அன்னா பலிட்கோவ்ஸ்கயா
அன்னா ஸ்தெபானோவா பலிட்கோவ்ஸ்கயா (உருசியம்: А́нна Степа́новна Политко́вская, பஒஅ: [ˈanːə sʲtʲɪˈpanəvnə pəlʲɪtˈkofskəjə]; 30 ஆகஸ்ட் 1958 – 7 அக்டோபர் 2006) உருசிய நாட்டைச் சேர்ந்த[1] பெண் பத்திரிகை ஊடகவியலாளர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இரண்டாம் செச்னிய போர் பற்றி எழுதிய அறிக்கைகள் மூலம் இவர் உலகப் புகழ் பெற்றார்.[2]
அன்னா பலிட்கோவ்ஸ்கயா | |
---|---|
2005 ஜெர்மனியில் நடந்த நேர்காணலில் அன்னா பலிட்கோவ்ஸ்கயா | |
தொழில் | ஊடகவியலாளர், எழுத்தாளர் |
தேசியம் | உருசியர் |
குடியுரிமை | உருசியா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி நிலையம் | மாஸ்கோ அரசு பல்கலைகழகம் |
காலம் | 1982–2006 |
கருப்பொருள் | அரசியல், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | புட்டினின் உருசியா நூல் |
துணைவர் | அலெக்சாண்டர் பலிட்கோவ்ஸ்கி |
பிள்ளைகள் | வேரா இலியா |
செச்னியாவிலிருந்து அன்னா வெளியிட்ட அறிக்கைகள் அவருக்கு உலகலாவிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.[3] பலவித அச்சுறுத்தல்கள், வன்முறைகள் இவர் மீது பிரயோகிக்கப்பட்டாலும் செச்னிய போர் பற்றி அறிக்கைகளை கைவிடாமல் ஏழு வருடங்களாக தொடர்ந்து எழுதி வந்தார். உருசிய இராணுவத்தால் செச்னியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அன்னா போலி மரண தண்டனைக்கு ஆளானார். 2004 பெஸ்லான் பாடசாலை பணயகைதிகள் தொடர்பான நெருக்கடியைத் தீர்க்க உதவும் நோக்கில் உருசிய தலைநகர் மாஸ்கோவிலிருந்து ரொஸ்தோவ் நா தோனு எனும் நகரத்தினூடாக பெஸ்லானுக்கு செல்லும் வழியில் விமானத்தில் அன்னாவுக்கு நஞ்சூட்டப்பட்டது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் மாஸ்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்னா 1999க்கு பின் எழுதிய செச்னியா தொடர்பான கட்டுரைகள் பல தடவை நூலாக வெளிவந்துள்ளது. உருசியாவிலிருந்து வெளிவரும் அரசியல் தொடர்பான பிரசித்தி பெற்ற பத்திரிகையான நொவாயா கசெட்டாவின் மூலமே அன்னா எழுதிய கட்டுரைகள், ஆய்வுகளை வாசகர்கள் அணுகினர். 2000ம் ஆண்டு முதல் தனது ஆக்கங்களுக்காக பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள அன்னா 2004 ல் புட்டின்ஸ் ரஷ்யா (Putin's Russia: புட்டினின் உருசியா) எனும் நூலை வெளியிட்டார்.[4]
அக்டோபர் 7, 2006 அன்று அன்னா தனது அடுக்குமாடித் தொடர் குடியிருப்பிலிருந்த மின்னுயர்த்தியில் வைத்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.[5][6] 2014 ஜூன் மாதத்தில் ஐவர் இக்கொலைக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டார்கள். எனினும் யார் இக்கொலையை திட்டமிட்டார்கள் அல்லது பணம் வழங்கி கொல்ல செய்தார்கள் என்று இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை.[7]
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
தொகுஅன்னா பலிட்கோவ்ஸ்கயா 1958ம் ஆண்டு நியூயோர்க் நகரத்தில், உக்ரேனியரான ஸ்டீபன் மசேபாவிற்கு பிறந்தார். சில தகவல் மூலங்கள் இவர் உக்ரேனிலுள்ள செர்னிகோவில் பிறந்ததாக தெரிவிக்கின்றன.[8] உக்ரேனியர்களான இவரது பெற்றோர் ஐக்கிய நாடுகள் சபையின் சோவியத் தூதர்களாக செயற்பட்டிருந்தனர்.[9] சிறுபராயத்தின் அதிக நாட்களை மாஸ்கோவில் கழித்த அன்னா 1980ல் மாஸ்கோ அரசுப் பல்கலைகழகத்தில் ஊடகத்துறைக்கான பட்டம் பெற்றார். அங்கு அவருடன் ஒன்றாகக் கல்வி கற்ற அலெக்சாண்டர் பலிட்கோவ்ஸ்கியைத் திருமணம் முடித்தார். இவர்களுக்கு வேரா, இல்யா என இரு பிள்ளைகள் பிறந்தனர். அலெக்சாண்டர் விஜிட்டல் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் விளாடிஸ்லாவ் லிஸ்த்யேவுடன் தொகுத்து வழங்கியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். குழந்தை பருவ நாட்கள் தவிர வேறெப்போதும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போதும் அன்னா உருசியாவுக்கு வெளியே ஒரு சில வாரங்களுக்கு மேல் தங்கியிருக்கவிலை. அன்னா அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தாலும் தன்னுடைய உருசிய குடியுரிமையினைக் கைவிடவில்லை.
ஊடகத்துறை பணி
தொகுஅன்னா 1982 முதல் 1993 வரை இஸ்வெஸ்தியா இதழின் விபத்து பிரிவின் ஆசிரியராகவும் நிருபராகவும் செயற்பட்டார். 1994 முதல் 1999ம் ஆண்டு வரை ஊடகவியலாளர் யகோர் யகோவ்லெவ் தலைமை தாங்கிய ஒப்ஸ்கயா கசெட்டா பத்திரிகையின் உதவி ஆசிரியராக அன்னா பணி புரிந்தார். இப்பத்திரிகையில் சமூக பிரச்சினைகள் குறிப்பாக அகதிகளின் அவலநிலை தொடர்பான கட்டுரைகளை அடிக்கடி அன்னா எழுதி வந்தார். அதன் பின் 1999 முதல் 2006 வரை கடுமையான ஆய்வறிக்கைக்கு பெயர் பெற்ற நொவாயா கசெட்டாவில் பத்தி எழுத்தாளராக கடமையில் இணைந்தார். செச்னியா, உருசிய வாழ்க்கை, விளாதிமிர் புட்டினின் ஆட்சியின் கீழ் உருசியா போன்ற விடயங்களில் நூல்கள் எழுதியுள்ளார். புட்டின்ஸ் ருஷ்யா உள்ளிட்ட இந்நூல்கள் பல விருதுகளை வென்றுள்ளன.
செச்னியாவிலிருந்தான அறிக்கை
தொகுவெளி ஒளிதங்கள் | |
---|---|
Interview with Politkovskaya about her experiences covering war in Chechnya, hosted by Radio Free Europe/Radio Liberty, November 20, 2001, C-SPAN |
அன்னா தனது பணிகளுக்காக குறிப்பிடத்தகுந்த அளவு விருதுகளைப் பெற்றிருந்தார். விருது பெற்ற ஒவ்வொரு தருணங்களிலும் அவர் மேற்குலக நாட்டு அரசாங்கங்களை அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பொறுப்புணர்வோடு செயல்படுமாறு வற்புறுத்தினார். மேலும் செச்னிய போரில் பாதிக்கப்ட்டவர்களை அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்க் சென்று பார்வையிட்டதோடு இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளோடும் கலந்துரையாடியுள்ளார்.
அன்னா எழுதிய செச்னிய போர் மற்றும் அங்கு நிலை கொண்டிருந்த உருசிய இராணுவம் தொடர்பான பல கட்டுரைகளில் உருசிய இராணுவம், செச்னிய கலகக்காரர்கள் மற்றும் உருசியா ஆதரவளித்த அகமது கடிரோவ் மற்றும் அவரின் மகன் ரம்சான் கடிரோவ் நிருவாகம் ஆகியன பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் தெரிவித்திருந்தார். மேலும் வட காப்கஸ் பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் எழுதியிருந்தார். 1999ல் ஒருமுறை குரொசுனி நகரிலிருந்த முதியோர் இல்லமொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைப் ப்ற்றி எழுதியதோடு நிற்காமல் தனது பத்திரிகை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவ்வில்லத்திலிருந்த முதியோர்களை பத்திரமாக வெளியேற்ற அன்னா உதவி புரிந்தார்.செச்னிய பாடசாலை சிறுவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டமை தொடர்பான ஆய்வு அன்னாவின் இறுதி ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
விளாதிமிர் புட்டின் மீதான விமர்சனம்
தொகுஅன்னா மேற்குலக நாடுகளில் பிரபலமடைந்த பின் அவருக்கு புட்டின்ஸ் ரஷ்யா எனும் நூலை எழுத வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நூல் கேஜிபி அதிகாரியாகவிருந்த விளாதிமிர் புட்டின் உருசியாவின் அதிபரான பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளை அன்னாவின் பார்வையில் விவரிக்கிறது. அத்தோடு இரண்டாம் செச்னிய போரில் விளாதிமிர் புட்டினின் பங்கு தொடர்பான தகவல்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
உருசிய நாட்குறிப்பு ஒன்று
தொகுஅன்னா இறந்த பின் 2007 மே மாதத்தில் ரென்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்கள் அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட விடயங்களைக் கொண்டு எ ருஷ்யன் டைரி எனும் நூலை வெளியிட்டது. மொழிபெயர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அன்னா கொல்லப்பட்டதால் நூலின் இறுதி கட்ட வேலைகளை அவர் இல்லாமல் முடிக்க வேண்டியிருந்தது என மொழிபெயர்ப்பாளர் ஆர்ச் டெய்ட் நூலின் குறிப்பு பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.
''அன்னாவைக் கொன்றது யார் அவரின் கொலையின் பின்னால் இருந்தவர்கள் யார் என இன்னும் தெரியவில்லை'' என ஐக்கிய இராச்சிய தொலைக்காட்சி அலைவரிசை செனல்4 செய்தி வாசிப்பாளர் ஜொன் ஸ்னோ இந்நூலுக்கான அணிந்துரையில் தெரிவித்தார்.
பணயக் கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை முயற்சி
தொகு2002ம் ஆண்டில் மாஸ்கோ திரையரங்கத்தை பயங்கரவாதிகள் சிலர் தாக்கி பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். அப்பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அன்னா பெரிதும் பங்கெடுத்திருந்தார். 2004 செப்டம்பரில் பெஸ்லான் பாடசாலை பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உதவச் செல்லும் வழியில் நஞ்சூட்டப்பட்டு மீண்டும் மாஸ்கோ திரும்பினார்.
மரண அச்சுறுத்தல்
தொகுஅன்னா இறப்பின் பின் அவரது சக ஊழியர் வியாச்செஸ்லாவ் இஸ்மாயிலோவ் அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அன்னாவுக்கு குறைந்த பட்சம் ஒன்பது தடவைகளாவது உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
செச்னியாவில் தடுப்புகாவல்
தொகு2001ம் ஆண்டின் ஆரம்பத்தில் அன்னா தென்மலைப்பகுதி கிராமமான காத்துனியில் கூட்டாட்சி படைகள் நடத்திய திடீர் சோதனையினால் பாதிக்கப்பட்டவர்களை செவ்வி கண்டுவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது உருசிய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டார். தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட அன்னா அங்கு வசை, தாக்குதல், பாலியல் சீண்டல் போன்ற பலவித வன்முறைகளுக்கு ஆளானார். மூன்று மணி நேரம் தொடர்ந்த இவ்வன்முறையின் பின் துணைப்படை தலைமையதிகாரி அன்னாவிடம் வந்து அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிப்பதாகவும் துப்பாக்கியால் சுடப்பட்டு அத்தண்டனை நிறைவேற்றப்படுமென்றும் குறிப்பிட்டார். அதன் பின் முகாமுக்கு வெளியே கும்மிருட்டினுள் அழைத்து செல்லப்பட்ட அன்னா இருட்டான ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டார். திடீரென்று கண்ணைப் பிளக்கும் ஒளியுடன் பெருத்த அதிர்வுடன் ஏவுகணை ஒன்று அவ்விடத்திலிருந்து புறப்பட்டு சென்றது. பயத்தில் தரையில் படுத்துக் கொண்ட அன்னாவைப் பார்த்து அத்தலைமையதிகாரி இது ஒரு போலி மரண தண்டனை என சிரித்தார்.
காவல்துறை அதிகாரியிடமிருந்தான மிரட்டல்
தொகு2001ம் ஆண்டில் மின்னஞ்சலில் வந்த உயிர் அச்சுறுத்தலையடுத்து அன்னா வியன்னாவுக்கு சென்றார். அன்னா தனது 'காணாமல் போனவர்கள்' எனும் கட்டுரையில் காவல்துறை அலுவலர் செர்ஜி லபின் என்பவர் செச்னிய மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைகளை வெளிப்படுத்தியதால் அவ்வலுவலர் அன்னாவை பழிதீர்க்கும் நோக்குடன் இம்மின்னஞ்சலை அனுப்பியிருக்கலாமென கருதிய அன்னா உருசியாவை விட்டு வெளியேறினார். 2002ல் அவ்வலுவலர் இக்குற்றசாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அதற்கடுத்த வருடம் விடுவிக்கப்பட்டார். எனினும் செச்னிய மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைக்காக குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு 2005ல் அவ்வலுவலர் சிறை சென்றார். இவ் அலுவலரின் நண்பர் ஒருவர் அன்னாவின் மரணத்தோடு தொடர்புபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிற்து.
ரம்சான் கடிரோவுடனான சச்சரவு
தொகு2004ம் ஆண்டில் அப்போதைய செச்னிய பிரதமரான ரம்சான் கடிரோவுடன் நிகழ்ந்த கலந்துரையாடலின் போது ரம்சான் மற்றும் அவரின் உதவியாளரால் அன்னா ஒரு எதிரி என்றும் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டார். அன்னா கொல்லப்பட்ட அன்று நொவாயா கசெட்டா இதழின் பிரதம ஆசிரியர் திமித்ரி முரட்டோவ் அன்னா கடிரோவின் இராணுவம் செய்யும் அட்டூழியங்களைப் பற்றி மிக நீண்ட ஆக்கம் ஒன்றை எழுத திட்டமிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். அன்னாவின் இறுதி நேர்காணலில் 'கடிரோவ் சமகாலத்தைய செச்னிய ஸ்டாலின்' என குறிப்பிட்டிருந்தார்.
கொலை, புலன் விசாரணை
தொகுஅக்டோபர் 7 2006ல் அன்னா மாஸ்கோவிலிருக்கும் தன்னுடைய அடுக்குமாடித் தொடர்குடியிருப்பின் மின்னுயர்த்தியில் இறந்து கிடந்தார். அவரின் தோள்பகுதியில் ஒரு தடவையும் மார்புப் பகுதி மற்றும் தலைப்பகுதியில் இரு தடவையும் குண்டடிப்பட்டிருந்தது. அன்றைய தினம் விளாதிமிர் புட்டினின் பிறந்த தினம் என்பதோடு ரம்சான் கடிரோவின் 30வது பிறந்த தினம் முடிந்து மூன்றாவது நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இருவரில் ஒருவர் அல்லது இருவரும் அன்னாவின் கொலையில் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
அன்னாவின் இறுதிச் சடங்கு மாஸ்கோவின் புறநகர் பகுதியிலிருந்த துரொயெகுரோவ்ஸ்கோயே மயானத்தில் அக்டோபர் 10 2006 அன்று நடந்தது. அவரின் உடல் புதைக்கப்படுவதற்கு முன் 1000 பேர் அவரின் சவப்பெட்டி முன்னால் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு அன்னாவின் தோழர்கள், சக ஊழியர்கள், பிரபலங்கள், மற்றும் அன்னாவின் வாசகர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். உருசியாவின் உயரதிகாரிகள் எவரும் அவ் இறுதிச் சடங்கில் பங்கேற்றதாகத் தெரியவில்லை. அன்னா அவரின் தந்தையின் கல்லறைக்கருகில் புதைக்கப்பட்டார்.
ஆவணப்படங்கள்
தொகு- அன்னா, செவன் இயர்ஸ் ஒன் த ப்ரொன்ட்லைன், மாஷா நோவிகோவா 2008ல் இயக்கிய ஆவணப்படம்.78 நிமிடங்கள்.
- லெட்டர் டு அன்னா, சுவிஸ் இயக்குநர் எரிக் பர்க்ரொட் 2008ல் இயக்கிய ஆவணப்படம். அன்னாவின் வாழ்க்கை பற்றிய இப்படத்தில் அன்னாவின் கணவர் மற்றும் பிள்ளைகளின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.
- எ பிட்டர் டேஸ்ட் ஒப் பிரீடம், உருசிய இயக்குநர் மரினா கோல்டோவ்ஸ்கயா இயக்கி சுவீடன், அமெரிக்க, உருசிய தயாரிப்பில் வெளிவந்த ஆவணப்படம். இப்படம் 27வது வார்ஷோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்றது.
விருதுகள் மற்றும் கௌரவிப்புகள்
தொகு- 2001: உருசிய ஊடகவியலாளர் சங்கத்தின் தங்க எழுதுகோல் விருது
- 2001: பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமை ஊடகவியல் விருது
- 2002: நோர்வே எழுத்தாளர் சங்கத்தின் வெளிப்பாட்டுச் சுதந்திர விருது
- 2002: தணிக்கைச் சுட்டெண் விருது
- 2002: பென் அமெரிக்க மையத்தின் சுதந்திர எழுத்து விருது
- 2002; சர்வதேச பெண்கள் ஊடக நிறுவனத்தின் விருது
- 2003: ஹெர்மன் கெஸ்டென் பதக்கம்
- 2004: ஒலொப் பால்மே விருது
உசாத்துணைகள்
தொகு- ↑ அன்னா பலிட்கோவ்ஸ்கயா பரணிடப்பட்டது 2019-10-08 at the வந்தவழி இயந்திரம் பிரித்தானிய கலைக் களஞ்சியம்
- ↑ உருசிய சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கிய அன்னாவின் இறப்பு வேல்ட் பொலிடிக்ஸ் ரிவ்யூ இணையதளம்
- ↑ அன்னா பலிட்கோவ்ஸ்கயா த கார்டியன் இணையதளம்
- ↑ புட்டினின் உருசியா அன்னாவின் இறப்புக்குப் பின் நொவாயா கசெட்டா இணையதளத்தில் உருசிய மொழியில் வெளியிடப்பட்டது.
- ↑ ஊடகவியலாளர் கொலை எண்ணிக்கையில் ஐரோப்பாவை முந்துகிறது உருசியா த மாஸ்கோ டைம்ஸ் இணையதளம் ஜூன் 16 2009.
- ↑ அன்னா பலிட்கோவ்ஸ்கயா: புட்டின்ஸ் ருஷ்யா ஆங்கில பி.பீ.சி இணயதளம் அக்டோபர் 9 2006.
- ↑ ஊடகவியலாளர் கொலையில் சம்பந்தப்பட்ட ஐவருக்கு சிறை அன்றூ ரொத், த நியூயார்க் டைம்ஸ், ஜூன் 9 2014.
- ↑ அன்னா வாழ்க்கை வரலாறு வந்தவழி இயந்திரம் ஏப்ரல் 5 2015.
- ↑ அன்னா பலிட்ஸ்கோவ்ஸ்கயாவின் வரலாறு வாழ்க்கை வரலாறு கலைக் களஞ்சியம் இணையதளம்.