அத்சாரா

(அஜாரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அத்சாரா (ஆங்கிலம்: Adjara ; சியார்சிய மொழி : აჭარა), அதிகாரப்பூர்வமாக அத்சாரா தன்னாட்சி குடியரசு என்று அழைக்கப்படுகிறது. சியார்சியாவின் வரலாற்று, புவியியல் மற்றும் அரசியல்-நிர்வாக பகுதி ஆகும். சியார்சியா நாட்டின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள அத்சாரா கருங்கடலின் கரையோரத்தில் துருக்கியின் வடக்கே காக்கசஸ் மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமான இப்பகுதியானது சியார்சியாவின் இரண்டாவது பெரிய நகரமான பத்தூமியை தலைநகராக கொண்டுள்ளது. அத்சாரா 2,880 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 333,953 மக்கள் வாழ்கின்றனர் (2014).

நிர்வாகம்தொகு

அத்சாரா தன்னாட்சி குடியரசின் நிலை அத்சாரா மீதான சியார்சியாவின் சட்டத்தினாலும், பிராந்தியத்தின் புதிய அரசியலமைப்பினாலும் வரையறுக்கப்படுகிறது.[1] அத்சாரா அரசாங்கத்தின் தற்போதைய தலைவர் ஜுராப் படரிட்ஜ் ஆவார்.

அத்சாரா ஆறு நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • பத்தூமி நகரம்
  • கேடா மாவட்டம்
  • கோபுலேட்டி மாவட்டம்
  • சுகேவி மாவட்டம்
  • கெல்வாச்சவுரி மாவட்டம்
  • குலோ மாவட்டம்

புவியியல்தொகு

அத்சாரா கருங்கடலின் தென்கிழக்கு கடற்கரையில் காக்கசஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே குரியாவும், கிழக்கில் சம்த்கே-ஜவகேதியும், தெற்கே துருக்கியும் எல்லைகளாக காணப்படுகின்றன. அத்சாராவின் பெரும்பகுதி மலைகளை கொண்டது. மிக உயர்ந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்திற்கு மேல் அமைந்துள்ளன. அத்சாரா சுமார் 60% காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேஸ்கெட்டி மலைத்தொடரின் பல பகுதிகள் (மேற்கு நோக்கிய சரிவுகள்) மிதமான மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளன.

காலநிலைதொகு

அத்சாரா ஈரப்பதமான காலநிலைக்கும், (குறிப்பாக கடலோரப் பகுதிகளில்) நீடித்த மழை காலநிலைக்கும் நன்கு அறியப்பட்டதாகும். இருப்பினும் வசந்த காலங்களிலும், கோடைக் காலங்களிலும் ஏராளமான சூரிய ஒளியைப் பெறுகின்றது. சியார்சியாவிலும், காக்கேசியாவிலும் அதிக அளவு மழைப்பொழிவைப் பெறும் பகுதியாக அத்சாரா காணப்படுகின்றது. இது வடக்கு அரைக்கோளத்தின் ஈரப்பதமான மிதமான பகுதிகளில் ஒன்றாகும். அத்சாராவின் கரையோரத்தில் உள்ள எந்தப் பகுதியும் ஆண்டுக்கு 2,200 மிமீ (86.6 அங்குலம்) க்கும் குறைவான மழைவீழ்ச்சியை பெறுவதில்லை. மேஸ்கெட்டி மலைத்தொடரின் மேற்கு நோக்கிய (காற்றோட்டமான) சரிவுகள் ஆண்டுக்கு 4,500 மிமீ (177.2 அங்குலம்) மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. குளிர்காலத்தில் பொதுவாக அத்சாராவின் உயர்ந்த பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க பனிப் பொழிகின்றது. சராசரி கோடை வெப்பநிலை தாழ்நிலப் பகுதிகளில் 22-24 பாகை செல்சியஸ் வரையிலும், மலைப்பகுதிகளில் 17–21 பாகை செல்சிய வரையிலும் காணப்படும். அத்சாராவின் மிக உயர்ந்த பகுதிகள் குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளன.

பொருளாதாரம்தொகு

அத்சாராவில் தேயிலை, நாரத்தை பழங்கள் மற்றும் புகையிலை என்பவற்றை வளர்ப்பதற்கான நிலவளம் காணப்படுகின்றது. மலை மற்றும் காடுகள் நிறைந்த இந்த பிராந்தியத்தில் வெப்பமண்டல காலநிலை நிலவுகின்றது. கால் நடைகள் வளர்ப்பு, தேயிலை உற்பத்தி, புகையிலை பதப்படுத்துதல், பழம் மற்றும் மீன் பதப்படுத்தல், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கப்பல் கட்டுதல் என்பன பொருளாதாரத்தில் பங்கு வகிக்கின்றன.

சியார்சியா, அசர்பைசான், ஆர்மீனியா ஆகிய நிலப்பரப்புகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய நுழைவாயில் பிராந்திய தலைநகரான பாத்துமி ஆகும். கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய பாத்துமி துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் துறையும் இப்பகுதியின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது.

புள்ளிவிபரங்கள்தொகு

2014 ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின்படி அத்சாராவில் 333,953 மக்கள் வசிக்கின்றனர்.[2] இங்கு வாழும் சிறுபான்மையினரில் உருசியர்கள் , ஆர்மீனியர்கள் , போன்டிக் கிரேக்கர்கள் , அப்காஸ் போன்றவர்கள் அடங்குவார்கள்.[3]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்சாரா&oldid=3331384" இருந்து மீள்விக்கப்பட்டது