2023 லூதியானா எரிவாயு கசிவு பேரழிவு

எரிவாயு கசிவு

2023 லூதியானா எரிவாயு கசிவு பேரழிவு (2023 Ludhiana gas leak disaster) 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இந்தியாவின் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் பதினோரு பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலர் வீடுகளில் சுயநினைவை இழந்தனர்.[1] [2]

2023 லூதியானா எரிவாயு கசிவு பேரழிவு
நாள்30 ஏப்ரல் 2023
அமைவிடம்லூதியானா, பஞ்சாப், இந்தியா
வகைஎரிவாயு கசிவு
இறப்புகள்11
காயமுற்றோர்9

பின்னணி

தொகு

தொழிற்சாலைகளில் இருந்து எரிவாயு கசிவுகள் ஏற்படுவது இந்தியாவில் சாதாரணமாக நிகழ்வதாகும். 2020 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள விசாகப்பட்டினம் நகரில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். 1984 ஆம் ஆண்டில், மத்திய நகரமான போபாலில் ஒரு பூச்சிக்கொல்லி ஆலையில் இரசாயன கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர், இது இன்றுவரை உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவாகக் கருதப்படுகிறது.[1]

காரணம்

தொகு

எரிவாயு கசிவுக்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. [1] கசிவுக்கான காரணம் மற்றும் மூலத்தைக் கண்டறிய நிபுணர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்றது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், தொழிற்சாலையில் இருந்து கசிவு ஏற்பட்டது என்றார். [3] அப்பகுதியில் அதிக அளவு ஐதரசன் சல்பைடு வாயு கண்டறியப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது என்று தி டிரிப்யூன் நாளிதழின் கருத்து தெரிவித்தது. தரைக்கு அடியில் உள்ள குழாய்கள், கம்பிகள் முதலியவற்றை ஆய்வு செய்வதற்காக ஆள் இறங்கக்கூடியவாறு தெருவில் அமைக்கப்பட்டுள்ள மூடியுடன் கூடிய புழைகளில் இருந்து வாயு பரவியிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் ஊகித்துள்ளார். லூதியானா துணை ஆணையர் சுரபி மாலிக், பி.டி.ஐ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, இத்தகைய குழிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும், சில இரசாயனங்கள் மீத்தேன் வாயுவுடன் வினையாற்றியிருக்கலாம் என்றும் கூறினார். [1]

நிவாரணம் மற்றும் மீட்பு

தொகு

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அதிகாரிகள் அந்த இடத்தை காலி செய்து முத்திரை வைத்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். [1] இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹200,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. [4]

மேற்கோள்கள்

தொகு