அனந்தமங்கலம் சமணர் மலைப்பள்ளி

அனந்தமங்கலம் சமணர் மலைப்பள்ளி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் [1] கிராமத்தின் அருகே பாறைக் குன்றில் அமைந்துள்ள ஒரு சமண சமய நினைவுச் சின்னமாகும். சமண சமயத்தின் பதினான்காவது தீர்த்தங்கரான அனந்தர் பெயராலேயே இவ்வூர் அனந்தமங்கலம் என்று பெயர் பெற்றுள்ளது. முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு இத்தலத்தை ஜினகிரி பள்ளி என்று பதிவு செய்துள்ளது.[2]

அமைவிடம் தொகு

இவ்வூர் வைரபுரத்திலிருந்து 2.0 கி.மீ. தொலைவிலும், ஓரத்தியிலிருந்து 7.2 கி.மீ. தொலைவிலும், ஒலக்கூரிலிருந்து 8.7 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 13.7 கி.மீ. தொலைவிலும், அச்சரப்பாக்கத்திலிருந்து 23.4 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 27.7 கி.மீ. தொலைவிலும்,காஞ்சிபுரம் மாவட்டத் தலைமையகத்திலிருந்து தெற்கு நோக்கி 55 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600089 ஆகும். [1]

அனந்தமங்கலம் குன்று தொகு

அனந்தமங்கலம் குன்று, மிதமான உயரத்தில், பெரிதும் சிறிதுமான பாறைக்கள் நிறைந்த குன்றாகும். மலைக்குச் செல்ல முறையான படிக்கட்டுகள் இல்லை. எனவே குன்றின் மீது ஏறிச்செல்வது சற்று கடினமாகத் தோன்றும்.

முதலாம் சிற்பத்தொகுதி - பாறையின் கிழக்கு முகம் தொகு

தருமதேவி சிற்பம் தொகு

இங்குள்ள ஒரு பாறையில் கிழக்கு நோக்கியவாறு, தெற்கிலிருந்து வடக்காக தருமதேவி, மகாவீரர், நேமிநாதர் மாற்றும் பார்சுவநாதர் ஆகிய நால்வரின் புடைப்புச் சிற்பங்கள் (Bas relief Sculptures) ஒரே சிற்பத்தொகுப்பாகச் (Single Panel) செதுக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தின் 22 ஆம் தீர்த்தங்கரான நேமிநாதரின் இயக்கி தருமதேவி ஆவார். தருமதேவியின் புடைப்புச் சிற்பம், சிங்கத்தின் மீது இடது காலை ஊன்றியும், சற்று வளைந்த நிலையில், வலது காலை தரையில் ஊன்றி நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தனது இரண்டு குழந்தைகளுடனும், ஒரு பணிப்பெண்ணுடனும், காட்சிதரும் தருமதேவியின் இரு புறமும் சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. பின்புறத்தில் அசோக மரம் காட்டப்பட்டுள்ளது. [3][4]

மகாவீரர் சிற்பம் தொகு

இதனையடுத்து சமண சமயத்தின் மகாவீரரின் புடைப்புச் சிற்பம் ஓர் சிங்காசனத்தில் அமர்ந்து தவமியற்றும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. தலையைச் சுற்றி ஒளி வட்டம், முக்குடை ஆகியன காட்டப்பட்டுள்ளன. சிங்காசனத்தில் நான்கு சிம்மங்கள் காட்டப்பட்டுள்ளன. இரு சாமரம் வீசுவோரும், இரு கணாதரர்களும் ஒரு சமண அடியார் ஒருவர் நின்ற நிலையில் வணங்குவது போலவும் காட்டப்பட்டுள்ளனர். [3][4] [5]இச்சிற்பத்தின் காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு என்று தா.கணேசன் குறிப்பிட்டுள்ளார். [6] [5][6]

நேமிநாதர் சிற்பம் தொகு

மகாவீரரை அடுத்து 22 ஆம் தீர்த்தங்கரான நேமிநாதரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவர் தலைக்கு மேல் பொருந்திய ஒளிவட்டம், மற்றும் முக்குடையின் கீழ் காட்சி தருகிறார்.[4]

பார்சுவநாதர் சிற்பம் தொகு

நேமிநாதரை அடுத்து 23 ஆம் தீர்த்தங்கரான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் ஒன்பது தலை நாகம் படமெடுத்து குடைபிடித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. [6] [4] பார்சுவநாதர் தாமரை மலர் நின்ற நிலையில் கயோத்சர்க்கம் கோலத்தில் காட்சி தருகிறார். [3][4][5]

இரண்டாம் சிற்பம் - வேறொரு பாறையின் வடக்கு முகம் தொகு

பார்சுவநாதர் சிற்பம் தொகு

மேலே குறிப்பிட்ட பாறைச் சிற்பத் தொகுதியை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு பாறையில், வடக்கு நோக்கியவாறு, பார்சுவநாதர் படமெடுத்தாடும் ஐந்துதலை நாகத்தின் கீழே, தாமரைப் பீடத்தின் மீது நின்ற நிலையில் காட்சி தரும், ஒரு புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலதுபுறம் இவருடைய இயக்கி பத்மாவதியும், வலதுபுறம் இயக்கன் தரனேந்திரனும் வழிபடும் கோலங்களில் காட்டப்பட்டுள்ளனர். [4][3][5]

கல்வெட்டுகள் தொகு

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு தொகு

முதலாம் பராந்தக சோழனின் முப்பத்தெட்டாம் ஆட்சி ஆண்டு (கி.பி. 945 ஆம் ஆண்டு) கல்வெட்டு [2]ஒன்று அனந்தமங்கலம் மலைப்பள்ளியை ஜினகிரிப்பள்ளி என்று குறிப்பிட்டுள்ளது. ஜினகிரி பள்ளியின் தலைமைத் துறவியும் ஸ்ரீ வினையபாசுர குறவடிகளின் மாணாக்கருமான ஸ்ரீ வர்த்தமான பெரியடிகள், ஓர் அடியவருக்கு உணவளிப்பதற்காக, ஐந்து கழஞ்சு பொற்காசுகள் வழங்கிய [2] செய்தியினை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. [3][4][5] இந்தக் கல்வெட்டின் அடிப்படையில் இவை சோழர் காலத்திய சிற்பங்களாக அடையாளம் காணப்பட்டன.

புதிய பல்லவர் கால கல்வெட்டு தொகு

இந்நிலையில் இக்குன்றில் புதிதாக ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களான த.இரமேசு, சி.சிறீதர் ஆகியோர் இங்கு கல ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் புதிய கல்வெட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.[3] கல்வெட்டு பாடம்:

  கருபி செந்தியன் ஏவக் கருமா காளை பணி 

பொருள் விளக்கம்: கருபிசெந்தியன் என்பாரின் கோரிக்கையை ஏற்று கருமாகாளை என்பவர் இங்குள்ள சிற்பங்ககளை செதுக்கியுள்ளதாக இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தப் புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[3] மொத்தத்தில் பல்லவர் காலம் முதல் முதலாம் பராந்தக சோழன் காலம் வரையிலான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய சமண சமய நினைவுச் சின்னமாக இத்தலத்தைக் கருதலாம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Anandamangalam Onefivenine
  2. 2.0 2.1 2.2 அகிம்சையின் பாதை விஜி சக்கரவர்த்தி இந்து தமிழ் திசை ஜனவரி 08, 2015
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 திண்டிவனம் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தினமணி ஜூன் 04, 2016
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 அனந்தமங்கலம் பாறை சிற்பக்கோவில் அகிம்சை யாத்திரை March 21, 2015
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Ananthamangalam - HISTORY & MALAI POOJA | அனந்தமங்கலம் - வரலாறு மற்றும் மலை பூஜை Vandhai Rishi Sep 24, 2019 YouTube
  6. 6.0 6.1 6.2 சமணக்‌ திருமேனியியல்‌ (தொண்டை முண்டம்‌) த. கணேசன்‌,. In சமணத் தடயம். நடன. காசிநாதன்‌ மற்றும் மா. சந்திரமூர்ததி (பதிப்பாசிரியர்கள்). மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2௦௦5.

வெளி இணைப்புகள் தொகு