அதியமான் கோட்டை

அதியமான் கோட்டை என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரும் சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட நகரான தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோட்டையாகும்.[1] இவ்வூரும் இப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கோட்டையில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. வழிவழியாக அதியமான் கோட்டை இருந்த இடமாக கூறப்பட்ட இடத்தில் 1981, 1982 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்ககாலத்ததாக கருதப்படும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவையும் கிடைத்தன. இங்கு மேடையுடன் கூடிய கெட்டியான களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைப் பகுதியும் கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.[2] அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சங்க காலத்தில் இருந்து கோட்டை இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இந்த ஊர் மகேந்திர மங்கலம் என்றும் இவ்வூர் இறைவன் மயிந்தீசுவரமுடையார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி முட்டை வடிவிலான கோட்டையின் எஞ்சிய பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அவ்வாறு நடத்திய அகழாய்வில் இக்கோட்டை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி பார்த்தால் பிற்கால சோழர் காலத்தில் இங்கிருந்து ஆண்டுவந்த இராசராச அதியமான் என்னும் அதியமான் மரபின் சிற்றரசன் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[3]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://tamil.nativeplanet.com/dharmapuri/attractions/adhiyamankottai/
  2. இரா. இராமகிருட்டிணன், தகடூர் வரலாறும் பண்பாடும், பக். 122
  3. செ. சாந்தலிங்கம்,வரலாற்றில் தகடூர்,பக்.109-110
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதியமான்_கோட்டை&oldid=3891400" இலிருந்து மீள்விக்கப்பட்டது