2022 கஞ்சூருகான் விளையாட்டரங்கு துர்நிகழ்வு
2022 அக்டோபர் 1 அன்று இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவாவின் மலாங்கில் கஞ்சூருகான் விளையாட்டரங்கில் நடந்த கால்பந்து கூட்டமைப்பு போட்டி ஒன்றின்போது தோற்ற அணியின் ஆதரவாளர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்தனர். இந்தக்கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையால் கூட்டநெரிசல் ஏற்பட்டு மிகக் கூடுதலானோர் உயிரிழந்தனர். அரேமா கால்பந்து கழகத்திற்கும் பெர்செபயா சுரபாயா அணிக்குமிடையேயான இந்தப் போட்டியில் அரேமா அணியினர் தோற்றனர். இதனை ஏற்கவியலாத அவ்வணியின் ஆதரவாளர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்து காவல்படையினருடன் கலவரத்தில் ஈடுபட்டனர். எதிர் அணி வீரர்களையும் தாக்க முற்பட்டனர். இதனைக் கட்டுப்படுத்த கலவரக் காவல்படையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். விளையாட்டரங்கில் இருந்த பார்வையாளர்களுக்கு இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட வெளியேற முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் 125 பேர் உயிரிழந்தனர் எனவும் நூற்றுக்கும் கூடுதலானோர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. இது கால்பந்து போட்டிநிகழ்வொன்றில் ஆசியாவில் நடந்த மிக மோசமான துர்நிகழ்வாக கருதப்படுகிறது.
நாள் | அக்டோபர் 1, 2022 |
---|---|
அமைவிடம் | கஞ்சூருகான் விளையாட்டரங்கு, மலாங், கிழக்கு ஜாவா, இந்தோனேசியா |
புவியியல் ஆள்கூற்று | 08°09′01″S 112°34′26″E / 8.15028°S 112.57389°E |
இறப்புகள் | 125[1] |
காயமுற்றோர் | 100+ |