகுவிற்பனையில் சாதனை படைத்த இவரது முதல் புத்தகமான ஹவ் வுமன் மே எர்ன் எ லிவிங் (1900) மூலம் கேண்டீ ஒரு பெண்ணியவாதி[3] என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவரது இரண்டாவது புத்தகமான ஆன் ஓக்லஹோமா ரொமான்ஸ் (1901), ஓக்லஹோமா பிரதேசத்தில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவித்த ஒரு நாவல் என்று அறியப்படுகிறது. [4]
ஒரு பிரபலமான இலக்கியவாதியாக, கேண்டீ வாஷிங்டன், DC க்கு குடிபெயர்ந்தார், அங்கு இவர் முதல் தொழில்முறை உட்புற வடிவமைப்பாளர்களில் ஒருவரானார். இவரது வாடிக்கையாளர்களில் அப்போதைய போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சன் மற்றும் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர் அடங்குவர். கேண்டீயின் புத்தகம், அலங்கார பாணிகள் மற்றும் காலங்கள் (1906), இவரது வடிவமைப்பு கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும், கவனமான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் முழுமையான நம்பகத்தன்மையுடையதாக இந்த புத்தகம் குறிப்பிடப்படுகிறது.
வாஷிங்டனில் இருந்தபோது, கேண்டீ ஒரு முனைப்பான சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார், பல சிவில் வாரியங்களில் பணியாற்றினார். ஜனநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது நண்பர்கள் தாராளவாத சீர்திருத்தவாதி வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் முதல் தீவிர பழமைவாத முதல் பெண்மணி ஹெலன் ஹெரான் டாஃப்ட் வரை பலவிதமானவர்கள். பெண்களின் உரிமைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், டாஃப்ட்ஸுடனான இவரது நட்பு நீண்ட காலமாக இருந்தது. இவர் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் அவரது மனைவியுடன் நெருக்கமாக இருந்தார்; கேண்டீயின் மிக முக்கியமான இரண்டு அலங்காரப் பணிகள் ரூஸ்வெல்ட்ஸிடமிருந்து வந்தவை. அவை முறையே, 1907 இல் முதல் பெண்மணியான லூயிஸ் XVI க்கு ஒரு ஜோடி நாற்காலிகளைத் தேர்ந்தெடுத்ததும் 1909 இல், வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் மறுவடிவமைப்பதற்காக கட்டிடக் கலைஞர் நாதன் சி. வைத் உடன் இணைந்து பொது ஆலோசனை நடைபெற்றதுமாகும். [5]
கேண்டீ கோர்கோரன் கேலரி ஆஃப் ஆர்ட்டின் அறங்காவலராகவும், தொல்பொருள் சங்கம் மற்றும் அமெரிக்கக் கலைக் கூட்டமைப்பு இரண்டிலும் உறுப்பினராகவும், தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் வாஷிங்டன் பிரிவின் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ஒரு பத்திரிகையாளராக தனது ஆரம்ப ஆண்டுகளில், குட் ஹவுஸ் கீப்பிங், ஹார்பர்ஸ் பஜார், தி லேடீஸ் ஹோம் ஜர்னல் மற்றும் வுமன்ஸ் ஹோம் கம்பேனியன் போன்ற பாரம்பரிய பெண்கள் ஆர்வமுள்ள பத்திரிகைகளுக்கு புனைகதை எழுதினார். கலை, கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவரது பிற்கால கட்டுரைகள் அமெரிக்கன் ஹோம்ஸ், அமெரிக்கன் மேகசின் ஆஃப் ஆர்ட் இன்டர்நேஷனல் ஸ்டுடியோ ஆகியவற்றில் வெளிவந்தன. அன்றைய பல முன்னணி இலக்கிய மற்றும் அரசியல் இதழ்ககளான அட்லாண்டிக் மந்த்லி, தி செஞ்சுரி, ஃபோரம், மெட்ரோபொலிட்டன் மற்றும் ஸ்க்ரிப்னர்ஸ் போன்றவற்றிலும் கேண்டீ பங்களித்தார்:
இவர் எட்டு புத்தகங்களை எழுதினார். அதில், நான்கு புத்தகங்கள் அலங்காரக் கலைகள் பற்றியது. இரண்டு பயணக் குறிப்புகள், ஒன்று அறிவுறுத்தல், மற்றுமொன்று நாவல் ஆகும். கேண்டீயின் புத்தகங்களில் மிகப்பெரிய விற்பனையானது தி டேப்ஸ்ட்ரி புக் (1912) ஆகும், இது பல பதிப்புகளில் வெளிவந்தது.
இறப்பு
தொகு1949 இல், 90 வயதில், மைனே, யார்க் துறைமுகத்தில் உள்ள தனது கோடைகால குடியிருப்பில் கேண்டீ இறந்தார். [6]
சான்றுகள்
தொகு- ↑ Biographical Cyclopedia of U.S. Women (1924)
- ↑ Linda D. Wilson, "Helen Churchill Candee: Author of an Oklahoma Romance," Chronicles of Oklahoma, 75:414 (1997)
- ↑ Woman's Who's Who of America (1914)
- ↑ "An Oklahoma Romance". Pearson's Magazine: pp. 452–53. April 1902.
- ↑ Helen Churchill Candee, Angkor the Magnificent (2008)
- ↑ New York Times, Aug. 24, 1949