2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்

2016 இந்திய ரூபாய்த் தாள்கள்

500, 1000 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் என்பது 500, 1000 மதிப்புடைய பணத் தாள்களை செல்லாததாக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவைக் குறிக்கும். இந்த முடிவின்படி, நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது.[1] பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 மதிப்புள்ள பணத் தாள்களில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியது.[2]

8 நவம்பர் 2016 அன்று கவுரா நகரில், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து 100 ரூபாய் பணத் தாள்களைப் பெற வரிசையில் நின்றிருந்தவர்கள்

தலைமை அமைச்சரின் அறிவிப்பு

தொகு

8 நவம்பர் 2016 அன்று, இரவு 8.15 மணி அளவில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோதி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். முன்னறிவிப்பில்லா தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு மூலமாக நாட்டு மக்களுக்கு விவரங்களை வெளியிட்டார். அன்றைய நாளின் நள்ளிரவிலிருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது எனவும், மக்கள் அனைவரும் தனது அரசின் இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.[3] கறுப்பு பணம், ஊழலை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையென அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாறும், பின்னணியும்

தொகு

இதே போன்ற நடவடிக்கை 1946ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. 1000, 10,000 மதிப்புடைய பணத் தாள்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 1954ஆம் ஆண்டு 1000, 5000, 10,000 மதிப்பினைக் கொண்ட புதிய பணத் தாள்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. சனதா கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டு அரசு, இந்த 1000, 5000, 10,000 பணத் தாள்களை செல்லாதவையாக ஆக்கியது. ஏமாற்று, கருப்புப் பணத்தினை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது.[4]

28 அக்டோபர் 2016 அன்றின்படி, இந்தியாவில் புழக்கத்திலிருந்த பணத்தின் மதிப்பு 17.77 இலட்சம் கோடி (US$220 பில்லியன்) ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி 31 மார்ச் 2016 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, புழக்கத்திலிருக்கும் 500, 1000 பணத் தாள்களின் ஒட்டுமொத்த மதிப்பு 14.18 இலட்சம் கோடி (US$180 பில்லியன்) ஆகும். இது ஏறத்தாழ 86%. எண்ணிக்கையின் அடிப்படையில் நோக்கினால், ஒட்டுமொத்தமாக 9,026.6 கோடி பணத் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றுள் 2,203 கோடி பணத்தாள்கள் 500, 1000 மதிப்புடைய பணத் தாள்கள் ஆகும்.[5]

பிரதமர் மோடியின் அறிவிப்பிற்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத் தலைவர் உர்ஜித் படேலும், பொருளாதார விசயங்களுக்கான செயலாளர் சக்திகந்த தாசும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர். 2011 - 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அனைத்துப் பணத் தாள்களின் விநியோகம் 40% அதிகரித்தது எனத் தெரிவித்தனர். 500, 1000 மதிப்புள்ள பணத் தாள்களின் எண்ணிக்கை முறையே 76%, 109% அதிகரித்தது. இந்தக் கள்ளப் பணம் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த கள்ளத்தனமான பணத் தாள்களை ஒழிக்கும் விதமாக இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.[6]

ஏற்கனவே இருக்கும் தாள்களை மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகள்

தொகு

நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் 500, 1000 பணத் தாள்களை ஒப்படைத்துவிட்டு, அதற்குச் சமமான பணத்தினை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது:[7]

  1. செல்லாததாக அறிவிக்கப்பட்ட பணத் தாள்களை டிசம்பர் 30, 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலும்.
  2. 9 நவம்பர் 2016 தொடங்கி 24 நவம்பர் 2016 வரையிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற இயலும். மேலும், வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற இயலும்.
  3. உடனடியாக பணம் தேவையெனில், 500, 1000 பணத் தாள்களை ஒப்படைத்து ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் என்ற வகையில் புதிய பணத் தாள்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். 10 நவம்பர் 2016 முதல் நடைமுறைக்கு வரும் இவ்வசதியைப் பெற அடையாள அட்டை அவசியமாகும்.
  4. 8 நவம்பர் 2016 நள்ளிரவு முதல் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்காது. 11 நவம்பர் 2016 முதல் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்க ஆரம்பிக்கும். 50, 100 பணத் தாள்களை இந்த இயந்திரங்கள் மக்களுக்கு வழங்கும்.[8]
  5. ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பணம் பெறுதலுக்கு எவ்விதக் கட்டணத்தையும் தனது வாடிக்கையாளரிடம் 30 டிசம்பர் 2016 வரை வங்கிகள் வசூலிக்காது. 18 நவம்பர் 2016 வரை ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பெற இயலும். 19 நவம்பர் 2016 முதல், ஒரு நாளைக்கு 4000 ரூபாய் என விதிமுறை தளர்த்தப்படும்.[8]
 
10 நவம்பர் 2016 அன்று கொல்கத்தா நகரில் - 500, 1000 ரூபாய் பணத் தாள்களை மாற்றிக்கொள்ளவும், தமது வங்கிக் கணக்கில் வைப்பு செய்யவும் வரிசையில் காத்திருந்தோர்.

உடனடியான விளைவுகள்

தொகு

நவம்பர் 9 அன்று, குஜராத் மாநிலத்தில் தங்கத்தின் விற்பனை அதிகரித்தது. கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் முயற்சித்ததே இதற்குக் காரணம் என ஊடகச் செய்திகள் தெரிவித்தன. கடந்துபோன தேதிகளையிட்டு இந்தப் பரிவர்த்தனைகள் நடந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

குஜராத்திலும், டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் உள்ள பெரிய டோல் கேட்களில் நீண்ட காத்திருப்பு காணப்பட்டது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட பணத் தாள்களை வசூலிப்பாளர்கள் வாங்க மறுத்ததால் இந்நிலை ஏற்பட்டது.[9] நாடு முழுவதும் டோல் கேட்களில் 11 நவம்பர் நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது எனும் உத்தரவினை போக்குவரத்து & நெடுஞ்சாலைத் துறைக்கான அமைச்சர் நிதின் கத்காரி பிறப்பித்தார்.[10] இருப்பினும் பணத்தட்டுப்பாடு தீராததால் பின் இந்த உத்தரவு நவம்பர் 14 ஆம் வரை நீட்டிக்கப்பட்டது.[11] இதே போல் மின் மற்றும் தண்ணீர் கட்டணங்களை பழைய 500, 1000 ரூபாய் தாள்களைக் கொண்டு கட்டலாம் என அரசு அறிவித்தது.[12]

மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள்

தொகு
  • தொடருந்து பயணச்சீட்டுகளை இரத்து செய்பவர்களுக்கும் திரும்ப பணமாக வழங்க இயலாததால் இரத்து செய்ததற்கான இரசீது (TDR) மட்டும் வழங்கப்பட்டது.[13]
  • நாட்டின் சில பகுதிகளில் தங்கத்தின் விலை 40,000 ரூபாய் வரை உயர்ந்தது.[14] பெட்ரோல் விற்பனை நடுவகங்களில் பெருங்கூட்டம் காணப்பட்டது.

வழக்கு

தொகு

இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இவ்வழக்கில் 2 சனவரி 2022 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 4 நீதியரசர்கள் இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், நீதியரசர் நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.[15][16][17]

மேற்கோள்கள்

தொகு
  1. "Withdrawal of Legal Tender Status for ₹ 500 and ₹ 1000 Notes: RBI Notice (Revised)". இந்திய ரிசர்வ் வங்கி. 08 நவம்பர் 2016. https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=38520. பார்த்த நாள்: 9 நவம்பர் 2016. 
  2. "தோல்வியை ஒப்புக்கொள்வதே மீட்சிக்கான வழி!". தலையங்கம். இந்து தமிழ். 4 September 2018. பார்க்கப்பட்ட நாள் 4 September 2018.
  3. "இந்தியாவில் இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - மோதி". BBC தமிழ். 08 நவம்பர் 2016. http://www.bbc.com/tamil/india-37905680. பார்த்த நாள்: 9 நவம்பர் 2016. 
  4. Gopika Gopakumar, Vishwanath Nair (8 நவம்பர் 2016). "Rs500, Rs1000 notes may be back, if history is a guide". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
  5. Damodaran, Harish (9 நவம்பர் 2016). "Are banks equipped to replace 2,300 crore pieces of Rs 500 and Rs 1,000 notes?". இந்தியன் எக்ஸ்பிரசு. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  6. "Why Were the Notes Scrapped? RBI Chief, Economic Affairs Secy Explain". நியூஸ் 18. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  7. "Press Release", Government of India Ministry of Finance, Department of Economic Affairs. Effective date 8 November 2016.
  8. 8.0 8.1 "ATMs –Non-dispensing of Old High Denomination Notes – Closure of operations". Reserve Bank of India. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
  9. Langa, Mahesh (9 நவம்பர் 2016). "Scramble for gold in Gujarat after demonetisation". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2016.
  10. "Toll tax suspended on national highways till Nov 11, banks open this weekend". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2016.
  11. "தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 3 நாட்களுக்கு சுங்க கட்டணம் ரத்து: கட்காரி". மாலைமலர். 11 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161112211314/http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/11184745/1050277/Nitin-Gadkari-says-toll-suspension-extended-till-14th.vpf. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  12. "ரூ.500, 1000 நோட்டுகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்: மத்திய அரசு". தமிழ் இந்து. 11 நவம்பர் 2016. http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AF%82500-1000-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article9328945.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  13. "ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் ரீஃபண்ட் ரொக்கத்தில் கிடையாது: ரயில்வே அறிவிப்பு". தமிழ் இந்து. 11 நவம்பர் 2016. http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9329019.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  14. "தங்கம் விலை". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  15. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி
  16. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
  17. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: மாறுபட்ட தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?

வெளியிணைப்புகள்

தொகு