அசிந்தியன்

அசிந்தியன்,அதிந்தியன் (சங்கதம்: "நினைவுக்கெட்டாதது", "சொற்பதம் கடந்த பொருள்") என்றும் துங்கால் (பாலி மொழி: "ஐக்கியம்"[1][2]) (Acintya, Atintya, "Tunggal") என்றும் குறிப்பிடப்படுபவர், இந்தோனேசிய இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார்.

அசிந்தியன்
சங்யாங் வீதி வாசா
உதிக்கும் சூரியனாக சித்தரிக்கப்படும் அசிந்தியனின் தோற்றம். பாலி
வகைபரம்பொருள்

இந்தியப் பண்பாட்டின் "பரப்பிரம்மம்" எனும் சொல்லாடலுக்குச் சமனாக இந்தோனேசியாவில் பயன்படும் "அசிந்திய" என்பது, "வயாங்" எனும் புகழ்பெற்ற இந்தோனேசிய நிழல் அரங்காடலில் பரம்பொருளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது.[3] நவீன இந்தோனேசிய இந்துக்கள், "டாங்யாங் துவியேந்திரா"வால் முன்வைக்கப்பட்ட "சங்யாங் வீதி வாசா" ("யாவும் ஒன்றான கடவுள்") என்ற சொல்லாட்சி மூலம் அசிந்தியனைக் குறிப்பிடுகின்றனர்.[4]

வரலாறு

தொகு
 
பாலி அருங்காட்சியகத்திலுள்ள அசிந்தியன் திருவுருவம்

அசிந்திய வழிபாட்டுக்கான அடிப்படை பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாவாப் பகுதியில் ஏற்பட்ட இஸ்லாம் பரவுகைக்கெதிராக, இந்தோனேசிய சைவ மறுமலர்ச்சியாளர் "டாங்யாங் நிரார்த்தா" ஏற்படுத்திய "பத்மாசனங்களின்" உருவாக்கங்களுடன் ஆரம்பிக்கின்றது.[5] இறைவன் ஒருவனே என்பதை வலியுறுத்திய நிரார்த்ரா, தான் சென்ற இந்து ஆலயங்களிலெல்லாம், அந்த ஏக இறைவனுக்காக "பத்மாசனம்" எனும் அரியணை ஒத்த தூணை நிறுவும் மரபை ஏற்படுத்தினார்.[6]


இந்தோனேசிய சுதந்திரப் போர், இரண்டாம் உலகப் போர் என்பவற்றின் பின், இந்தோனேசியக் குடியரசானது, சமயச் சுதந்திரத்தை முன்வைக்கும் "பஞ்சசீலம்" எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அவற்றிலொன்று, இந்தோனேசியச் சமயங்கள் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவை என்பதாகும். பல கடவுளரை வழிபட்டுவந்த இந்தோனேசிய இந்துக்கள், இக்கொள்கைக்கு இசையும் வண்ணம், "அசிந்தியன்" எனும் ஏகதெய்வத்தை ஏற்றுக் கொண்டதுடன், 1930களில் புரட்டஸ்தாந்து மதபோதகர்கள் கர்த்தரைக் குறிக்கப் பயன்படுத்திய "சங்யாங் வீதி வாசா" என்ற சொல்லாடலையும் அசிந்தியனைக் குறிக்கப் பயன்படுத்தலாயினர்.[7]

அன்றாட வாழ்க்கையில் அசிந்தியன்

தொகு
 
அசிந்தியனாக உருவகிக்கப்படும் வெற்று அரியாசனம்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "அசிந்தியன்" எனும் எண்ணக்கரு, இந்தோனேசிய இந்துநெறியை, ஒரு முழுமையான ஒருதெய்வக் கோட்பாட்டுச் சமயமாக மாற்றிவருவதுடன், ஏனைய எல்லாத் தெய்வங்களும் அவரது பல்வேறு தோற்றங்களே எனும் கருத்தையும் அவர்கள் மத்தியில் வலுப்படுத்தி வருகின்றது.[8][9] அசிந்தியனிடமிருந்தே உலகங்களெல்லாம் தோன்றின. அவற்றுக்கு முன்பிருந்த வெறுமை என்பதும் கூட அதுவே என்பது இந்தோனேசிய இந்துக்களின் நம்பிக்கை.[10]

பொதுவாக அசிந்தியனை சூரியனுடன் தொடர்புறுத்துவதுண்டு.[11] தன்னைச் சுற்றி கதிர்கள் சுடர்விடும் மனிதவடிவில் அசிந்தியன் சித்தரிக்கப்படுகின்றார்.[12] அவரது அம்மணம், மானிட உணர்வுகளால் பாதிக்கப்ப்படாத பிரக்ஞை கடந்த நிலையிலுள்ளவர் அவர் என்பதைக் காட்டுகின்றது.[13]

வழிபாடுகளோ படையால்களோ, அசிந்தியனுக்கு நேரடியாகச் செய்யப்படுவதில்லை. அவரது அம்சங்களான ஏனைய தெய்வங்களுக்கே அவை செய்யப்படுகின்றன.[14] பாலிக் கோயில்களில், தூணொன்றின் உச்சியில் அமைக்கப்படும் வெற்று அரியணை ஒன்றை, அசிந்தியனாக உருவகிக்கப்பதுடன், அதை "பத்மாசனம்" என்றும் குறிப்பிடுகின்றனர்.[15]

மேலும் பார்க்க

தொகு


அடிக்குறிப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிந்தியன்&oldid=3679547" இலிருந்து மீள்விக்கப்பட்டது