அயோத்தி தாசர்

சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர்

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.[2] 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.

அயோத்தி தாசர்
பண்டிதர் அயோத்திதாசர்
பிறப்புகாத்தவராயன்
(1845-05-20)20 மே 1845
சென்னை மாவட்டம்
இறப்பு5 மே 1914(1914-05-05) (அகவை 68) [1]
இனம்தமிழர்
குடியுரிமைபிரித்தானிய இந்தியா
பணிசித்த மருத்துவர், சமூக ஆய்வாளர்
அறியப்படுவதுதென்னிந்திய சாக்கிய பெளத்த இயக்கம்

பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிசு துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவத்திற்கு வந்ததுள்ளது.

வாழ்க்கை

தொகு

அயோத்திதாசர் 1845 மே 20 இல்[3] சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார்[2]. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா சார்ச்சு ஆரிண்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது.[4]

தனது தந்தையிடமும் காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.

சமயம் தொடர்பான கருத்துகளும் பணிகளும்

தொகு

தன்னுடைய 25 ஆம் வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவினார். அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், சானகி ராமன், இராசராம் என்றும், புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி என்றும் பெயர் சூட்டினார்.

அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குவாதம், பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாகவும் அது அமைந்தது.

பண்டிதருடைய காலம் (19 நூற்றாண்டின் பிற்பகுதி) இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலமாக இருந்தது. பிரம்ம சமாசம், ஆரிய சமாசம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தும் இந்து சமயத்துக்குள் திணிக்கப்பட்டது. 'யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர் இல்லையோ' அவர்களெல்லாம் இந்துக்கள் என 1861 முதல் 1891 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'இந்து' அடையாளத்திற்குள் வலிய திணிக்கப்பட்டார்கள். பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் 'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தவர். அவ்வாறு 'இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளம் ஒன்றைத் தேடத் துவங்கினார். தமிழகத்தில் பக்தி வடிவங்களில் 'தமிழ்ச் சைவ' மீட்டுருவாக்க முயற்சி நடந்தது. இதுவும் ஒரு வகையில் சாதியத்தை உள்வாங்கியவர்களின் முயற்சியாகவே இருந்தது. 'தமிழ் சைவம்' பிராமண எதிர்ப்புப் பேசினாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் பண்டிதர் தமிழ் சைவத்தோடு இணையவில்லை.

பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மகா சன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. சென்னை மகா சன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, மேற்படி 10 கோரிக்கையை சமர்ப்பித்து, விட்டுணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். இந்த அவமானபடுத்துதல் பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. நாம் யார்? இந்துக்களா ? சாதி இழிவுகள் ஏன் நம்மீது திணிக்கப்படுகிறது? என எண்ணி சுயத்தைத்தேடி நகர்ந்தார். வேதம், இந்து, பிராமணீயம், சடங்குவாதம்.. முதலானவற்றை கேள்விக்குட்படுத்தினார்.

ஆதி திராவிடர்களுக்கான செயற்பாடுகள்

தொகு

1870 களில் அயோத்தி தாசர் நீலமலையின் தோடர் மற்றும் பிற மலைவாழ் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தார். 1875இல் அத்வைதானந்த சபையை நிறுவினார். வெசிலியன் மிசன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக நடத்திய அருட்திரு டி சான்ரத்தினத்துடன் (Rev. John Rathinam) தொடர்பு ஏற்பட்டது. சான்ரத்தினம் நடத்திய 'திரவிடர் கழகம்' அதன் சார்பாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார்[3].

1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார்.[3] அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் திராவிட மாகாசன சபையை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்[3] இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் புத்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன.[5]

அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி. அதை இரண்டு பிரிவாக பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு, அது வங்காளின் காங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண காங்கிரசு என விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார். ஆக மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசபிகல் தொடர்பு, காங்கிரசு கட்சி, அனைத்திலுமிருந்து வேறுபட்டும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் சுய கருத்தியலை, சுய அரசியலைத் துவக்கினார்.

ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார்.

இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்:

இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நகரும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்.

1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரித்தானிய துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடு இணையற்ற மாமனிதர்.

பௌத்தத்திற்கு மாறல்

தொகு

அயோத்தி தாசர் தனது வழிநடப்பவர்களுடன் என்றி சுடீல் ஆல்காட்டைச் சந்தித்து பௌத்தத்திற்கு மாறும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.[3] தமிழகப் பறையர்கள் பௌத்த மதத்தினரே என்றும் அவர்களுக்குச் சொந்தமான தமிழகத்தை ஆரியர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அயோத்திதாசர் கருத்துத் தெரிவித்தார்.[2]:{{{3}}}:9–10 ஆல்காட்டின் உதவியுடன் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரிடம் தீட்சை பெற்றார்.[3] அங்கிருந்து திரும்பிய அயோத்திதாசர் சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியைத் தோற்றுவித்து, தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார். “இந்திய பௌத்த சங்கம்” எனவும் அறியப்பட்ட சாக்கிய பௌத்த சொசைட்டி 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[6][7]

தமிழன் இதழ்

தொகு
 
ஒரு பைசாத் தமிழன்-சூலை 1907 இதழ்
ஒரு பைசாத் தமிழன்

சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 சூன், 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது[5][8]

இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் அந்த இதழில் விளக்கியிருந்தார்:

"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.

இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடும் நேர்த்தியாகவும் இதழின் சின்னம் இருந்தது.

முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டது.

பெயர்மாற்றம்
 
தமிழன்-செப்டம்பர் 1908 இதழ்

ஓராண்டுக்குப் பிறகு, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' (26. ஆகத்து 1908 - பக் 2) என்ற விளக்கத்துடன் 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26 ஆகத்து 1908 முதல் வெளிவந்தது.

தமிழனில் வெளிவந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக மகளிர் பத்தி (Ladies column) தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம்பெற்றது. அடுத்து பொதுச் செய்தி (General news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கருநாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.

மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ‘யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ‘வேட பிராமண வேதாந்த விவரம்’, ‘சிரீ முருகக் கடவுள் வரலாறு’, ‘விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பீடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீண்டாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன.

திராவிட அரசியலின் முன்னோடி

தொகு

திராவிட மகாசன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாசன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.[9][10][11]

படைப்புகள்

தொகு

பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

க. அயோத்தி தாசர் நூல்கள்

  1. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
  2. அம்பிகையம்மன் சரித்திரம்
  3. அரிச்சந்திரன் பொய்கள்
  4. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
  5. இந்திரர் தேச சரித்திரம்
  6. இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
  7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
  8. சாக்கிய முனிவரலாறு
  9. திருக்குறள் கடவுள் வாழ்த்து
  10. திருவள்ளுவர் வரலாறு
  11. நந்தன் சரித்திர தந்திரம்
  12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை
  13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
  14. புத்த மார்க்க வினா விடை
  15. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
  16. முருக கடவுள் வரலாறு
  17. மோசோயவர்களின் மார்க்கம்
  18. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  19. விபூதி ஆராய்ச்சி
  20. விவாஹ விளக்கம்
  21. வேஷ பிராமண வேதாந்த விவரம்
  22. பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
  23. வேஷபிராமண வேதாந்த விவரம்
  24. புத்தரது ஆதிவேதம்

தொடங்கி நடத்திய இதழ்கள்

தொகு
  • திராவிடப்பாண்டியன் (1885)

(ரெவரென்ட் சான் ரத்தினத்துடன் இணைந்து)

  • ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907–1914)

இவற்றையும் பார்க்க

தொகு

சான்றாவணங்கள்

தொகு
  1. http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-ma16-2014/27382-2014-11-21-05-39-31
  2. 2.0 2.1 2.2 Bergunder, Michael (2004). "Contested Past: Anti-Brahmanical and Hindu nationalist reconstructions of Indian prehistory". Historiographia Linguistica 31 (1). http://theologie.uni-hd.de/rm/online-artikel/bergunder-2004-contested-past.pdf. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Ravikumar (28 September 2005). "Iyothee Thass and the Politics of Naming". The Sunday Pioneer. http://www.countercurrents.org/dalit-ravikumar280905.htm. பார்த்த நாள்: 9 September 2008. 
  4. "Death centenary of a Dravidian leader". The Hindu (Coimbatore, India). 13 November 2014. http://www.thehindu.com/news/cities/Coimbatore/death-centenary-of-a-dravidian-leader/article6594092.ece. 
  5. 5.0 5.1 "Taking the Dhamma to the Dalits". The Sunday Times (Sri Lanka). 14 September 2014. http://www.sundaytimes.lk/140914/plus/taking-the-dhamma-to-the-dalits-117240.html. 
  6. Manikandan, K. (1 September 2005). "National Institute of Siddha a milestone in health care". The Hindu: Friday Review இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071107022440/http://www.hindu.com/2005/09/01/stories/2005090114280700.htm. பார்த்த நாள்: 12 September 2008. 
  7. M. Lynch, Owen (2004). Reconstructing the World: B. R. Ambedkar and Buddhism in India. Oxford University Press. p. 316.
  8. "5th May in Dalit History – Death Anniversary of Iyothee Thass". Dr. B. R. Ambedkar's Caravan. 5 மே 2015. https://drambedkarbooks.com/2015/05/05/5th-may-in-dalit-history-death-anniversary-of-iyothee-thass-great-social-reformer-and-buddhist-scholar/. 
  9. http://books.google.co.in/books?id=rSF8b5hbyP0C&pg=PT131&dq=Iyothee+Thass+pioneer+of+Dravidian+movement&hl=en&sa=X&ei=DvcFVOHDKJC6uASB-YL4Aw&ved=0CBsQ6AEwAA#v=onepage&q=Iyothee%20Thass%20pioneer%20of%20Dravidian%20movement&f=false
  10. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/remembering-the-precursor-of-dravidian-movement/article3438425.ece
  11. http://www.countercurrents.org/dalit-ravikumar280905.htm

மேற்கோள் கட்டுரைகள்/நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_தாசர்&oldid=4059307" இலிருந்து மீள்விக்கப்பட்டது