அடியிழையம்
தாவரத்தில் கலனிழையத்தையும், மேலணி இழையத்தையும் தவிர்ந்த ஏனைய அனைத்து இழையப் பகுதிகளும் அடியிழையம் எனும் வகைக்குள் உள்ளடங்கும். மூன்று வகையான இழையங்கள் அடியிழைய வகைக்குள் உள்ளடங்குகின்றன. புடைக்கலவிழையம், ஒட்டுக்கலவிழையம், வல்லுருக்கலவிழையம் என்பனவே அவையாகும். புடைக்கலவிழையமும், ஒட்டுக்கலவிழையமும் முதிர்ச்சியடைந்த பின்னரும் உயிருடன் இருக்கக்கூடிய கலங்களாகும். மென்மையான தாவரப் பாகங்களை புடைக்கலவிழையம் ஆக்குகின்றது. ஒட்டுக்கலவிழையம் தாவரத்துக்கு உறுதித்தன்மை வழங்குவதற்காக தடித்த முதற்சுவருடைய கலங்களைக் கொண்ட கலங்களாகும். வல்ல்ருக்கலவிழையம் முதிர்ச்சியின் போது இறந்த கலங்களைக் கொண்டிருப்பதுடன், தாங்கும் தொழிலைப் புரிவதற்காக இலிக்னின்னாலான துணைச்சுவர் படிவுகளைக் கொண்டிருக்கும்.
புடைக்கலவிழையம்
தொகுஇலையின் குறுக்குவெட்டுத் தோற்றம்
|
தாவர உடலில் பிரதான நிரப்பும் இழையமாக புடைக்கலவிழையமே உள்ளது. இது உணவு சேமித்தல், நீர் சேமித்தல், ஒளித்தொகுப்ப், போன்ற பல தொழில்கலைப் புரிகின்றது. இது மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பதுடன் கலச்சுவர் பிரதானமாக செல்லுலோசால் ஆனது. முதிர்ச்சியில் பொதுவாகப் பெரிய புன்வெற்றிடத்தைக் கொண்டிருப்பதுடன் ஒரு சாதாரண தாவரக் கலத்துக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டப்படும் கலவகையாகும். இவ்விழையத்தைச் சேர்ந்த கலங்கள் முதிர்ச்சியின் பின் பொதுவாக இழையுருப் பிரிவுக்கு உட்படா விட்டாலும், அவற்றின் இரட்டிப்படையும் ஆற்றலைத் தக்கவைத்திருக்கும்; தூண்டப்படும் போது இவ்விழையக் கலங்கள் கலப்பிரிவுக்கு உட்பட்டு புதிய கலங்களைத் தோற்றுவிக்கலாம். இவற்றை இலையின் நடுவிழையம், தண்டின் மேற்பட்டை, தண்டின் மையவிழையம், வித்துக்களின் வித்தகவிழையம் ஆகியவற்றில் அவதானிக்கலாம். புடைக்கலவிழையக் கலங்களின் வடிவம் அவற்றின் தொழில்களுக்கேற்றபடி மாறுபடலாம்.[1] உதாரணமாக வேலிக்காற் புடைக்கலவிழையம் செவ்வக வடிவத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டு ஒழுங்காக இருக்கும்; எனினும் கடற்பஞ்சுப் புடைக்கலவிழைம் ஐதாக அடுக்கப்பட்டு ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கும். மேற்றோல் இழையம் புடைக்கலவிழையத்தின் ஒரு வகையாகக் கருதப்பட்டாலும், தற்காலத்தில் அவை வேறாகவே வகைப்படுத்தப்படுகின்றன. தாவரத்தில் நடைபெறும் அனேகமான அனுசேபத் தொழிற்பாடுகள் புடைக்கலவிழையக் கலங்களிலேயே நடைபெறுகின்றன. தொழில்கள்:
- இலைகளின் நடுவிழையத்திலுள்ள புடைக்கலவிழையக் கலங்கள் ஒளித்தொகுப்பைத் தொழிலாகப் புரிகின்றன.[2]
- கிழங்கு போன்ற தாவரத்தின் சேமிப்புப் பகுதிகளிலும், வித்தின் வித்தகவிழையம், வித்திலைகளிலும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் ஆகிய போசணைப் பதார்த்தங்களின் சேமிப்பு.
- சுரத்தல். உ-ம்: பிசின் சுரத்தல்.
- காயமேற்படும் போது தூண்டப்பட்டு காயத்தைச் சரிப்படுத்தல்.
- காற்றுச் சேமிப்பு- நீர்வாழ் தாவரங்களின் மிதவையில் உதவும் காற்றுக்கலவிழையம் புடைக்கலவிழையத்தின் ஒரு வகையாகும்.
ஒட்டுக்கலவிழையம்
தொகுபூண்டுத்தாவரங்களின் பிரதான தாங்கும் இழையமாக ஒட்டுக்கலவிழையமே உள்ளது. இருவித்திலைத் தாவர இலைகளின் நடுநரம்பைச் சூழவும் இருவித்திலைத் தண்டின் மேற்றோலுக்குக் கீழேயும் இவ்விழையம் உள்ளது. இதன் கலச்சுவர் ஒழுங்கற்ற வகையில் மேலதிக செல்லுலோசால் தடிப்பாக்கப்பட்டிருக்கும். சிலவேளைகளில் ஒளித்தொகுப்புக்காக பச்சையவுமணியும் காணப்படலாம். இவை முதற்சுவரை மாத்திரம் கொண்ட உயிருள்ள கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் தேவைக்கேற்ற படி தமது கலச்சுவர் தடிப்பை மாற்றியமைக்கக்கூடியனவாகும். தண்டுப்பகுதி இடைக்கிடை ஆட்டப்பட்டால் கலச்சுவர் தடிப்பு அதிகரிக்கும். ஒட்டுக்கலவிழையம் ஒருவித்திலைத் தாவரங்களிலும், தாவர வேரிலும் காணப்படுவதில்லை.
வல்லுருக்கலவிழையம்
தொகுதாவரங்களின் பிரதான தாங்கும் இழையம் வல்லுருக்கலவிழையமாகும். இது இறந்த கலங்களாலான இழையமாகும். இவ்விழையத்தைச் சேர்ந்த கலங்கள் இலிக்னினால் தடிப்பாக்கப்பட்ட துணைச்சுவர் காணப்படும். நார்கள், வல்லுருக்கள் எனும் இரு வகை வல்லுருக்கலவிழையங்கள் உள்ளன. நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் தென்னந்தும்பு, சணல் என்பன வல்லுருக்கலவிழைய நார்களாகும். தேங்காய்ச் சிரட்டையிலும், மரமுந்திரிகையிலும், பேரிச்சையிலும் வல்லுருக்களையும் காணலாம்.
நார்கள்
தொகுமிகத் தடிப்பான இலிக்னினால் ஆன துணைச்சுவருடைய தாவர நாரிழையமாகும். இவை கூம்பிய முனையுள்ள நீண்ட, இறந்த கலங்களாகும். தாவர உடலை பொறிமுறை ரீதியாகத் தாங்குவதில் தாவர நார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை காழ், உரியம் ஆகியவற்றில் உறுதிப்பாட்டைப் பேணும் கூறாகவும் உள்ளது. இவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பாகங்களாகும். தும்புக் கைத்தொழிலில் பயன்படும் தென்னந்தும்பு இவ்வகைக் கலமாகும்.
வல்லுருக்கள்
தொகுஇவை நார்களை விட அதிக தடிப்பான, படையுருவான இலிக்னின் துணைச்சுவர்களைக் கொண்ட கலங்களாகும். இவற்றில் நட்சத்திர வடிவான, வெறுமையான உள்ளிடம் உள்ளது. இவ்வுள்ளிடத்திலிருந்து கலச்சுவருக்குக் குறுக்காகக் கிளைத்தபடி கலம் உயிரோடு இருந்த போது பதார்த்தப் பரிமாற்றத்துக்கு உதவிய கால்வாய்கள் உள்ளன. இவை நார்கள் போலல்லாது குட்டையான கலங்களாகும். இவை ஆப்பிள், பியர்ஸ், பேரீச்சை, தேங்காயின் சிரட்டை ஆகியவற்றில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jeffree CE, Read N, Smith JAC and Dale JE (1987). Water droplets and ice deposits in leaf intercellular spaces: redistribution of water during cryofixation for scanning electron microscopy. Planta 172, 20-37
- ↑ "Leaves". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.