அம்பாரி (Howdah) என்பது மன்னர்கள் போன்றோர் யானை மீது அமர்ந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடிய மாடம் ஆகும். இதில் அமர்ந்தபடி மன்னர்கள் போர், வேட்டை, நகர்வலம் போன்றவற்றை மேற்கொள்வர். மன்னரின் அம்பாரியைச் சுமக்கும் யானையானது பட்டத்து யானை என்று அழைக்கப்படும். இந்த பட்டத்து யானையானது அதற்கான தகுதிகளுடன் கம்பீரமானதாக தேர்ந்தெடுக்கப்படும். அதற்கான தகுதிகளில் ஒன்றாக அது ஏழு முழம் அதாவது ஏறத்தாழப் பத்தரை அடி உயரம் கொண்டதாக இருக்கும் என்பதாக விக்கிரம சோழன் உலா,[1] கம்ப ராமாயணம்[2] போன்ற தமிழ் இலக்கியங்கள் வழியாக அறியவருகிறது. தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ள அம்பாரியானது மைசூர் தசராவின் போது மைசூர் மன்னர்கள் பயன்படுத்திய அம்பாரியாகும். மைசூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை அதன் மன்னர் தசரா விழாவின்போது அம்பாரியில் அமர்ந்து நகர்வலம் வந்து மக்களுக்கு காட்சியளித்து வந்தார். ஆனால் இந்திய ஒன்றியத்துடன் மைசூர் சமஸ்தானம் இணைக்கப்பட்டு அங்கு மன்னராட்சி ஒழிக்கப்பட்டப் பிறகு. அந்த அம்பாரியில் மைசூர் மன்னருக்கு பதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை ஏற்றி தசரா நாளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த மைசூர் அம்பாரியானது 750 கிலோ எடை கொண்டதாக உள்ளது.[3]

தசரா ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க அம்பாரி

மேற்கோள்கள் தொகு

  1. தோழியர் தோள்மேல் அயர்ந்தாள்; அத் தோழியரும்
    ஏழ்உயர் யானை எதிர்ஓடி...
    விக்கிரம சோழன் உலா, 653-54
  2. ஏழ்உயர் மதகளிற்று இறைவ, ஏகினை;
    வாழிய கரியவன், வறியன் கைஎன,
    கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பள்ளிப்படைப் படலம், 55
  3. "மைசூரூ தசரா விழா : விமர்சையாக நடத்தப்பட்ட "யானை அம்பாரி" ஊர்வலம்". செய்தி. தினத்தந்தி. 19 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாரி&oldid=3599688" இலிருந்து மீள்விக்கப்பட்டது