2 மக்கபேயர் (நூல்)
2 மக்கபேயர் (2 Maccabees) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும் [1]. இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
பெயர்
தொகு2 மக்கபேயர் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் B' Μακκαβαίων (1 Makkabáion) என்றும், இலத்தீனில் "2 Machabaeorum" என்றும் உள்ளது. "மக்கபே" என்னும் எபிரேய மொழிப் பெயரிலிருந்து "மக்கபேயர்" என்னும் சொல் பிறந்தது. மக்கபேயர் என்பது எபிரேயத்தில் Makabim, Maqabim என வரும் (מכבים அல்லது מקבים). இது அரமேய மொழியில் maqqaba என்னும் சொல்லிலிருந்து பிறந்தது எனவும், அதன் பொருள் "சுத்தியல்/சம்மட்டி" என்பதாகும் எனவும் அறிஞர் கூறுவர்.
இந்நூலும் அதற்கு இணையாக அமைந்த 1 மக்கபேயர் எனும் நூலும் இணைத் திருமுறை விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [2]. இந்நூலின் மூல பாடம் (செப்துவசிந்தா) [3] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.
உள்ளடக்கமும் செய்தியும்
தொகுஇந்நூல் மக்கபேயர் முதல் நூலின் தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலகட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கனவே மக்கபேயர் முதல் நூலின் முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.
சீரேனைச் சேர்ந்த யாசோன் கிரேக்க மொழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் இந்நூல் (2:19-32). எருசலேம் யூதர்கள் எகிப்துவாழ் யூதர்களுக்கு விடுத்த இரண்டு மடல்கள் இதற்கு முன்னுரையாக (1:1 - 2:18) அமைகின்றன.
படிக்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும் (2:25) ஏறத்தாழ கி.மு. 124இல் இது எழுதப்பெற்றதால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைவிடத் திருவுரைப் பாணியில் அமைந்த இறையியல் கண்ணோட்டமே இதில் முன்னிடம் பெறுகிறது.
இறைத் தலையீட்டை விளக்கும்பொருட்டு வெளிப்பாட்டு இலக்கிய நடைக்குரிய காட்சிகள் ஆங்காங்கே இந்நூலில் புகுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகள் கீழ்வருவன:
- 2:21;
- 3:24-34;
- 5:2-4;
- 10:29-30;
- 15:11-16.
திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போர்க்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக் கருத்தை இந்நூல் விளக்குகிறது. பழைய ஏற்பாட்டின் பிற நூல்களில் இடம்பெற்றிராத கருத்துகள் இதில் காணக்கிடக்கின்றன. அவையாவன:
- நீதிமான்கள் தம் சாவுக்குப் பின் உயிர்த்தெழுவார்கள் (காண்க: 7:9,11,14,23; 14:46).
- இறந்தோருக்காக வேண்டுதல் பயனுள்ள செயல் ஆகும் (காண்க: 12:39-46).
- மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்கள் மன்றாடுகின்றனர் (காண்க: 15:12-16).
நூலிலிருந்து சில பகுதிகள்
தொகு2 மக்கபேயர் 7:9-12
"இரண்டாம் சகோதரர் தாம் இறுதி மூச்சு விடும் வேளையில்,
'நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய்.
ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு
அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்;
ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே' என்று கூறினார்.
அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள்.
அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்;
'நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்;
அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன்'
என்று பெருமிதத்தோடு கூறினார்.
அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை.
எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும்
இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்."
2 மக்கபேயர் 12:43-46
"பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் யூதா பணம் திரட்டி ஆறு கிலோ வெள்ளி சேகரித்து,
பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்;
இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில், மேன்மையாக நடந்துகொண்டார்.
ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால்,
அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.
ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில்,
அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும்.
ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி
அவர் அவர்களுக்காகப் பலி ஒப்புக்கொடுத்தார்."
உட்பிரிவுகள்
தொகுபொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. எகிப்து யூதர்களுக்கு விடுத்த மடல்கள் | 1:1 - 2:18 | 268 - 271 |
2. நூலாசிரியரின் முன்னுரை | 2:19-32 | 271 - 272 |
3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி | 3:1-40 | 272 - 274 |
4. அந்தியோக்கு எப்பிபானும் யூதர்களின் துன்பமும் | 4:1 - 7:42 | 274 - 285 |
5. யூதாவின் வெற்றிகள் | 8:1 - 10:8 | 285 - 291 |
6. மீண்டும் யூதர்களின் துன்பம் | 10:9 - 15:36 | 291 - 305 |
7. முடிவுரை | 15:37-39 | 305 |