அணுகுண்டு சோதனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அணுகுண்டு சோதனைகள் (Nuclear weapons tests) அணு ஆயுதங்களின் வினைவுறுதிறன், ஈட்டம் மற்றும் வெடிப்புத்திறன் ஆகியவற்றை தீர்மானிக்கும் வண்ணம் நிகழ்த்தப்படும் சோதனைகளாகும். இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய அணுவாயுதங்களை சோதித்துள்ளன. இச்சோதனைகள் அணு ஆயுதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பல்வேறு சூழல்களில் எவ்வாறு இயங்குகின்றன, கட்டிடங்கள் ஓர் அணுகுண்டு வெடிப்பின்போது எவ்வண்ணம் பாதிப்பிற்குள்ளாகின்றன போன்ற பல தகவல்களைப் பெற உதவுகின்றன. மேலும் நாடுகள் தங்கள் அறிவியல் மற்றும் இராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் நடத்தப்படுகின்றன.
முதல் அணுவாயுதச் சோதனை ஐக்கிய அமெரிக்காவால் சூலை 16, 1945ஆம் ஆண்டில் டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோடன் ஈட்டம் உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது. முதல் ஐதரசன் குண்டு அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான வெடிப்புச் சோதனை சோவியத் ஒன்றியத்தால் அக்டோபர் 30, 1961 அன்று 50 மெகாடன் ஈட்டம் உள்ள "சார் பாம்பா" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.
1963ஆம் ஆண்டு அணுக்கரு நாடுகள் மற்றும் அணுக்கரு அல்லாத நாடுகள் அனைத்தும் அணுகுண்டு சோதனைகளை வளிமண்டலத்திலோ நீர்பரப்பிற்கடியிலோ விண்வெளியிலோ நடத்துவதில்லை என்று மட்டுப்படுத்தப்பட்ட சோதனை தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இந்த உடன்பாடு நிலத்தடிச் சோதனைகளுக்கு அனுமதித்திருந்தது. பிரான்சு 1974ஆம் ஆண்டுவரையும் சீனா 1980ஆம் ஆண்டு வரையும் வளிமண்டலச் சோதனைகளை நடத்தி வந்தன.
நிலத்தடிச் சோதனைகள் ஐக்கிய அமெரிக்காவினால் 1992ஆம் ஆண்டு வரையும், சோவியத் ஒன்றியத்தால் 1990 வரையும், ஐக்கிய இராச்சியத்தால் 1991 வரையும் சீனா, பிரான்சு நாடுகளால் 1996ஆம் ஆண்டு வரையும் நடத்தப்பட்டன. 1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்டபின்னர், இந்நாடுகள் அனைத்துவகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கித்தானும் 1998ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தின.
மிக அண்மையில் வட கொரியா மே 25,2009 அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.
வெளியிணைப்புகள்தொகு
- அமெரிக்க அணுகுண்டு சோதனையின் அரிய காணொளி
- Video archive of US, Soviet, UK, Chines and French Nuclear Testing பரணிடப்பட்டது 2012-12-05 at Archive.today at sonicbomb.com
- Maps of sites tested
- "We're all Downwinders Now"
- Terrible Beauty: A-Bomb Tests பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம் - slideshow by Life magazine