அத்திலாந்திக் கடற்கிளி
அத்திலாந்திக் கடற்கிளி (Atlantic puffin) என்பது, "ஆக்" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை இனமாகும். அத்திலாந்திக் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட ஒரே கடற்கிளி இதுவாகும். இவற்றுக்கு உறவான இரண்டு இனங்களான கொண்டைக் கடற்கிளி, கொம்புக் கடற்கிளி ஆகியவை வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படுகின்றன. அத்திலாந்திக் கடற்கிளிகள் ஐஸ்லாந்து, நார்வே, கிரீன்லாந்து, நியூபவுண்ட்லாந்து, ஆகியவற்றுடன் பல வட அத்திலாந்திக் தீவுகளிலும்; தெற்கே மைன், அயர்லாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள், கிழக்கில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரும் எண்ணிக்கையிலும், பரந்த பரப்பளவிலும் காணப்பட்டாலும், இவை காணப்படும் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளிலாவது மிக விரைவாகக் குறைந்து வந்துள்ளன. இதனால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்வினத்தை அழிவதற்கான வாய்ப்புக்கொண்ட இனமாக அறிவித்துள்ளது. நிலத்தில் நிமிர்ந்த நிலையில் நிற்கக்கூடியது. கடலில், மேற்பரப்பில் நீந்தக்கூடியது. வாலை உந்துவதற்காகப் பயன்படுத்துவதன் மூலம் நீருக்குள் மூழ்கிச் சிறிய மீன்களைப் பிடித்து இது உண்கின்றது.
அத்திலாந்திக் கடற்கிளி | |
---|---|
வளர்ந்த கடற்கிளி, ஐஸ்லாந்து | |
வேல்சின் பெம்புறூக்சயரில் உள்ள இசுக்கோக்கோம் தீவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அத்திலாந்திக் கடற்கிளியின் ஒலிப்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ஆக் (பறவை)
|
பேரினம்: | |
இனம்: | ஃ. ஆர்க்டிகா
|
இருசொற் பெயரீடு | |
ஃப ஆர்க்டிகா (லின்னேயஸ், 1758) | |
இனப்பெருக்க எல்லை (நீலம்), கோடைப் பரம்பலின் தெற்கு எல்லை (கறுப்பு), குளிர்காலப் பரம்பலின் தெற்கு எல்லை (சிவப்பு) | |
வேறு பெயர்கள் | |
அல்கா ஆர்க்டிகா லின்னேயஸ், 1758 |
இக்கடற்கிளியின் உச்சியும், முதுகும் கருப்பு நிறமாகவும்; கன்னப் பகுதி வெளிரிய சாம்பல் நிறமாகவும், அடிப்பக்கம் வெள்ளையாகவும் காணப்படுகிறது. இதன் அகன்ற பிரகாசமான சிவப்பு, கருப்பு அலகும்; செம்மஞ்சள் கால்களும் இதன் இறகுத் தொகுதியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. குளிர் காலத்தில் இது கடலில் இருக்கும்போது, இறகை உதிர்க்கின்றது. இதன்போது இது கடுமையான நிறம் கொண்ட முக அம்சங்கள் சிலவற்றை இழக்கின்றன. வசந்த காலத்தில் இழந்த நிறங்கள் மீண்டும் கிடைக்கின்றன. ஆண் பறவை சற்றுப் பெரிதாக இருந்தாலும், வெளித் தோற்றத்தில் பெருமளவு ஆண், பெண் பறவைகள் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இளம் பறவைகளின் இறகுத் தொகுதியும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருப்பினும், அவற்றின் கன்னங்கள் கடும் சாம்பல் நிறமானவை. இளம் பறவைகளுக்கு பிரகாசமான நிறங்கொண்ட தலை அலங்காரம் இல்லை. இவற்றின் அலகு ஒடுங்கியதாகவும், நுனியில் மஞ்சள் கலந்த கருப்பு நிறம் கொண்ட கடும் சாம்பல் நிறமாகவும் காணப்படுகின்றது. வடக்குப் பகுதியின் கடற்கிளிகள் தென் பகுதிக் கடற்கிளிகளைவிட அளவிற் பெரியவை. இவை இரண்டும் வெவ்வேறு துணை இனங்களைச் சேர்ந்தவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.
இலையுதிர் காலத்தையும், குளிர் காலத்தையும் குளிரான வடகடலின் திறந்த மேற்பரப்பில் செலவழித்த பின்னர், அத்திலாந்திக் கடற்கிளிகள் இனப்பெருக்கக் காலத் தொடக்கத்தில் கரைக்கு வருகின்றன. இவை செங்குத்துப்பாறை வாழிடங்களில் கூடுகளை அமைக்கின்றன. நிலத்தில் குழி தோண்டி ஒரு வெள்ளை முட்டையை இடுகின்றன. குஞ்சுகள் பெரும்பாலும் மீன்களை உண்டு விரைவாக வளர்கின்றன. ஆறு கிழமைகளுக்குப் பின்னர் வளர்ந்த இக்குஞ்சுகள் இரவில் கடலை நோக்கிச் செல்கின்றன. கடற்கரையில் இருந்து கடலுக்குச் செல்லும் இவை, பல ஆண்டுகளுக்குத் திரும்புவதில்லை.
இவற்றின் வாழிடங்கள் பெரும்பாலும் நிலத்தில் வாழும் கொன்றுண்ணிகள் இல்லாத தீவுகளிலேயே உள்ளன. ஆனால், வளர்ந்த கடற்கிளிகளும், அவற்றின் குஞ்சுகளும் கடற் பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சிலவேளைகளில், ஆர்க்டிக் சூவாக்கள், அலகு நிறைய மீன்களைக் கொண்டுவரும் கடற்கிளிகளுக்குத் தொல்லை தருவது உண்டு. இதனால் கொண்டுவரும் இரையைக் கீழே போடும் நிலையும் ஏற்படும். கவர்ச்சியான தோற்றம், பெரிய வண்ண அலகு, நடை, பறவையின் நடத்தை என்பவை இதற்கு கடலின் கோமாளி என்னும் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கனடா நாட்டின் "நியூபவுண்ட்லாந்தும் லாப்ராடரும்" மாகாணத்தின் பறவைச் சின்னமாக அத்திலாந்திக் கடற்கிளியே உள்ளது.
பெயரிடலும் சொற்பிறப்பும்
தொகுஅத்திலாந்திக் கடற்கிளி சராட்ரீபார்மசு வரிசையைச் சேர்ந்த கடற்பறவை இனமாகும். இது "அல்சிடே" என்னும் ஆக் குடும்பத்தில் உள்ளது. இதற்குள் கல்லெமொட்சு. பொது ஆக், முரெலெட்கள், ஆக்லெட்டுகள், கடற்கிளிகள், ரேசோபில்கள் என்பன அடங்குகின்றன.[2] ரினோசெரசு ஆக்லெட்டும், கடற்கிளிகளும் நெருங்கிய உறவுடையவை. இரண்டு ஃபிரெட்டர்குலினி என்னும் குழுவை உருவாக்குகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2015). Fratercula arctica. The IUCN Red List of Threatened Species 2015.
- ↑ Lepage, Denis. "Atlantic Puffin (Fratercula arctica) (Linnaeus, 1758)". Avibase. பார்க்கப்பட்ட நாள் 8 June 2013.
- ↑ Guthrie, Daniel A.; Howell, Thomas, W.; Kennedy, George L. (1999). "A new species of extinct late Pleistocene puffin (Aves: Alcidae) from the southern California Channel Islands". Proceedings of the 5th California Islands Symposium: 525–530. http://faculty.jsd.claremont.edu/dguthrie/Guthrie.pdf. பார்த்த நாள்: 2018-03-27.