2021 வங்கதேச படகு தீ விபத்து

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று இத்தீவிபத்து நடந்தது.

2021 வங்கதேசப் படகு தீ விபத்து (2021 Bangladesh ferry fire) வங்காளதேச நாட்டின் இயாகாகாதி மாவட்டத்திற்கு அருகில் சுகந்தா நதியில் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று தீப்பிடித்து எரிந்த விபத்தைக் குறிப்பதாகும்.[1] 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று எம்.வி. அவியான் -10 என்ற ஒரு பயணிகள் படகு இவ்விபத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 72 பேர் காயமடைந்துள்ளனர். [2][3]

2021 வங்கதேச படகில் தீ விபத்து
2021 Bangladesh ferry fire
நாள்24 திசம்பர் 2021; 3 ஆண்டுகள் முன்னர் (2021-12-24)
நேரம்விடியற்காலை 3 மணி. (வங்காளதேச சீர் நேரம்)
அமைவிடம்சுகந்தா நதி, இயகாகாதி மாவட்டத்திற்கு அருகில், தெற்கு வங்காளதேசம்
காரணம்இயந்திரத்தில் நெருப்பு
இறப்புகள்39
காயமுற்றோர்குறைந்தது 72
காணாமல் போனோர்தெரியவில்லை
படகில் பயணித்தோர்500 பேர்
உயிர்பிழைத்தவர்கள்100

பின்னணி

தொகு

வங்கதேச நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் ஆறுகளில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏழைகள் மத்தியில் படகுப் பயணம் ஒரு முன்னணி போக்குவரத்து வழிமுறையாகும்.[4] இந்நாட்டில் படகு விபத்துக்கள் பொதுவானவையாகும். கூட்ட நெரிசல், மோசமாக பராமரிக்கப்படும் கப்பல்கள், மோசமான பணியாளர் பயிற்சி மற்றும் அரசாங்க மேற்பார்வையின்மை ஆகியவற்றால் அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கின்றன என்று பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது.[2]

விபத்து

தொகு

மூன்று தளங்கள் உள்ள படகு எம்வி அவியான் -10 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று டாக்கா நகரிலிருந்து பர்குணா நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. 310 பயணிகளை அழைத்துச் செல்லும் திறன் கொண்ட இப்படகில் 500 பேருக்கும் மேற்பட்ட பயணிகள் அப்போது படகில் இருந்துள்ளனர். குறிப்பாக அவர்களில் பலர் வார இறுதிக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களாவர்.[5] அதிகாலை 3 மணியளவில் பயணிகளில் பலர் தூங்கிக்கொண்டிருந்தபோது, சுகந்தா நதியில் இயலோகாதி கடற்கரையில் தீ விபத்து ஏற்பட்டது.[2] பிரிசாலில் உள்ள தீயணைப்பு சேவை மற்றும் குடிமைத் தற்காப்பு துணை இயக்குநர் கமால் உதின் புயான் கூற்றின்படி, இயந்திர அறையில் தீ பரவி, படகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகத் தெரிகிறது.

தீ விபத்திற்கு முன்பு படகில் இயந்திர கோளாறுகள் இருந்ததாக பயணிகளில் ஒருவர் கூறியுள்ளார். பின்னர் இயந்திரத்தில் புகை வந்து பரவியுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தப்பிக்க சில பயணிகள் ஆற்றில் குதித்து நீந்தி கரைக்கு வந்தனர். 15 தீயணைப்பு அலகுகள் தீ விபத்து நடந்த 50 நிமிடங்களில் வந்தார்கள் என்று டெய்லி இசுடார் என்ற ஆங்கிலமொழி பத்திரிகை தெரிவித்துள்ளது. நிலைமை 5.20 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என பதிவாகியுள்ளது.[6] அடர்ந்த பனிமூட்டம் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது.

உள்ளூர் அதிகாரியின் கூற்றுப்படி, படகு அருகிலுள்ள கிராமத்தின் ஆற்றங்கரையில் நங்கூரமிடப்பட வேண்டும்.[5] தீயை அணைக்க நான்கு முதல் ஐந்து மணி நேரம் கடந்ததாக மாவட்ட முதன்மை நிர்வாகி இயோகர் அலி தெரிவித்தார். [5] படகு இயல்பு நிலைக்கு குளிர்விக்க மேலும் 8 மணி நேரம் ஆனது. [2] 37 சடலங்கள் மீட்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் மொய்னுல் இசுலாம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தீயில் சிக்கி இறந்தனர் அல்லது தப்பிக்கும் போது நீரில் மூழ்கினர். [7] காயமடைந்த 72 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஏழு பேர் கடுமையான தீக்காயங்கள் மற்றும் ஆபத்தான நிலையில் இருந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]

பின்விளைவு

தொகு

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி, மூன்று நாட்களுக்குள் அறிக்கை அளிக்க சிறப்புக் குழுவை வங்கதேச அரசு அமைத்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "வங்கதேச படகு விபத்தில் 40 பேர் உடல் கருகி பலி: 150 பேர் காயம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Massive ferry fire kills at least 39 in southern Bangladesh". AP NEWS (in ஆங்கிலம்). 2021-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  3. "வங்காளதேசம்: பயணிகள் படகில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு". Dailythanthi.com. 2021-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  4. 4.0 4.1 "Bangladesh ferry fire: Dozens killed near Jhalakathi" (in en-GB). 2021-12-24. https://www.bbc.com/news/world-asia-59777784. 
  5. 5.0 5.1 5.2 Welle (www.dw.com), Deutsche, Bangladesh: Dozens killed in ferry fire | DW | 24.12.2021 (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-12-24Welle (www.dw.com), Deutsche, Bangladesh: Dozens killed in ferry fire | DW | 24.12.2021, retrieved 2021-12-24
  6. "At least 38 dead after packed ferry catches fire in Bangladesh". The Independent (in ஆங்கிலம்). 2021-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  7. "At least 37 dead in Bangladesh ferry fire". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.