அம்பா இந்திய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருத்தி. இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இம்மூவருக்கும் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனும் தமது தம்பியுமான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

அம்பா சால்வ நாட்டு மன்னனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததாக பீஷ்மரிடம் தெரிவிக்கிறாள். அதை அறியும் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள்.சால்வனோ, பீஷ்மர் தன்னைத் தோற்கடித்து அவளைக் கூட்டிச் சென்றதனால் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார். மீண்டும் சால்வனிடம் வந்தாள். புறக்கணிக்கப்பட்டு மீண்டும் பீஷ்மரிடம் சென்றாள். பீஷ்மர் புறக்கணித்தார். இப்படி அலைந்ததில் ஆறு வருடங்கள் கழிந்ததில், தன் வாழ்வைப் பாழாக்கிய பீஷ்மரிடம் தீராப்பகை கொண்டாள்.

இமயமலைச் சாரல் சென்று தவம் செய்ததில் முருகக்கடவுள் ஒரு மாலையைக் கொடுத்தார். அதன் மூலம் பீஷ்மரைத் தண்டிக்கும் அவளது எண்ணம் நிறைவேறும் என்று கூறினார். அம்பை துருபத மகாராஜனை பீஷ்மர் மேல் படையெடுக்கத் தூண்டியும் அவன் இசையாததால், அம்மாலையை அங்கேயே வைத்து விட்டு சென்று மீண்டும் தவம் செய்தாள். சிவபெருமான் தோன்றி இன்னொரு பிறவியில் அவளே பீஷ்மரைப் பழிவாங்குவாள் என்று கூறினார். அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் துருபதனுக்கு மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சிகண்டி என்பதாகும். குருச்சேத்திரப் போரில் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.

வெளி இணைப்பு தொகு

உதவிநூல் தொகு

  • ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 106
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பா&oldid=3165243" இலிருந்து மீள்விக்கப்பட்டது