அடுக்கு விளைவு

அடுக்கு விளைவு (stack effect) என்பது; கட்டிடங்கள், புகைபோக்கிகள், எரிவளிம அடுக்குகள், போன்றவற்றில் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளுக்கும் மிதப்பாற்றலால் உருவாக்கப்படும் காற்றின் ஓட்டத்தைக் குறிக்கும். வெப்பநிலை, நீர்த்தன்மை என்பவற்றால் ஏற்படும் வளியின் அடர்த்தி வேறுபாடுகள் இந்த மிதப்பாற்றலை உருவாக்குகிறது. இது நேர் அல்லது எதிர்மறை மிதப்பாற்றலாக இருக்கக்கூடும். வெப்பநிலை வேறுபாடும், அமைப்பின் உயரமும் கூடக்கூட மிதப்பாற்றலும் அதிகரிக்கும். இதனால் அடுக்கு விளைவும் கூடுதலாக இருக்கும். அடுக்கு விளைவை புகைபோக்கி விளைவு என்றும் குறிப்பிடுவது உண்டு. இது கட்டிடங்களுக்குள் இயற்கைக் காற்றோட்டத்துக்கு உதவுவதுடன், காற்று ஊடுருவலையும் ஏற்படுத்துகின்றது.[1][2][3]

கட்டிடங்களில் அடுக்கு விளைவு

தொகு

கட்டிடங்கள் முற்றாகவே இறுக்கமாக மூடப்பட்டிருப்பதில்லை. தரைத் தளத்தில் கதவுகள் இருக்கும். இவற்றினூடாகவும் காற்று உட்செல்ல முடியும். கட்டிடங்களின் கீழ்ப்பகுதிகளில் வளி சூடாகும்போது அடர்த்தி குறைவதால் அது மேல்நோக்கிச் செல்கிறது. இருக்கக்கூடிய படிக்கட்டு வெளிகள் முதலியவற்றினூடாக மேல் தளங்களுக்குச் செல்லும் இச் சூடான வளி சாளரங்கள் மற்றும் இடைவெளிகளூடாக வெளியேறும். கீழ் மட்டத்திலிருந்து வளி மேலெழுந்து செல்வதால் கீழ் மட்டங்களில் அமுக்கம் குறையும். இதனால் குளிர்ந்த வெளிக் காற்று கீழ் மட்டத்திலுள்ள கதவுகள் போன்ற வெளிகளினூடாகக் கட்டிடங்களுக்குள் வரும். குளிரூட்டப்படும் கட்டிடங்களில் இது மறுதலையாக நடைபெறும். எனினும் இதில் வெப்பநிலை வேறுபாடுகள் குறைவாக இருப்பதால் அடுக்கு விளைவு முன்னதைப் போல் வலுவாக இருபதில்லை.

உயரமான நவீன கட்டிடங்களில், புறக்கூடு கூடிய அளவு இறுக்கமாக மூடப்பட்டிருப்பதால் அடுக்கு விளைவு குறிப்பிடத்தக்க அமுக்க வேறுபாட்டை ஏற்படுத்தலாம். இதனை ஈடு செய்வதற்கு வடிவமைப்பில் உரிய கவனம் செலுத்தவேண்டி இருக்கும். பொறிமுறைக் காற்றோட்ட வழிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டி இருக்கலாம். படிக்கட்டுகள், குளாய்வழிகள், உயர்த்திவழிகள் போன்றவை அடுக்கு விளைவை ஊக்குவிக்கின்றன. பிரிசுவர்கள், தளங்கள், தீத்தடுப்பு ஒழுங்குகள் போன்றவை இவ்விளைவைக் குறைக்க உதவலாம். தீத்தடுப்பைப் பொறுத்தவரை, அடுக்கு விளைவைக் குறைப்பது முக்கியமானது ஏனெனில் அடுக்கு விளைவினால் தீ கீழ்த் தளங்களிலிருந்து மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.mdpi.com/2071-1050/9/10/1731/pdf Resolving Stack Effect Problems in a High-Rise Office Building by Mechanical Pressurization | date=September 2017| access-date=2020-08-01 | Jung-yeon Yu; Kyoo-dong Song; and Dong-woo Cho
  2. NIST Technical Note 1618, Daniel Madrzykowski and Stephen Kerber, National Institute of Standards and Technology
  3. "Smoke Simulation: Heat and Smoke Extraction for Building Design". SimScale. 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்கு_விளைவு&oldid=3752095" இலிருந்து மீள்விக்கப்பட்டது