அடைவோட்டம்

அடைவோட்டம் (அல்லது நெறிசல் ஓட்டம்) (Choked flow) என்பது ஒரு அமுக்குமைப் பாய்வு விளைவாகும். அடைபடும் அல்லது மட்டுப்படுத்தப்படும் பாய்வின் பண்பு திசைவேகம் ஆகும்.

அடைவோட்டம் வெஞ்சுரி விளைவுடன் தொடர்புடைய பாய்ம இயக்கவியல் நிலையாகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திலுள்ள பாய்மம் ஒரு கட்டுப்பாட்டுப் பகுதிவழியே (அதாவது நுனிக்குழலின் கழுத்துப்பகுதி அல்லது குழாயின் அடைப்பிதழ் வழியே) குறை-அழுத்தம் கொண்ட பகுதிக்குச் செல்லும்போது அப்பாய்வின் திசைவேகம் அதிகரிக்கிறது. பாய்வெதிர்த்திசையில் பாய்வானது குறையொலிவேக நிலையிருக்கும்போது, நிறை அழிவின்மை விதிப்படி, குறைந்த குறுக்குவெட்டுப் பரப்புடைய கட்டுப்பாட்டுப் பகுதிவழி செல்லும்போது பாய்மத்தின் திசைவேகம் அதிகரிக்க வேண்டும். அதே வேளையில், வெஞ்சுரி விளைவின்படி, கட்டுப்பாட்டுப் பகுதியின் பின்னிருக்கும் பாய்வுத்திசையில் நிலை அழுத்தம், அதன் பயனாக அடர்த்தியும், குறைகின்றன. பாய்வெதிர்த்திசையில் இருக்கும் நிலைகள் மாறாமல் இருக்கும்போது, பாய்வுத்திசையில் அழுத்தம் குறைந்தாலும் நிறை பாய்வு விகிதம் மாறாமல் நிலைபெற்றிருக்கும் நிலையே அடைவோட்டம் ஆகும்.

ஓரியல்புப் பாய்மங்களுக்கு, வெப்பமாறா நிலையில் அடைவோட்டம் ஏற்படும் புள்ளியில் புறஞ்செல் பாய்வின் திசைவேகம் ஒலியின் விரைவுக்குச் சமமாக இருக்கும், அதாவது மாக் 1 ஆகும்.[1][2][3] பாய்வெதிர்த்திசையில் அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது வெப்பநிலையைக் குறைப்பதன் மூலமாகவோ அடைவோட்ட நிலையில் நிறை பாய்வு விகிதத்தை அதிகப்படுத்தலாம்.

அடைவோட்டம் பலவிதங்களில் பொறியியலில் பயன்படுகிறது, ஏனெனில் நிறை பாய்வு விகிதம் பாய்வுத்திசையிலிருக்கும் அழுத்தத்தைச் சார்ந்திருப்பதில்லை, பாய்வெதிர்த்திசையிலிருக்கும் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. அடைவோட்ட நிலையில், அடைப்பிதழ்கள் மற்றும் அளவுதிருத்திய துளைத்தட்டுக்கள் வழியே தேவையான நிறை பாய்வு விகிதத்தைப் பெறலாம்.

குறிப்புதவிகள் தொகு

  1. Perry's Chemical Engineers' Handbook, Sixth Edition, McGraw-Hill Co., 1984.
  2. Handbook of Chemical Hazard Analysis Procedures, Appendix B, Federal Emergency Management Agency, U.S. Dept. of Transportation, and U.S. Environmental Protection Agency, 1989. Handbook of Chemical Hazard Analysis, Appendix B Click on PDF icon, wait and then scroll down to page 391 of 520 PDF pages.
  3. Methods For The Calculation Of Physical Effects Due To Releases Of Hazardous Substances (Liquids and Gases), PGS2 CPR 14E, Chapter 2, The Netherlands Organization Of Applied Scientific Research, The Hague, 2005. PGS2 CPR 14E பரணிடப்பட்டது 2007-08-09 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைவோட்டம்&oldid=3704359" இலிருந்து மீள்விக்கப்பட்டது